Friday, July 31, 2015

வைகறை நினைவுகள்: 8, யாகூப் மேமன் தண்டனை: கூனி குறுகிப் போகிறேன் நான்!
90களில் ரமளான் பெருநாளை ஒட்டி நடத்தப்பட்ட ஒரு சமய நல்லிணக்கக் கூட்டத்தில் பிரமுகர் ஒருவர் தனது தாய்நாட்டை கொச்சைப்படுத்திய தற்காக எனது மகள் மர்யம் கதறி அழுத சம்பவத்தை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.** இதைத் தொடர்ந்து ஜுன் 6, 2002 மாலை 7.15 மணியளவில், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் பீட்டர் அல்போன்ஸ், பிரபல நாவலாசிரியர் பிரபஞ்சன், மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே.வசந்தி தேவி, கலைஞர் சாருஹாஸன், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி, மனித உரிமைப் போராளி பா.ரவிக்குமார், மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் இவர்களுடன் நானும் பேச அழைக்கப்பட்டிருந்தேன். 

அது குஜராத் இனப் படுகொலை குறித்து காலச்சுவடு இலக்கிய இதழ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கமாகும். 

அதன்பிறகு, இந்த கருத்தரங்கம் சம்பந்தமாக மதுரையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சிந்தனை சரம் மாத இதழ் ‘நிகழ்வு’ என்னும் பகுதியில் பிரசுரித்திருந்தது. குஜராத் வன்முறை, காலச்சுவடு கருத்தரங்கின் வழியே ஒரு பார்வையும், பல கவலைகளும் என்னும் தலைப்பில் பதிவு செய்திருந்தது. அதை மரிய நேசன் எழுதியிருந்தார்.


அவர் எனது பேச்சை இப்படி குறிப்பிட்டிருந்தார்: “இக்வான் அமீர் கையிலே பல குறிப்புகள். இதுரைவயில் மேடையில் பேசியவர்கள் அனைவரும் வெடித்துக் கொந்தளித்தபோது, இக்வான் அமீரின் குரல் சாந்தமாக ஒலிக்க ஆரம்பித்தது. அது பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலை, நகலெடுத்துக் கொண்டதுபோல ஆவேசம் அற்றிருந்தது. குஜராத்தில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி, சமய நல்லிணக்கத்தைப் பேசிய முஸ்லிம்கள் எல்லாம் கூட ஓட.. ஓட.. விரட்டியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை அவர் விவரித்தார். இரண்டு கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் கிராமங்களின் பெயர்களை இராமாயண, மகாபாரத எனச் சூட்டி மத நல்லிணக்கத்துக்குச் சாட்சியா வாழ்ந்ததையும், அவ்வாறு வாழ்ந்த மக்களுமே இந்து மத வெறியர்களால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதையும் கூறிய அமீர், தற்போது தாங்கள் அடைக்கலமாகியுள்ள முகாம்களின் பெயர்களையும் இராமாயண, மகாபாரத என்று சூட்டியிருப்பதாகச் சொன்னார்.

தன் மகள் மர்யம் பத்து வயது சிறுமியாக இருந்தபோது, இந்தியத் தேச பக்தியைக் கேலி செய்த ஒருவர் மேடையில் பேசிய போது, “இவரையெல்லாம் யார் பேச அனுமதித்தார்கள்?” – எனச் சீறி சினந்ததாகவும், அதே மகள் இன்றையக் கல்லூரி மாணவி என்ற ஸ்தானத்தில் இந்திய அரசியல் – மதச்சார்பின்மை குறித்த பலவிதமான கேள்விகளும், கவலைகளும், குழப்பங்களும் நிறைந்த மனநிலையைக் கொண்டிருப்பதாகவும் கூறினார் இக்வான் அமீர்.

இன்றையக் கூட்டத்திற்கு தனது மகளை அழைத்து வந்திருப்பதாகவும், இங்கே கூடியிருப்போரைச் சுட்டிக்காட்டி, “இவர்கள் குறைவாக இருந்தாலும், இருக்கின்ற ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம்!” – என்று தன் மகளிடம் சொன்னதாக அவர் தெரிவித்தபோது, அந்த அரங்கினை நிறைத்தன கைத்தட்டல்கள். (ஆதாரம்: சிந்தனை சரம் ஜுலை 2002 – பக். 75)


இந்த சம்பவங்கள் நடந்து சுமார் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அதே மர்யம் திருமணமாகி குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டாள். இந்த நாடும், இந்த நாட்டு மக்கள் குறித்தும், இங்கு பின்பற்றப்பட்டுவரும் நீதி, நியமங்கள் குறித்தும் அவளது மன நிலையிலும் ஏக மாற்றங்கள். அவமானங்கள். நிராசைகள் என்று ஏகப்பட்ட பின்னல்களாய் தடுமாற்றங்கள்.

25 ஆண்டுகளுக்கு முன் சிறுவர், சிறுமிகளாக இருந்து இன்று இளம் வயதைக் கடந்து கொண்டிருக்கும் இத்தகைய நபர்களால்தான் சூழப்பட்டிருக்கிறது இந்திய நாட்டின் எதிர்காலம். 

·         அஜ்மல் கசாப்
·         அப்சல் குரு
·         யாகூப் மேமன்

நமது நாட்டு நீதி அமைப்புகளால் பயங்கரவாதிகள் என்று தீர்ப்பு எழுதி அரசு ரீதியாக கொல்லப்பட்டவர்கள்.

இதில், மார்ச் 12, 1993-ல் நடந்த மும்பை குண்டுவெடிப்புகள் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மகாராட்டிராவின், நாக்பூர் மத்திய சிறைச்சாலையில், அடைக்கப்பட்டிருந்தவர் யாகூப் மேமன். ‘தான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாகவும், ஏதாவது அற்புதம் நடந்தாலேயொழிய தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது!’ - என்றும் மரண மேடைக்கு செல்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சிறைக்காவலர் ஒருவரிடம் சொன்னதாக மிட்-டே நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 

பத்திரிகையாளர் ரானா அய்யூப் தெரிவிக்கும்போது, “சிறைக்கு வெளியே குழுமியிருந்த கூட்டத்தினர், உற்சாக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததையும், “பாரத்.. மாதா.. கீ.. ஜெய்!” – என்று முழக்கமிட்டுக் கொண்டு ஷெல்பிக்கள் எடுத்துக் கொண்டிருந்ததையும் பதிவு செய்கிறார்.

மும்பை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஆளுநர், குடியரசு தலைவர் என்று பல்வேறு மேல்முறையீடுகளுக்குப் பின்னும், 53 வயதான யாகூப் மேமன் தனது 54வது பிறந்தநாளில், வியாழன் அன்று சட்ட ரீதியாக கொல்லப்பட்டார்.

வியாழன் அன்று அதிகாலை 6.35 மணியளவில் மேமனின் மரணத்தை மருத்துவக்குழு உறுதி செய்தது. அவரை அடக்கம் செய்வதற்கு சிறைவளாகத்திலேயே இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. கடைசியில் உறவினர்களிடம் ஏராளமான நிபந்தனைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாகூப் மேமனின் சட்ட ரீதியான அரசு கொலைப்படலம் அனைத்தும் ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் நடந்தது. அது சம்பந்தமான ஒளிபதிவும் செய்யப்பட்டது. 

