Saturday, February 6, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகை: இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?


நான் ஒரு இந்து, முஸ்லிம், கிருத்துவன் ஏன் யூதனும்கூட என்று சொன்ன காந்தி கடைசிவரை இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர். "ஹே.. ராம்.. ஹே.. ராம்..!” - என்று தான் நம்பிய கொள்கையை உச்சரித்தவாறே உயிர் நீத்தவர். அவர் சொன்ன ஒற்றைச் சொற்றொடரை மட்டும் தமது கட்டுரையில் மேற்கோளாய் இழையோடவிடும் சகோதரர் சமஸ் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை ஆழ்ந்து ஊடுருவ மறுக்கிறார். 

சங்பரிவார்கள் போல, முஸ்லிம்கள் இந்திய சமூக அமைப்பில் யாரையும் ஆதிக்கம் செலுத்த முயலவில்லை. மேலும், நடந்துமுடிந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடுகூட இஸ்லாமிய சமூக உள்ளீட்டு கட்டுமான மராமத்து பணிகளுக்கான ஒரு பிரயத்தனம். அது ஒரு அறிவு சம்பந்தமான விவாதகளம். ஒரு சீர்த்திருத்தத்துக்கான வழிமுறை. அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் சமூகத்திற்குள் கருத்துவேறுபாடுகள் உண்டு என்பது வேறு விஷயம். 

அடுத்ததாக, ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம், மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது.. ஒரே அரசு - என்றும் சமஸ் குறிப்பிடுகிறார். அந்தரங்கமானது இதில் ஒன்றுமில்லை... சர்வதேச அளவில் ஒவ்வொரு நாளும், தனித்தும், கூட்டாகவும் முஸ்லிம் சமூகம், “வணக்கத்துக்குரியது பரம்பொருள் அன்றி வேறில்லை! முஹம்மது நபிகள் அப்பரம்பொருளின் இறுதித்தூதர் ஆவார்!” - என்று முழங்கும் பாங்கோசையின் ஒரு பகுதி பிரகடனமே அது. 

அந்த பாங்கோசையில், உட்பட்டிருக்கும் “இலாஹ்” என்ற சொல் பரம்பொருளான இறைவன் வெறும் வணக்கத்துக்குரியவன் மட்டும் அல்ல. சட்டங்களும் அருளியவன் என்பதும் அடங்கும். முழு பிரபஞ்சமும் இறைவனின் இந்த சட்டங்களின் அடிப்படையில் சீராக இயங்கிவருவதுபோல, மனிதனும் இந்த சட்டங்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற வாக்குறுதியைதான் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை ஒப்புக்கொள்ளும்போது முன்மொழிகின்றான். மனித சட்டங்களின் குளறுபடிகளிலிருந்து இறைச்சட்டங்களின் பக்கம் திரும்புவது ஒன்றுதான் மனிதர்களுக்கான ஈடேற்றம் என்று பகிங்கரமாக முன்மொழிகிறது இஸ்லாம். 

ஷிர்க் என்பது வெறும் வணக்க வழிமுறைகளில் செய்யும் இணைவைப்பு மட்டுமல்ல. அரசியல் அமைப்பில் செய்யும் இணைவைப்பும் உட்படுத்தியது.

முதலாளித்துவவாதி தன் கொள்கை, கோட்பாடுகளை முன்வைத்து முயல்வதுபோல, ஒரு பொதுவுடமைவாதி கம்யூனிஸ சித்தாந்தத்தை மேலோங்க செய்ய முன்வருவதுபோல, ஒரு முஸ்லிமும் இறைச்சட்டங்களை முன்நிறுத்தி அதற்கான அமைப்பை உருவாக்குவதில் என்ன ரகசியம் வேண்டி கிடக்கிறது சகோதரர் சமஸ்?

அதேபோல, வஹாபியிஸம் என்ற சொல்லாக்கத்திற்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மேற்கத்தியவாதிகளின் திட்டமிட்ட சொல்லுருவாக்கம். சமூகத்திற்குள் சீர்த்திருத்தம் என்பது அவசியமாயினும், தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே அனுதினமும் போராடிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பில் அது மெல்ல,  மெல்லதான் நடைபெறுவதற்கு சாத்தியமாகும். 