சரி. இந்த நாட்டின் சட்டங்கள் அனைவருக்கும் சமம் என்றால்,

  • பாபரி மசூதியை இடித்த பயங்கரவாதிகளுக்கு தண்டனை எப்போது?
  • பாபரி மசூதி இடிக்கப்பட்டதை ஒட்டி மும்பையில் கொடூரமான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்களே இந்துத்துவ பயங்கரவாதிகள் அவர்களுக்கான தூக்குத் தண்டனை எப்போது?
  • நீதியரசர் கிருஷ்ணா கமிஷன் மும்பைக் கலவரத்துக்குக் காரணமானவர்கள் யார் யார் என்று பெயர் குறிப்பிட்டே அறிக்கை தந்தாரே அந்த அறிக்கை என்னவானது?
  • மாலேகவுன் குண்டுவெடிப்புகள், சம்ஜவுத் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுக்கு எப்போது மரண தண்டனை? இந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி வழங்கப்போவது எப்போது?
  • ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பயங்கரவாத கயவர்களுக்கு எப்போது மரண தண்டனை?
  • மனித இனம் பதறும் வண்ணம் உயிரோடு எரித்தும், கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்தும், கற்பழித்தும் ஆயிரக் கணக்கில் குவியல் குவியலாய் குஜராத்தில் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைதான் என்ன?
  • இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்களுக்கு காரணமானவர்களுக்கு எப்போது தூக்குத்தண்டனை?
  • ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரியைச் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை தரப்போவது எப்போது?
  • காஞ்சிபுரம் கோவிலிலேயே சங்கரராமன் என்பவர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டாரே, அந்தக் கொலையாளிகளுக்கு எப்போது மரண தண்டனை?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஒரு கால் நூற்றாண்டு கடந்து இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதும், அது ஒரு சார்பாய் பின்பற்றிவரும் நீதி, நியமங்கள் மீதும் அவநம்பிக்கையில் உழலும், ஆயிரக்கணக்கான இளைஞர், இளைஞிகளுக்கு சமாதானம் சொல்லப்பபோவது யார்? மேற்கண்ட இந்த கேள்விகளுக்கு எல்லாம் சொல்லப்போகும் பதில்கள்தான் என்ன? நமது இருசார்பு நடைமுறைகளால் ஏற்னவே ஏராளமான சமூக பிரச்னைகளின் தீவிரத்தன்மை பல்வேறு வடிவங்களால் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும்போது, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான நாம் கடைப்பிடிக்கும் சம நீதியற்ற போக்கின் எதிர்வினைகள் மேலெழும்போது அவை இன்னும் பெருத்த சீர்குலைவுகளை நாட்டில் ஏற்படுத்தாதா?

இன்னும் எத்தனை நாளைக்கு வெள்ளையர் அடிமைத்தன சட்டங்களை நாம் சிலுவைகளாய் சுமப்பது?

தண்ணீர் என்ற அத்யாவசிய தேவைக்கு மக்கள் போராடினாலும்கூட அவர்களின் மண்டைகளை உடைத்தெறியும் காவல்துறை சட்டங்களை எப்போது தூக்கி வீசப் போகிறோம்? 

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நான் அவமானத்தால் தலை குனிந்து போகிறேன்? "பேய்கள் அரசாளும் போது சாத்திரங்கள் பிணந்தின்னத்தானே வேண்டும்" – என்று மௌனமாய் குமைகிறேன். 

நீங்கள்? 

இறைவன் நாடினால், வைகறை நினைவுகள் தொடரும்.

** இணைப்பு:  https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/503424359810598 
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html

   

Thursday, July 30, 2015

வைகறை நினைவுகள் – 7, சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை!ஏப்ரல் 10, 2012 அன்று மாலை சுமார் 3.30 மணியளவில் நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் இருந்து என்னால் வேகமாக நடக்க முடியாமல் போனது. அதனால், என் நடையைப் போலவே, நினைவுகளையும் வேக வேகமாக கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறேன்.

சாதாரணமான எடையல்ல; ஒரு அரை டன் எடை!

இன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.

“சுமக்க முடியாத பாரத்தை இறைவன் யார் மீதும் சுமத்துவதில்லை!” - என்ற திருக்குர்ஆனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

ஒவ்வொரு மனிதனின் சகிப்பின் எல்லையை அறிந்தவன் அந்த படைப்பாளன் அல்லவா? அதனால், இந்த எளியவனையும் அந்த விபத்திலிருந்து இந்த சிறு நடைமாற்றத்துடன் காப்பாற்றிவிட்டான். இல்லையென்றால், ஒரு காலை இழந்து மாற்றுத் திறனாளிகளின் பட்டியலில் இடம் பெற்றிருப்பேன்.

நடந்தது இதுதான்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்துவந்த காலம் அது.

பகல் பணி (Day Shift) இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும்.

இரவு பணியாளர்களுக்கு (Night Shift) பணிகளை ஒப்படைத்துவிட்டு அதன் பிறகு ஒரு முக்கிய வேலையை முடித்தாக வேண்டும். லட்சக் கணக்கான மதிப்புள்ள சரக்குகளை வெளியில் அனுப்புவதற்காக அதற்கான டாக்குமெண்டுகளை தயாரிக்கும் பணி அது.

அடுத்த நாள் விடுமுறை நாள். சரக்கு வாகனம் தங்கிவிட்டால் எதிர்முனையில், சரக்கு சேர்வதில் தாமதமாவதுடன், டிரான்போர்ட்டருக்கும் வாகன வாடகையில், நஷ்டமாகிவிடும்.

ஏற்கனவே போன தொடரின் பின் இணைப்பில் குறிப்பிட்டது போல நிறுவனம், ERP (Enterprise resource planning) என்ற வணிக மேலாண்மை மென்பொருளிலிருந்து SAP-க்கு (Systems, Applications & Products in Data Processing) என்ற மென்பொருளுக்கு நகர்ந்திருந்த நேரமது.

என்னைவிட்டால் நிறுவனத்தில் வேறு யாருக்கும் சரக்குகளை வெளியேற்றுவதற்காக டாக்குமெண்ட்டுகளை தயாரிக்கும் கையாளும் வழிமுறைகள் தெரியாது.

இத்தகைய ஒரு சூழலில், பிளானிங் டிபார்ட்மெண்டிலிருந்து எனது சக அதிகாரி ஒருவர் புதிதாக வடிவமைத்திருந்த மாதிரிகளை எடை போடுவதற்கு கொண்டு வந்திருந்தார்.

எனது பொறுப்பில் இரண்டு டன்கள்வரை எடைபோடும் எடை எந்திரம் இருந்தது. அவருக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று எனது அவசர வேலைகளை சற்று நிறுத்திவிட்டு எடை போடுவதற்கு வசதியாக எந்திரத்தின் பக்கத்தில் நின்றிருந்தேன். சுவற்று ஓரமாக, கிராங்கேஸ்களை அடுக்குவதற்காக பயன்படும் ‘பேலட்’ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கிராங்கேஸீம் சுமார் 100 கிலோக்கும் அதிகமாக எடை இருக்கும். பத்து கிராங்கேஸ்களை ஒரு பேலட்டில் அடுக்கலாம்.

கனத்த அந்த பேலட்டின் எடை அரை டன்னுக்கும் (500 கிலோ) அதிகமாக இருக்கும். பாதுகாப்புக் கருதி அதை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி நான் ஏற்கனவே பணியாளர்களிடம் சொல்லியிருந்தும் அவர்கள் ஏனோ அப்புறப்படுத்தவில்லை.

இந்நிலையில், எடை போடுதற்காக வந்திருந்த பிளானிங் டிபார்ட்மெண்ட் பணியாளர்களில் ஒருவர், சுவற்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த பாலட்டை ஏதோ செய்ய போய், “டமார்” என்று இரும்பு விழும் சத்தமும், அந்த பணியாளர் துள்ளி குதித்து ஓடியது மட்டும் பார்க்க முடிந்தது. அதற்கு மேல் நடந்தது என்னவென்று தெரியவில்லை.

அடுத்து அலறிக் கொண்டே எனது பகுதியின் பணியாளர் தோழர்கள் என்னிடம் ஓடிவருவது தெரிந்து.

பார்த்தால் அந்த பாலட் எனது இடது முழங்காலின் பக்கவாட்டில் பட்டு சரிந்து இடது கால் மேல் விழுந்திருந்தது. உடல் வியர்த்துக் கொட்ட, கடுமையான வலியைப் பொருத்துக் கொண்டு நிற்பதை தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

ஓடிவந்த பணியாளர்களில் இருவர், மிகவும் சிரமப்பட்டு அந்த பாலட்டை தூக்க இன்னும் சிலர் அதிலிருந்து எனது காலை விடுவித்து என்னை மீட்டு ‘காபினுக்கு’ கொண்டுவந்தார்கள்.

சற்று நேரத்தில் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வந்தது.

முதல் உதவிக்கான மெடிகல் டிபார்ட்மெண்டில் நான் அணிந்திருந்த கனத்த இரும்பு தகடு வைத்த பாதுகாப்பு காலணியை (Safety Shoe) கழற்றினார்கள்.

எந்த எலும்பு உடைந்து எங்கே துரித்திக் கொண்டுள்ளதோ என்ற பயத்தில் மெது மெதுவாக பார்வையை திருப்பிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு, காலுறையை கழற்றினார்கள்.

காலை பார்க்க பயமாக இருந்தது. நல்லவேளை எந்த எலும்பும் முறிந்து துருத்திக் கொண்டு வெளிவரவில்லை. ஆனால், உள் காயத்தால், இடது கால் ரத்தம் கட்டி வீங்கிவிட்டிருந்தது.

எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும் என்றார்கள்.

வெளியில் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக நிறுவன விபத்து பட்டியலை மருத்துவர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, அவரை அருகில் அழைத்தேன்.

“எனக்கான பணி ஒன்று காத்திருப்பதையும். அதை முடிக்காவிட்டால்.. நிறுவனத்துக்கும், டிரான்ஸ்போர்ட்டருக்கும் ஏற்படும் பெருத்த இழப்பையும்” சொன்னேன். 


எனது சக அதிகாரியான அந்த மருத்துவ நண்பர் என்னை கண்ணாலேயே எரித்துவிடும் அளவுக்கு முறைத்தார்.

ஒருவழியாக அவரிடம் கெஞ்சி கூத்தாடி, அடுத்த நாள் விடுமுறை நாளாகையால் நல்லதொரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தி அந்த வலி வேதனையுடன் ஆம்புலன்ஸிலேயே மீண்டும் எனது டிபார்ட்மெண்டுக்கு திரும்பினேன்.

எனது சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் நண்பரான ஆடிட்டிங் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த மணியன் அய்யா அவர்களை அழைத்து, எனது அருகில் அமர்த்திக் கொண்டேன்.

மயக்கம் வருவது போலிருந்தது.

எனது மேலதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.

எல்லோருக்கும் நான் தைரியம் சொல்லி, அனுப்பிவிட்டு வேலையில் கவனம் செலுத்தலானேன். பக்கத்தில் டிரான்ஸ்போர்ட்டர் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தார். அவரையும் பார்வையாலேயே அமைதிப்படுத்தினேன்.

ஒரு வழியாக எல்லா டாக்குமெண்ட்டுகளையும் தயாரித்துவிட்டேன். அதன் நகல்களை பிரிண்ட் எடுத்து டிரான்ஸ்போர்ட்டரிடம் ஒப்படைத்தேன். ‘கேட்டு’க்கும் (செக்யூரிடி) தகவல் அளித்துவிட்டு எழுந்தபோது, மணி மாலை 6 நெருங்கிக் கொண்டிருந்தது.

பிறகென்ன?

மணியன் அய்யாவை அனுப்பிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி வீட்டுத் தெருமுனையில் இறங்கிக் கொண்டேன். எனது காலுக்கு போட்டிருந்த தடித்த கட்டுகள் தெரியாமலும், தெருவாசிகள் யாருக்கும் சந்தேகம் வராமலும் மெதுவாக நடந்து வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.

சகஜமாக இருப்பதாக காட்டிக் கொண்டு சற்று நேரம் கழித்து மகளிடம் மெதுவாக நடந்ததைச் சொன்னேன்.

“அம்மாவிடம் மெதுவாக சொல்லணும். இல்லையென்றால் அவருக்கு பி.பி. அதிகரித்துவிடும்” - என்றும் எச்சரித்தேன்.

‘தான் வாழ்வதே எனக்காக!’ என்று வீட்டை விட்டு என்னோடு வந்த நாளிலிருந்து ஒரு கொள்கையோடு இன்று வரை எனது நிழலாக இருக்கும் எனது மனைவி அற்புதமான ஒரு மனுஷி. அந்த அற்புதங்களை தனியாக மற்றொரு நினைவுகளில் இறைவன் நாடினால், கண்டிப்பாக தெரிவிப்பேன்.

ஒரு பத்துநாள் ஓய்வுக்கு பிறகு மருத்துவர் சொல்லியும் கேட்காமல் மீண்டும் பணிக்கு சென்றுவிட்டேன்.

பெரும் விபத்தில் சிக்கிய எனது இடது கால் இறையருளால் தப்பித்ததும், அதன் அடையாளமாக நடைமாறிபோனதும் இப்படிதான்.

இதன் விளைவாக தொழுகையின் அமர்வுகளில் ஆரம்பத்தில் அமரவே முடியாத அளவுக்கு சிரமமும், தற்போது குறுகிய காலம் மட்டுமே அமர முடியும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன். எல்லா புகழும் இறைவனுக்கே!

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’'''''''''''''''''''''''''

ஷேக் முஹம்மது சுலைமான்
முடிவாக இரண்டு பின்னூட்டகளில் முதலாவதாக சகோதரர் ஷேக் முஹம்மது சுலைமான் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலும் அதற்கு நான் அளித்த பதிலும் இது:

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே!

தங்களின் வைகறை நினைவுகள் அல்ஹம்துலில்லாஹ் சமுதாய மக்களின் மனதில் ஊடுருவி ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும், ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்கிற வேளையில் ஓர் வேண்டுகோள்.

நான் கீழக்கரையை சார்ந்தவன். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்; எங்கள் பகுதியில் குடும்பம் மற்றும் ஊருக்குள் மட்டுமே சம்பந்தங்கள் செய்வார்கள். இதிலும் வேறுபாடு உண்டு. நான் மேல்நிலை; இவர்கள் கீழ்நிலை என்று தராதர தட்டுகளும் உண்டு. இவற்றில் சமீபகாலமாக, சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு இன்றைய இளைஞர்களும் பங்களித்து வருகின்றனர்.

குடும்ப சூழல் கருத்தில் கொண்டோ அல்லது சில நிர்பந்தங்களினால் முடிவுகள் எடுத்தாலோ அதனால் ஏற்படும் ஏச்சுப் பேச்சுக்கள் குடும்ப அளவிலும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கும்.

‘ஆரம்ப கட்டத்தில், நீங்கள் உங்கள் சுய விருப்பதிற்கு இணங்க மாற்று சமுதாயத்தில் மணம் புரிந்து இருப்பினும் நீங்கள் பின்னாளில், மாறிய பிறகு கூட சில வேதனைகள் மற்றும் ஏச்சுக்கள் குடும்ப அளவில் தொடர்ந்து இருக்கலாம். மகள்களின் திருமண விஷயங்களில் சில சிரமங்களை எதிர்கொண்டும் இருக்கலாம்.

இன்னும் நமது சமுதாயத்தினர் தாவா புரிந்து பலரை நமது மார்க்கம் பக்கம் ஈர்த்து இருப்பினும் இது போன்ற விஷயங்களில் அவர்களின் மனம் இன்னும் பக்குவம் அடையவில்லை. குர்ஆன் மற்றும் ஹதீஸ் உதாரணங்கள் வாய் அளவிலேயே இருக்கின்றன.