ஆக, சமஸ் இஸ்லாத்தை புரிந்துகொள்ள இன்னும் முன்னெடுக்க வேண்டும். 

சகோதரர் சமஸ்ஸின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் பொதுவெளியில் அறிவுஜீவிகள் எப்படியெல்லாம் கருத்தாக்கம் செய்கிறார்கள் என்பதற்காக 04.02.2016 அன்று தி இந்துவில் வெளியான அவரது கட்டுரையை இங்கே மறுபிரசுரம் செய்கிறேன். 

ஆனால், அழகிய பதில் அளிக்க வேண்டிய முஸ்லிம் சமூகமோ உருப்படியாய் ஒரு கருத்தையும் (தி இந்து இணைய இதழில்) முன்வைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இனி சமஸ் சொல்வதை கேளுங்கள்...  - இக்வான் அமீர்.

““““““““““““““““

திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?

சென்னை வெள்ள நாட்களில் ‘தி இந்து’வில் வெளியான ஒரு படம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும் பத்திரிகையாளருமான முஹம்மது அமீன், “காஷ்மீர் வரை இந்தப் படம் போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்!” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம்தான் காஷ்மீரிலும் டெல்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!”

வஹாபிஸ அச்சுறுத்தல்

சர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சுறுத்தல் வஹாபியிஸம்.

1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது. அதீதக் கட்டுப்பாடுகளுக்குப் பேர் போன வஹாபி, ஏக இறை தத்துவத்தின் பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கியவர். அதே காலகட்டத்தைச் சேர்ந்தவரான முஹம்மது இபின் சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர். இவர்கள் இருவரும் சேர்ந்த பின்னர், வஹாபியிஸம் வேகமாகப் பரப்பப்பட்டது. அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணாகவும் நின்றது.

மிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள், தொன்மையான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவுதி கலாச்சாரத்தையே ‘தவ்ஹீது’ முன்னிறுத்துகிறது.

சவுதி அரேபிய அரச வம்சத்தை 1932-ல் நிறுவியவரான அப்துல் அஜீஸ் இபின் சவுத், வஹாபியிஸத்தை வரித்துக்கொண்டவர். உலகம் முழுக்க இன்றைக்கு வஹாபியிஸத்தைப் பரப்பியதில் அவர் வழிவந்தவர்களால் ஆளப்படும் சவுதி அரசுக்கும் பெட்ரோலிய வளம் தந்த பணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் பேச்சு, எழுத்துக்கு எதிராக சவுதி அரசு ஏன் கடும் கட்டுப்பாடுகளையும் தணிக்கைகளையும் தண்டனைகளையும் விதிக்கிறது? அரசை சின்ன அளவில் விமர்சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண்டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது? சவுதியில், இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்; ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரே நாளில் 47 பேர் பொதுவெளியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன மனித உரிமை அமைப்புகள். ஒரு அரச நிர்வாகம் நடத்தும் சவுதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, தாலிபன், ஐஎஸ் ஆகியவற்றின் தண்டனைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின்றன? இதற்குப் பின்னணியில் வஹாபியிஸம் உண்டு!

வெற்றிடம் உருவாக்கும் செல்வாக்கு

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிடும்போது, கால் நூற்றாண்டுக்கு முன்புவரைகூட வஹாபியிஸம் பெரிய செல்வாக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், ஈராக், ஆப்கன் போர்களைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் மீது தொடரும் ஏகாதிபத்திய நாடுகளின் தொடர் தாக்குதல் வஹாபியிஸத்துக்குப் புது கவனத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. சர்வதேச அளவில், பொதுச்சமூகத்தின் புறக்கணிப்பையும் பாகுபாட்டையும் எதிர்கொள்ளும் முஸ்லிம் இளைய தலைமுறையினர், அரசியல் வெற்றிடத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் எல்லாம் வஹாபியிஸம் முன்னிறுத்தும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்கின்றனர். வஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இரு முழக்கங்கள் - ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது - ஒரே அரசு!

இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக் கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிக மயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப் பிரயோகத்துக்கோ இடமே இல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன் வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எது ஒன்றையும் குறுகிய மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக்கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.

இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பலம்

இஸ்லாம் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப வளர்ந்ததுபோல, இங்கே இந்தியாவுக்கே உரிய பன்மைத்துவக் கூறுகளோடு வளர்ந்தது. இந்தப் பன்மைத்துவக் கலாச்சாரத்தில் தமிழக முஸ்லிம்கள் கூடுதல் செழுமையானவர்கள். இந்தியாவில் இஸ்லாமின் தோற்றமும் வளர்ச்சியும் தென் முனைக் கடலோரத்திலிருந்தே தொடங்கியது என்பதோடு, ஏனைய பகுதிகளைப் போல படையெடுப்புகள் மூலமாக அல்லாமல், வாணிப - மண உறவு வாயிலாகவும் சூஃபி ஞானிகள் மூலமாகவும் இங்கு இஸ்லாம் பரவியது என்பதும் இதற்கான முக்கியமான காரணங்களில் அடிப்படையானது. இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.

காவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதா தேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணு இடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒரு பிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.

தமிழகத்தில் பல கோயில்கள் - மசூதிகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட்களில் முதல் மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதியுலா நிகழ்வில் இந்துக்களும் பங்குதாரர்கள். தர்காக்கள் வழிபாட்டுக்குரிய இடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களை இயல்பாக ஒன்று சேர்க்கும் இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்; சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.

இந்துத்துவ அமைப்புகள் பல நீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதே காரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்தி என்ன?

பிளவுகள் குடும்பத்தில் தொடங்குகின்றன

அதிர்ஷ்டவசமாக இந்துத்துவத்தை எப்படி பெரும்பான்மை இந்துக்கள் ஏற்கவில்லையோ, அவ்வாறே வஹாபியிஸத்தைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனினும், மாறும் சூழல்கள் இன்றைக்குக் குடும்பங்களில் அப்பா-மகன் உறவைப் பிளக்கும் அளவுக்கு உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். நேற்று ஒரு முஸ்லிம் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார். “தெருவில் பொங்கல் விழா நடத்தினார்கள். கூப்பிட்டிருந்தார்கள் என்று போனேன். போன இடத்தில் பொங்கல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். மறுப்பது நம் கலாச்சாரம் அல்ல. சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்ததும், ‘காபிர்கள் படைத்த பொங்கலைச் சாப்பிட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு உண்மையான முஸ்லிமா?’ என்று கேட்டு ஏசுகிறான் பிள்ளை. நான் முஸ்லிம் மட்டும்தானா, இந்தச் சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா?”

எனக்கு ஆதம் தீன் கட்டுரை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளரான இவர், தன்னுடைய இளம் வயதில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாதக் குழு ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டவர். நாளடைவில் அதன் குரூர முகத்தைப் பார்த்தவர் அதிலிருந்து வெளியேறி, இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எப்படி இளைஞர்களை உள்ளே இழுக்கின்றன என்பதைத் தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் சொல்லியிருந்தார்.

“பல இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத ஜனநாயகத்தையும் சகல உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும் தந்திருந்த நாடு பிரிட்டன். என்னுடைய இளம் வயதில் நான் பிரிட்டனில் எந்தக் கசப்பையும் உணர்ந்ததில்லை. உயர் கல்வி படிக்கச் சென்றபோது, ‘நீ ஒரு முஸ்லிம். ஆனால், ஏன் அந்த அடையாளத்தையே உணராதவனாக இருக்கிறாய்?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள் சில நண்பர்கள். அதுவரை நானோ, என் குடும்பமோ அறிந்திராத வகையில் இஸ்லாத்தை அவர்கள் புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். கூடவே, வெவ்வேறு நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னுடைய பிரச்சினைகளாக மாற்றினார்கள். சீக்கிரமே என் வாழ்க்கை முறை மாறியது.