அதனால், இதனை பற்றிய சிந்தனைகள் வீரியமாக உங்கள் ‘வைகறை சிந்தனைகளில்’ இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்; அதிலும் சமரசம் இன்றி! இன்றைய காலகட்டத்தில் இது ஓர் அத்தியாவசிய தேவையும் கூட.

எத்தனை பேர் புதிதாக வாழ்க்கை முறையாக மார்க்கத்தினை ஏற்ற மக்களுடன் சம்பந்தம் செய்ய விரும்புகிறோம் அல்லது அப்படி ஒன்றை மனதளவிலாவது நினைகின்றோமா அல்லது ஓர் சாத்தியகூற்றினை அலசுகிறோமா இவை பற்றி விரிவாக எழுதுங்கள்.

உங்கள் எழுத்தே இன்று சகோதரர் சிராஜுல் ஹசனின் பதிவின் காரணமாக கூட இருக்கலாம் .

அனைத்தையும் அறிந்தவன் இறைவனேயாவான். அனைவரின் மனதிலும் மாற்றம் தர வல்லவன் அவனேயாவான்..

வஸ்ஸலாம்

ஷேக் முஹம்மது சுலைமான்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’''''''''''''''''''
வ அலைக்கும் சலாம் ஷேக் முஹம்மது சுலைமான்,

நன்றி.

சிலவற்றில் சமரசம் இல்லாத எனது போக்கு என்னை பல இழப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால், உங்கள் அச்சம் தேவையற்றது. எனது போக்கில் நளினம் மிகைத்திருக்கும் என்பது எனது பலவீனமோ என்னவோ!

இறைவன் சுமக்க முடியாத பாரத்தை யார் மீதும் சுமத்துவதில்லை. என்னை நல்ல சுமைத்தாங்கியாகவே அவன் தேர்ந்தெடுத்தான் போலும்! அதனால், பல சுமைகளை தாங்க வேண்டியிருந்தது. இதிலும் சந்தோஷம்தான்!

சகோதரர், சிராஜுல் ஹஸனின் பதிவைக் கண்டேன்.

வைகறை நினைவுகள் அவரது மௌனத்தை கலைத்திருப்பதாகவே நானும் கருதுகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே! நல்ல தொடக்கம்.

எனது பக்கங்கள் முற்றிலும் வேறானவை. என்னைத் தொடர்ந்து போராளியாகவே அறிமுகப்படுத்துபவை. எனது பிள்ளைகளின் மண வாழ்க்கை உட்பட.

அதேபோல, நான் கடந்தவந்த, ஒவ்வொரு தருணத்திலும் இறைவனின் பேருதவியைத் தவிர வேறெந்த பின்புலமும் எனக்கில்லை. அது இயக்கம், அமைப்பு அல்லது தனிநபர்களோ யாராக இருந்தாலும் சரியே! யாரின் முதுகுகளிலும் நான் ஏறி முன்னேறியதில்லை.

திடீர் என்று எதிர்பாராமல் யாராவது வருவார்கள் இந்த புத்தகங்களை நாங்கள் வெளியிடுகிறோம் என்பார்கள். இதை செய்கிறோம் என்பார்கள். அப்படிதான் என் வாழ்க்கையில் எல்லாமே நடந்துள்ளன.

இப்படி வெளியானவைதான் எனது 10 க்கும் மேற்பட்ட சிறார் இலக்கியங்களும், நான் பொதுவெளி நாளேடுகளில் எழுத கிடைத்த வாய்ப்புகளும்.

இறைவனே என்னை ஏணியாக இருந்து ஏற்றி விட்டவன்.

அதேநேரத்தில் நான் ஒரு அடி மட்டும் அவனை நோக்கி செல்லவில்லை. பசுவைக் கண்ட கன்றாக ஓடோடி செல்ல முயன்றவாறு உள்ளேன். இறைவனின் பேரன்பான அந்த தாயன்பே என் பயணத்தின் ஊட்டமாக இருந்தது. இருக்கின்றது.

அதேபோல, வரலாறுகள் வழியே, நபிகளாரின் காலத்திலும் நான் பயணித்து, மகிழ்கிறேன். அழுகிறேன். கோபப்படுகிறேன். புன்முறுவல் பூக்கிறேன். வெட்கி நாணத்தால் தலைகுனிகிறேன். இவற்றில் எதுவும் மிகைத்தல் அல்ல. இந்தக் கற்பனாதிறன் இறையருளால் இயல்பாகவே என்னுள் வாய்த்தது.

நானும் ஜமாஅத்தின் பிறிதொரு தடைகாலத்தை கண்டுள்ளேன். அந்த அவசர நெருக்கடி நேரத்தில் இன்று பெருந்தலைவர்களாக இருக்கும் பல்வேறு நபர்களின் உண்மை முகங்களைக் கண்டிருக்கிறேன். அந்த நேரத்திலும் நான், சமரசமோ அச்சமோ அற்ற போராளியாகவே நடந்து கொண்டிருக்கிறேன். இந்த நினைவுகளும் இறைவன் நாடினால் பறிமாறிக் கொள்ளப்படும்; சமரசமும் அச்சமும் இன்றி!

எனது முன்னோர்கள் செய்த அளவு இல்லாவிட்டாலும், எனது சிறை நினைவுகளும் உண்டு. பீதியூட்டும் நினைவுகள் அவை.

யார் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சி இன்றி, உள்ளதை உள்ளபடியே நளினமாக நான் எழுத எனக்காக துஆ செய்யவும்.

எந்தவிதமான திட்டமும், குறிப்புகளும் இல்லாமல் திடீர் என்று ஆரம்பித்த தொடர் இது. இறைவன் நாடினால் ரமளானைக் கடந்தும் நீளும் என்று தெரிகிறது.

வஸ்ஸலாம்.

இக்வான் அமீர்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
அடுத்து சகோதரர் யாஸர் அரஃபாத்திடமிருந்து ஒரு முக்கிய பின்னூட்டம்:
“எந்தப் புள்ளியில் கம்யூனிஸத்தின் போதாமையை உணர ஆரம்பித்தீர்கள்? – என்பதையும் வைகறை நினைவுகளில் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்!” – என்று கேட்டுள்ளார் அவர்..

இறைவன் நாடினால், அடுத்த வைகறை நினைவுகளில் அந்த நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படும் சகோதரர் Yasar Arafat.
'''''''''''''''''''''''''''''''''''''''''''
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
 
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
 
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
 
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
 
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
 
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
 
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html

லென்ஸ் கண்ணாலே:005, படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள்

தெளிவற்ற, மங்கலான படங்களை எடுத்துவிட்டு அதற்கு காரணம் காமிராதான் என்று காமிரா மீது பழி போடக்கூடாது.

எடுக்க வேண்டிய படத்தை கிளிக் செய்யும்போது, நம் கைகள் நடுங்காமல் எடுக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல, படம் எடுக்கும் ஆர்வத்தில் எல்லோரும் ஒரு தவறை விடாப்பிடியாய் செய்கிறார்கள் அதாவது படத்தில் என்னவெல்லாம் இருக்கக்கூடாதோ அவற்றை எல்லாம் பிரேமுக்குள் புகுத்துவது. இந்த தவறை அநேகமாக எல்லா புதுமுகங்களும் செய்கிறார்கள்.

இதை தவிர்ப்பது எப்படி?

உதாரணமாக சகோதரி ரிஸ்வானா ஷகீல் எனக்கொரு படத்தை அனுப்பியிருந்தார். படத்தில் இரண்டு குழந்தைகள். அநேகமாக நெஞ்சை அள்ளும் சிரிப்புடன் இருந்த அந்த குட்டீஸ் அவரது பிள்ளைகளாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அழகான படம் அது.

அந்தப் படத்தில், கறைப்படிந்த சுவர்கள் மிகைத்துப் போய், அழகான குழந்தைகள் காணாமல் போயிருந்தார்கள்.

“சுவர்களைப் படம் எடுக்க குழந்தைகள் எதற்கு?” -  என்று என்னுள் கேட்டுக் கொண்டேன்.
ரிஸ்வானா ஷகீல் எடுத்த படம்
சகோதரி ரிஸ்வானா ஷகீலின் படத்தின் பெரும் பகுதியை சுவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எடுக்க நினைத்த குழந்தைகளோ மிக சிறிய அளவில் உள்ளார்கள்.

நாம் எடுக்க நினைத்தது சுவர் அல்ல. குழந்தைகள்தான் என்பதை காமிராவை கிளிக்கும்போதே தீர்மானித்து பழகிக்க கொள்ள வேண்டும்.
இப்படி எடுத்திருக்க வேண்டும்
அதேபோலதான் எனது நண்பர் ஒருவர் தான் எடுத்திருந்த ஒரு படத்தைக் காட்டி எனது அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார். அழகான புல்வெளியில் பழுப்பு நிறத்தில் சிறியதாக ஏதோ ஒன்று தெரிந்தது. “பச்சைப் பசேல்! - என்று புல்வெளி அழகாகத்தான் இருக்கிறது!” – என்றேன். “ என்னது? புல்வெளியா..! சரியாகப் பாருங்க. என் செல்லப் பிராணி பூனைக்குட்டி என்ன அழகா போஸ் கொடுக்குது பாருங்க!” – என்றார் பதறியவாறு.

பிரேமுக்குள் பூனைக்குட்டியை பிரதானமாக போகஸ் செய்திருந்தால்… புல்வெளி முக்கியமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்காது.

நீங்கள் எதனைப் படம் எடுக்க நினைக்கிறீர்களோ அதாவது,

·         உங்களது செல்லப் பிராணி

·         உங்களுக்குப் பிடித்தமான கார்

·         உங்களது அழகான வீடு

·         உங்கள் மனம் கவர் குழந்தைகள்

இப்படி யாரை, எதை படம் எடுக்க நினைக்கிறோமோ அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

மாறாக,

மரம், செடி, கொடிகள், ஆகாயம், சுவர்கள் என்று இவற்றுக்கு முக்கியத்தவம் தர வேண்டாம். படம் எடுக்க நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் இது.

படங்களை அழகாய் தீர்மானிக்கும் ஒரு பொது விதி உண்டு. அதைக் குறித்து இறைவன் நாடினால், அடுத்த தொடரில் 

முந்தைய தொடர்களை வாசிக்க:

லென்ஸ் கண்ணாலே :001 - அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html 
லென்ஸ் கண்ணாலே:002 - உங்களுக்கான காமிரா எது?  http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html
லென்ஸ் கண்ணாலே:003 - கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்!  http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html
லென்ஸ் கண்ணாலே 004: வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html

அழைப்பது நம் கடமை - 2: ஒரு கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும்!அலுவலகத்தின் கழிப்பறையில் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. மெத்தப் படித்த முஸ்லிம் அவர். நல்ல பதவியில் இருப்பவர்கூட. பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார். இத்தனை நல்ல அம்சங்கள் கொண்ட அவர் நடந்து கொண்டவிதம் தான் என்னை பெரிதும் பாதித்தது. நீர் வசதி இல்லாத இடத்தில் நின்று கொண்டு அவர், தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் ஏராளமான கழிவறைகள் - குழாய்கள் என்று நவீனமாக அமைக்கப்பட்டிருந்த கழிவறை அது. இருவகையான இயற்கைத் தேவைகளில் ஒன்றை மட்டும் சரியாக நிறைவேற்றுபவர் மற்றதில் சுத்ததைப் பின்பற்றாதது வேதனையைத் தந்தது.

இஸ்லாமிய அழைப்புப் பணிகள் மற்றும் முஸ்லிம் சமுதாயத்துக்கான சீர்த்திருத்தப் பணிகள் ஆகியவற்றின் ஒரு சிறிய கேந்திரம் எங்கள் அலுவலகம். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிப்புரியும் அலுவலகத்தில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தத்தமது வழிமுறைகளில் இப்பணிகளைச் சேர்ப்பதில் கூட்டுப்பங்கு வகித்துள்ளன. இஸ்லாமிய அழைப்பும், முஸ்லிம்களுக்கிடையிலான சீர்த்திருத்தப் பணியும் கணிசமாக சேர்ந்துள்ள இடமிது. அப்படியிருந்தும்கூட இப்படியா? - இது கூட என் அதிர்ச்சிக்குக் காரணம்!இஸ்லாம் என்பது பிரபஞ்ச இயல் (Universal Law) படைப்பினங்கள் மனிதன் உட்பட.. இந்த உலகில் எப்படி இயங்க வேண்டும் அல்லது வாழ வேண்டும் என்று வழிகாட்டும் வாழ்க்கைநெறி. இஸ்லாம் என்பதற்கு அடிபணிதல்.. சாந்தி.. சமாதானம்.. என்று பொருள்.

பூமியைப் பிளந்து வெளிப்படும் செடி கொடிகள், விருட்சங்களாய் வளராவிட்டால்.. மனிதனின் தேவைகள்.. மழை முதற்கொண்டு காய்க்கனிகள், உணவுவரை.. பாதிக்கப்பட்டுவிடும். இவற்றின் பற்றாக் குறையால்.. உயிரினத்தின் சகஜமான வாழ்க்கை மற்றும் அமைதி சீர்குலைந்துவிடும்.

அதேபோலதான், மனிதனும். அவன் இஸ்லாம் காட்டும் வாழ்வியல் திட்டத்தோடு ஒன்றி வாழாதபோது, பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். அமைதியை தொலைத்து நிம்மதியை இழக்க வேண்டியிருக்கும். ஏனென்றால்.. செடி-கொடிகளைப் போலவே மனிதனும் இந்த பிரபஞ்ச அமைப்பில்  ஓர் உறுப்பினன். சூரிய சந்திரன்களைப் போலவே மனிதனும் உலக கூட்டுக் குடும்பத்தின் அங்கம். படைத்தவனின் கட்டளைகளுக்கு அடிபணிதலில்தான் அமைதி கிடைக்கிறது என்பதற்கு இந்த பிரபஞ்சமே மனிதனுக்கான சாட்சி.

மொத்தத்தில், இஸ்லாமிய வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்ந்தால்.. அறிவியல் பூர்வமாகவும், ஆன்மிக ரீதியாகவும் வெற்றிப் பெற முடியும். அது இயற்கைத் தேவைகளாகட்டும்.. அல்லது வாழ்வின் பிற துறைகளாகட்டும் அதாவது இம்மையிலும் வெற்றி. மறுமையிலும் வெற்றி.

அடுத்தது. இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு முக்கியத் தேவை ஆள்வளம். இந்த ஆள்வளத்தையும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ள முடியும். உதாரணமாக, ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த அந்த நபரை 'இஸ்லாஹ் - சீர்த்திருத்தம்' செய்தாலே போதும். மென்மையான வழிமுறையில் அவர் சீர்த்திருந்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்தப் பணி செய்யப்பட வேண்டும். சகோதர வாஞ்சையோடு அவரது செய்கைக்கான காரணம் ஏதாவது இருக்கிறதா? என்று பார்ப்பது மிகவும் அவசியம். அதன் பின் அதை களைவதற்கான மாற்றுவழியை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படி அவரைச் சீர்த்திருத்திவிட்டால் அவர் வைரமாக ஜொலிக்க ஆரம்பித்துவிடுவார்.