ஒருகட்டத்தில் என்னுடைய பழைய நண்பர்கள், பெண்கள் எல்லோருடனான பழக்கத்தையும் நிறுத்திவிட்டேன். என் குடும்பத்தினரே நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று நினைத்தேன். பெற்றோரையே இழிவாகப் பார்த்தேன். பன்மைக் கலாச்சாரம், நெகிழ்வுத்தன்மை எல்லாம் இழிவாகத் தெரிந்தன. சொல்லப்போனால், என் புதிய நண்பர்கள் கொடுத்த கண்களாலேயே ஒட்டுமொத்த இந்த உலகத்தையும் பார்த்தேன். தீவிர அமெரிக்க எதிர்ப்பாளன் ஆனேன். கடைசியில், ‘பிரிட்டிஷ் முஸ்லிம்’ என்ற நிலையிலிருந்து, ‘பிரிட்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம்’ என்ற நிலைக்கு மாறினேன். இஸ்லாமிய உலகுக்கு நான் நெருக்கமானவன் என்று நினைத்துக்கொண்டு, பிரிட்டிஷ் கலாச்சாரம், நடைமுறைகளிலிருந்து விலகினேன். ஆனால், மதத்தைத் தீவிரமாகப் புகட்டியவர்கள், எதிர்க் கேள்வி கேட்டால் ஆவேசமானார்கள். ‘நீ மார்க்கத்தைவிட்டு விலகுகிறாய்’ என்றார்கள்.

சுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ளும் இஸ்லாமே எனக்குப் பிடித்தமானது. எனக்கும் கடவுளுக்கும் நடுவே இவர்கள் யார் என்ற கேள்வி ஒரு நாள் எழுந்தது. வெளியேறிவிட்டேன். இன்றைய இளம் முஸ்லிம்கள் பலர் மத அடிப்படைவாதத்தை நோக்கி நகர அவர்களுடைய பொருளாதார, சமூகப் பின்னடைவுகளே அடிப்படைக் காரணம். அவர்களுக்கு ஆதரவான குரல் ஒரு திசையில் ஒலிக்கும்போது, அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி யோசிக்காமலேயே அந்தத் திசையில் அவர்கள் நகருகிறார்கள். இந்தக் கோபப் பயணம் கடைசியில் பயங்கரவாதத்தில் கொண்டுசேர்த்துவிடும்.”

புனிதம் எனும் கொடுஞ்சொல்!

உலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 1,050 இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சபை பொதுச் செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப் பார்த்துதான் சர்வதேச முஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்க வேண்டும்.

இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக் கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்து மதத்தின் தூய்மைவாதப் புனிதம்தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.

அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்துகொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனித போதனை’ வரலாற்றுக் கொடுமை என்றால், ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளின் ‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு சமூகம் அத்தனை சீக்கிரம் எழ முடியாத வெறுப்புப் பள்ளத்தில் தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.

இந்தியாவில் சிறுபான்மை அடிப்படைவாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும் பிழை பெரும்பான்மை அடிப்படைவாதிகளுக்கான நியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒரு கொடுமையை அவர்கள் இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!

நன்றி:  தி இந்து - தமிழ், 04.02.2016. 

1 comment:

  1. as Salamu alaykum Bhaisaab....

    மிக விஸ்தாரமான கட்டுரை. சரியான போக்கில் பயணித்து, தகுந்த இடத்தில் அறிவுரைத்துள்ளீர்கள். இதே ‘அந்தரங்கமான’ கருத்தைப் பற்றி நான் எனது கட்டுரையிலும் (http://bit.ly/Reply2Samas) எழுத நினைத்து, இறுதியில் மறந்து போனேன். தாங்கள் அதைத் தொட்டு எழுதியிருக்கும் கருத்துக்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.

    ரியாக்ட் செய்யும் அவசரத்தில் இருக்கும் இந்த உம்மத், ரெஸ்பான்ஸ் செய்யும் மனநிலைக்கு எப்பொழுது வருகின்றதோ அன்றைக்குத்தான் நமக்கு நேரே நீண்டிருக்கும் பேனாவுக்கும் வாளுக்கும் முடிவு வரும் இன் ஷா அல்லாஹ்.

    ReplyDelete