அன்பு நபிகளாரின் சீர்த்திருத்த முறைமை இது. பாருங்கள்:

திரு நபிகளாரின் பள்ளிவாசல் அது!

அன்பு நபிகளாரும், அருமைத் தோழர்களும் அங்கு குழுமியிருந்தார்கள்.

அப்போது, ஒரு கிராமப்புற அரபி பள்ளிவாசலுக்கு வந்தார். தொழுது முடித்ததும் வெளிப்பள்ளியில் சிறுநீர் கழித்தார்.

இதை நபித்தோழர்கள் கண்டார்கள்.

அவரைத் தடுக்க ஒருசாரரும், அவரை அடிக்க மற்றொரு சாரரும் ஓடினார்கள்.

"வேண்டாம்! அவரை விட்டுவிடுங்கள்!" - என்று நபிகளார் அவர்களைத் தடுத்தார்கள்.

அந்த கிராமவாசி சிறுநீர் கழித்து முடித்தார்.

அதன்பிறகு, அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளி தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தும்படி நபிகளார் அறிவுறுத்தினார்கள்.

கடைசியாக அந்த கிராமவாசியை தனிமையில் அழைத்து, "சகோதரரே, இது இறைவனின் இல்லம். தொழுகைக்காகவும், இறைவேதம் ஓதுவதற்காகவும், இறைநாமம் துதிப்பதற்கான இடம். இங்கு அசுத்தம் செய்யக்கூடாது!" - என்று அறிவுறுத்தினார்கள். (புகாரி)

தவறு செய்தவர் ஒரு கிராமவாசி.

நீண்ட பயணத்திலிருந்து வந்திருப்பவர்.

இயற்கைத் தேவைக்கான அவசரம்.

அதனால், 'தான் என்ன செய்கிறோம்?' - என்று தெரியாமல் தவறு செய்கிறார்.

அவரது அவசரத் தேவையில் குறுக்கிடுவது உடல் நலத்தைப் பாதித்துவிடும். எனவே, தேவை முடியும்வரை நபிகளார் காத்திருக்கிறார்கள்.

அதன்பிறகு அசுத்தத்தை நீக்குவதற்கான 'மாற்றுவழி ஒன்றையும்' - ஒரு வாளி தண்ணீர் ஊற்றுவதன் மூலமாக - கற்றுத் தருகிறார்கள்.

அதேபோல, தவறு செய்த மனிதரை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தாமல் தனிமையில் அறிவுறுத்துகிறார்கள். தவறு செய்பவர் எதிர்மறை சிந்தனை கொள்ளாதவாறு செய்யும் பக்குவமான அறிவுரை அது. "ச்சே என்ன முட்டாள் தனம் செய்துவிட்டேன்!" - என்று தன்னைத் தானே நொந்து கொண்டு அடுத்தமுறை தவறு செய்வதற்கு முற்படாத நிரந்தரமான மனமாற்றத்தக்கு வழிகோலும் அறிவுரை!

இஸ்லாமிய அழைப்புக்கு அடித்தளமிடும் இறைமறையின் திருவசனம் இது:

"நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்" (திருக்குர்ஆன் -3:104)

- இறைவன் நாடினால்.. அழைப்பியல் தொடரும்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை: http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

இறைவா..! என்னை பாதுகாத்தருள்..!

"இறைவா..! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கடன் சுமையிலிலிருந்தும், பிற மனிதர்கள் என் மீது ஆதிக்கம் செலுத்துவதிலிருந்தும் என்னை உன் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன்!" (அண்ணல் நபி)

Wednesday, July 29, 2015

யாகூப் மேமன்: நீங்காத நினைவுகளோடு சில ஆத்மாக்கள்!தன்னைத்தானே தூக்கு மேடைக்கு ஒப்புக் கொடுத்த துரதிஷ்டசாலி யாகூப்  மேனன். அதுவும், ஜுலை 30 அவரது பிறந்த நாளிலேயே அவரது மரணமும் நிச்சயிக்கப்பட்ட துரதிஷ்டசாலி! அரசியல்வாதிகளின் விருப்பப்படி இந்திய சட்டங்கள் தீர்ப்பெழுதி உயிர் துறக்க இன்னும் சில மணி நேரமே இருக்கும் அதிஷ்டம் கெட்டவர். நாட்டில் 279 மரண தண்டனை குற்றவாளிகள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இதில் 1997-ம், ஆண்டிலிருந்து காத்திருப்பவர்களும் அடக்கம். இந்நிலையில், அவசரம் அவசரமாக முடிவுரை எழுதப்பட்டு தூக்கு மேடைக்கு தள்ளப்பட்டவர்தான் யாகூப் மேமன்.

“இந்த நாடு பட்டதாரியாக்கி என்னை சிறப்பித்தது. நான் வாழ கண்ணியத்தை வழங்கி கௌரவித்தது. அப்படிப்பட்ட நாட்டுக்கு நான் அழிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” – என்ற கேள்வியை எழுப்புகிறார் ஹீஸைன் ஜைதியிடம் யாகூப் மேமன்.

மூத்த பத்திரிகையாளரும், கருப்பு வெள்ளி நூலாசிரியருமான ஹீஸைன் ஜைதி தனது மும்பை குண்டுவெடிப்புகள் சம்பந்தமான ஆய்வு நூலான ‘கருப்பு வெள்ளி’ ( Black Friday, S. Hussain Zaidi, Penguin Books India) நூலுக்காக யாகூப் மேமனை சந்திக்க சென்றிருந்தார். அப்போது சிறைச்சாலையில் யாகூப் மேமன் சொன்னது இது.

'தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்' என்ற வழக்கமான குரலுடன், யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிடம் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் என நம் சமூகத்தில் கவனிக்கத்தக்க பலர் கையெழுத்திட்ட அந்தக் கோரிக்கை மனுவுடன், இந்திய உளவு அமைப்பில் முக்கியப் பங்குவகித்த மறைந்த அதிகாரி பி.ராமன் எழுதிய கட்டுரை ஒன்று இணைக்கப்பட்டதும் முக்கியமானது.

உளவு அமைப்பு 'ரா'-க்கு தலைமை வகித்தவரும், பாகிஸ்தான் உளவுப் பிரிவை கவனித்து வந்தவருமான பி.ராமன் எழுதிய அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சம், 'யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது. ஏன்?' – என்பதே.

யாகூப் மேமன் தூக்கு தண்டனை வழக்கு விவகாரத்தின் தற்போதைய நிலையின் சுருக்கம் இதுதான்:

1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் இறந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வழக்கில் யாகூப் மேமனு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து கடைசி சட்ட நிவாரணமாக கருதப்படும் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி தூக்கில் இடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்தார். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். "எனக்கு சட்டரீதியான பரிகாரங்கள் இன்னும் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர அரசு அளவுக்கு மீறி அவசரம் காட்டுகிறது" என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேரின் வாக்குமூலங்கள் அடிப்படையில் மேமன் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டார். இந்த 6 பேரில் 5 பேர் அதன்பிறகு, பிறழ்சாட்சியாக மறுதலித்தனர்.

குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தாக யாகூப் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் அதனை தெரியாமல் செய்ததாகக் கூறினார். இவருடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள், அதாவது உண்மையில் குண்டு வெடிக்கச் செய்தவர்கள் குறைந்த தண்டனையைப் பெற்றனர் அல்லது அவர்களது மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.

ஆனால், தகுந்த சாட்சியங்கள் இல்லாத நிலையிலும், குண்டுவெடிப்புகளுக்காக தூக்கிலிடப்படும் ஒரே தனிநபராக தூக்குமேடை ஏறப்போகிறார் யாகூப் மேனன்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் பாதுகாப்பை உதற முடிவெடுத்து அந்த 'கடிமனான மற்றும் ஆபத்து விளைவிக்கக் கூடிய' நடைமுறையை விளக்கி, 1999-ம் ஆண்டு இந்திய தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார் யாகூப் மேமன்.

1994-ம் ஆண்டின் அவரது இந்த முடிவுக்குப் பிறகே விசாரணையில் அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதோடு, சதியில் ஈடுபட்ட தனது குடும்பத்தினரையும் ஐ.எஸ்.ஐ. பிடியிலிருந்து வெளியேற்றி சரணடையச் செய்ய இணங்க வைக்கும் முயற்சியில் விசாரணை அதிகாரிகளுக்கு பெருமளவு உதவி புரிந்துள்ளார்.

சதி தொடர்பான முக்கிய விவரங்களையும் விசாரணையில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பின்னணியிலேயே ராமன், யாகூப் மேமன் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளதாக எழுதினார்.

இந்நிலையில், ஜூலை 30-ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் உத்தரவு வெளியாகியுள்ள நிலையில், இந்த உத்தரவில் ஏகப்பட்ட சட்டப்பிறழ்வுகள் இருப்பதாக அறிவுஜீவிகளும் சட்ட வல்லுநர்களும் கருதுகிறார்கள்.

முதலில் சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து சட்ட அணுகுமுறைகளும் முடிந்த பிறகே தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப் படவேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.

மேமன் விவகாரத்தில் ஜூலை 30-ம் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற உத்தரவு வெளியானது. ஆனால், அவரிடம் இந்தத் தகவல் அளிக்க வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டுள்ளதும் யாகூபின் ரிட் மனு தாக்கலின் போது தெரியவந்துள்ளது. 


தூக்குத் தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பாக குற்றவாளி அதனை எதிர்த்து தன்னால் முடிந்தளவு சட்ட நடைமுறைகளை அணுக வாய்ப்பளிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியம். ஆனால் அவர் சட்டத்தின் உதவியை நாட முடியாதவாறு உத்தரவு அவசரம் அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி தற்போது, எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு இருக்கும்போது, ஏப்ரல் 30-ம் தேதி மாநில அரசு எப்படி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவை பெற முடியும்? அப்போது ஜூலை 21, 2015-ல் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசுக்கு முன் கூட்டியே தெரியுமா?

இது போன்ற ஏராளமான குளறுபடிகளும், கேள்விகளும் இந்த உத்தரவின் மூலம் எழுவதாக நிபுணர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

சரி.. ‘ரா’ உளவுதுறையின் தலைவராக இருந்த பி.ராமன் கட்டுரை சொல்வதுதான் என்ன?

‘யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது. ஏன்?’ – என்ற வினாவுடன் 'மேமன் சகோதரர்களும் மும்பை குண்டு வெடிப்புகளும்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது:

'யாகூப் மேமனை தூக்கிலிடும் நீதிமன்ற உத்தரவையும், நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் திடீர் கோபாவேசம் பற்றியும் ஊடகங்கள் மூலம் நான் படித்தறிந்த பிறகு என மனம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டது.

இந்த விசாரணைக் காலம் முழுதும் அரசு தரப்பு கோருவது போல் 'நான் பழைய டெல்லியில் கைது செய்யப்படவில்லை, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டேன்' என்று யாகூப் மேமன் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனை அரசு தரப்பு ஏற்காமல், அவருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதாடியது.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு, மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டால், இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கவும் உரிமை உண்டு.

இந்தக் கட்டுரையை நான் எழுத வேண்டுமா? என்று என்னையே நான் பலமுறை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு வருகிறேன்.

•    எழுதாமல் விட்டால் நான் ஒரு தார்மிகக் கோழையாகி விடுவேனோ?

•    நான் இதனை எழுதிவிட்டால், இந்த வழக்கின் ஒட்டுமொத்த முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு விடுமா?

•    சந்தேகத்துக்கிடமற்ற குற்றவாளி எனது கட்டுரையினால் தப்பி விடக்கூடிய வாய்ப்புள்ளதோ?

•    எனது கட்டுரையை நீதிமன்றம் தீங்கானது என்று கருதுமோ?

•    நான் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறேனோ?

இந்தக் கேள்விகளுக்கு உறுதியான பதில்கள் கிடையாது. இருந்தாலும் நான் ஏன் இதனை எழுத முற்பட்டேன் என்றால், என்னுடைய பார்வையில், தூக்கிலிடப்படக் கூடாது என்று நான் நினைக்கும் ஒருவரைக் காப்பாற்றுவது முக்கியம் என்ற எனது நம்பிக்கையாகும்.

'ரா' உளவு அமைப்பின் பயங்கரவாத - எதிர்ப்பு பிரிவின் தலைவராக, மார்ச் 1993 முதல் ஆகஸ்ட் 31, 1994 வரை நான் இந்த வழக்கின் புற விவகாரங்களை விசாரணை செய்துள்ளேன்.

ரா அமைப்பின் மிகச் சிறந்த கள அதிகாரிகள் உதவியுடன் நான் இந்த விசாரணையில் மேற்கொண்ட பணிகளை பி.வி.நரசிம்ம ராவ் வெகுவாக பாராட்டினார். அப்போதைய பிரதமரான அவர், ‘இந்த வழக்கு விசாரணையின் தொடர்பான எங்களது பணிகள் தங்கத்துக்குச் சமமானது!’ - என்று பாராட்டினார்.

யாகூப் மேமன் வழக்கில் அவருக்கு எதிரான சூழ்நிலைகளை மட்டுப்படுத்தும் சூழல்கள் இருப்பதை நான் கண்டுணர்ந்தபோது, நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

யாகூப் மேமனின் குடும்பத்தினர் சிலரை இந்த வழக்கில் அரசு தரப்பு நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரவில்லை. மேலும், இந்தச் சூழ்நிலைகளை இந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும் அரசு தரப்பினர் நீதிமன்றத்துக்கு வலியுறுத்தவில்லை. அவருக்கு மரண தண்டனை பெற்றுத் தரும் ஆர்வத்தில், தண்டனையைத் தீர்மானிக்கும் சில சூழல்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரவில்லை.

மும்பை போலீஸ் மற்றும் சிபிஐ ஆகியவை ஐபி அமைப்பின் உதவியுடன் நடத்திய மிகச் சிறந்த விசாரணையாகும் இது. இறுக்கமான இந்த வழக்கில் விசாரணையைக் கையாண்டு, வலி நிறைந்த ஒரு பணியில் அனைத்துச் சாட்சிகளையும் சேகரித்து நீதிமன்றத்தின் முன்னால் வைத்த அதிகாரிகள் குறித்து இந்த தேசம் பெருமைகொள்ள வேண்டும்.

எனவே, பயங்கரவாதம் என்ற காட்டுமிராண்டிச் செயலை நடத்தியவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்றாலும், அரசு தரப்பினர் மரண தண்டனை கோரக் கூடாது என்பதற்கான மாற்று, மட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலைகளை நீதிமன்றத்துக்கு இந்த விசாரணையாளர்கள் அடிக்கோடிட்டுக் காட்டும் முயற்சியை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், அது இந்த விசாரணையாளர்கள் குறித்த (மதிப்பீடு கூடியிருக்கும்) ஒளிவட்டம் இன்னும் பிரகாசமாகக் கூட ஒளிவிட்டிருக்கும்.

யாகூப் மேமன் பழைய டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்று அரசு தரப்பு கூறுவது சரிதான். தன்னை அவர்கள் டெல்லியில் கைது செய்யவில்லை என்று யாகூப் மேமன் கூறுவதும் சரிதான்.

ஜூலை 1994-ல், எனது ஓய்வுக்கு சில வாரங்கள் முன்னதாக, காத்மாண்டுவில் யாகூப் மேமனை நேபாள காவல்துறை உதவியுடன் பிடித்துள்ளனர். நேபாளத்தின் வழியாக வாகனத்தில் இந்திய ஊர் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு, பிறகு வான்வழி ஆய்வு மைய விமானம் மூலம் டெல்லியில் அவர் கொண்டு வரப்பட்டு முறைப்படி கைது செய்யப்பட்டார். பிறகு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த இத்தனை நடவடிக்கையையும் எனது ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்றது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதால், காத்மாண்டுவில் உள்ள தனது உறவினர் மற்றும் வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசனை பெறவே யாகூப் மேமன் காத்மாண்டுவுக்கு வந்திருந்தார். அதாவது, மும்பை போலீஸ் முன்பு சரணடைய அவர் ஆலோசனை மேற்கொள்வதற்காக காத்மாண்டு வந்திருந்தார்.

உறவினர் மற்றும் வழக்கறிஞர் 'சரணடைய வேண்டாம்' என்று அறிவுறுத்தினர். காரணம், நீதி கிடைக்காமல் போகலாம் என்று அவர்கள் எச்சரித்தினர். எனவே, கராச்சிக்குத் திரும்பிவிடுமாறு யாகூபுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர். அவர் கராச்சிக்கு விமானம் ஏறுவதற்கு முன்னதாக நேபாள போலீஸால் சந்தேக அடிப்படையில் பிடிக்கப்பட்டார். அவசரம் அவசரமாக இந்தியா கொண்டு வரப்பட்டார்.

அவர் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். மேலும் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் இருந்த யாகூப் மேமனின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் கராச்சியிலிருந்து துபாய்க்கு வந்து மும்பை போலீஸில் சரணடையச் செய்ய விசாரணை அதிகாரிகளின் நடைமுறைக்கு யாகூப் மேமன் உதவினார். இந்த நடவடிக்கையின் துபாய் பகுதியின் ஐபி மூத்த அதிகாரி ஒருவர் ஒருங்கிணைத்தார். துபாய் நடவடிக்கைக்கு நானோ, ரா-வோ பங்களிக்கவில்லை.

எனவே, விசாரணை அதிகாரிகளுக்கு யாகூப் மேமன் வழங்கிய ஒத்துழைப்பும், குடும்பத்தினரை பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றி சரணடைய வைத்ததற்கு யாகூப் மேமனின் உதவியும் என்னுடைய பார்வையில், மரண தண்டனை பற்றிய பரிசீலனைகளை மட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் ஆகும்.

சதியில் யாகூப் மேமனோ அவரது குடும்பத்தினரோ ஈடுபட்டது குறித்தோ, அல்லது ஜூலை 1994 வரை ஐ.எஸ்.ஐ உடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பு பற்றியோ எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, ஒரு சாதாரண சூழ்நிலைகளின்படி, ஜூலை 1994-க்கு, முன் யாகூப் மேமனின் நடத்தை மற்றும் செயல்கள் அவருக்கு மரண தண்டனை அளிக்க தகுதியான நியாயங்களை வழங்கியிருக்கும்.

ஆனால், காத்மாண்டுவில் அவர் பிடிபட்ட பின்பு அவரது ஒத்துழைப்பு மற்றும் செயல்கள் இந்த வழக்கு விசாரணையின் அடுத்த கட்டங்களில் மரண தண்டனை விதிப்பின் பொருத்தப்பாடு பற்றிய மாற்றுக் கேள்விகளை எழுப்புகிறது. (ஆதாரம்: Raman's unpublished 2007 article: Why Yakub Memon must not be hanged)


தற்போது, தன்னை ஜூலை 30-ம் தேதி தூக்கிலிட வகை செய்யும் உத்தரவை எதிர்க்கும் யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, அவரது கருணை மனுவையும் மகாராஷ்டிர ஆளுநர் நிராகரித்தார்.

இந்த மனு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு வந்தது.

யாகூப் மேமன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவில் எந்தவித சட்ட நடைமுறைத் தவறுகளும் இல்லை.

மேலும், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகு, யாகூப் மேமன் அதனை எதிர்த்து நீதிமன்றத்திடம் முறையீடு செய்யவில்லை. மேமனின் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றத்தின் 3 மூத்த நீதிபதிகள் நிராகரித்தது சரியே.

தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவைப் பெற்ற பிறகு யாகூப் மேமன் அனைத்து சட்ட உதவிகளையும் பெறும் அளவுக்கு கால அவகாசம் இருந்துள்ளது. ஜூலை 13, 2015-ல் மேமனுக்கு அளிக்கப்பட்ட தூக்கிலிடப்படும் உத்தரவு அவருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்ததாகவே கோர்ட் கருதுகிறது.

ஆளுநரிடமோ, குடியரசுத் தலைவரிடமோ அளிக்கப்பட்டுள்ள கருணை மனு குறித்து தாங்கள் பரிசீலிக்க எதுவும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், குற்றவாளி செய்யும் இத்தகைய முயற்சிகள் நீதித்துறை நடைமுறைகள் மீது தாக்கம் செலுத்தாது.

நீதிபதி குரியன் ஜோசப் முன்னதாக, யாகூப் மேமன் கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வின் முடிவில் சட்ட நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது பற்றி கருத்து கூறிய நீதிபதிகள், "கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியே என்பதாகவே கோர்ட் பார்க்கிறது. அதில் நடைமுறை தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறியது.

கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் எனவே அதன் மீது தவறுகள் காண முடியாது என்ற அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார்.

மகாராஷ்டிர ஆளுநரிடம் மேமன் அளித்த 2-வது கருணை மனு குறித்து நீதிமன்றம் எதுவும் கூற விரும்பவில்லை. என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, உடனடியாக மகாராஷ்டிர மாநில ஆளுநர், யாகூப் மேமன் கடந்த வாரம் செய்திருந்த கருணை மனுவை நிராகரித்தார்.

முன்னதாக, இன்று புதிதாக ஒரு கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு யாகூப் மேமன் அனுப்பினார்.

மரபுப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கேற்ப குடியரசுத் தலைவரின் முடிவு அமையும்.

கடந்த ஆண்டு யாகூப் மேமன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தபோது அவரது மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளரும், கருப்பு வெள்ளி நூலாசிரியருமான ஹீஸைன் ஜைதியிடம் யாகூப் மேமன் சிறைச்சாலை சந்திப்பின் போது, “… வாய்மையே வெல்லும்! என்று உலகளவில் பறைச்சாற்றும் ஒரே நாடு இந்தியா. நான். இந்த நாட்டின் உயரிய நீதி மாண்புகளில் நம்பிக்கை வைத்துள்ளேன்!”- அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளது நினைவில் எழுகிறது.

நீதியும், நியமங்களும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி படாதபாடுபடுவதை பாவம் யாகூப் மேமன் அறிந்திருக்க நியாயமில்லை. தற்போது தூக்குக் கயிறு அவரது தொண்டை எலும்பை முறிப்பதற்கு முன் அவர் இந்தக் கருத்தை ஒருவேளை மறுபரிசீலனை செய்வாரோ என்னவோ..?

ஒவ்வொரு ஆத்மாவும், எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர இருக்கிறது. ஆனால், சில ஆத்மாக்கள் நீங்காத நினைவுகளை விட்டு விட்டு செல்வதென்னவோ உண்மை!அந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ

 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைந்தார். அந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்தது.

Sunday, July 26, 2015

'மனதை தூய்மையாக்குவாய் இறைவா..!'

"என் இறைவா! நீ என் மனதை உனக்கு மாறு செய்வதிலிருந்து விலகியிருக்கக் கூடியதாகவும், உன் தண்டனைக்கு அஞ்சக்சகூடியதாகவும் ஆக்கிவிடு. தீய குணங்களைவிட்டு அதனைத் தூய்மைப்படுத்து!" - அண்ணல் நபி