Saturday, December 19, 2015

இஸ்லாம் வாழ்வியல்: ஆட்டுக்கு உணவில்லையென்றாலும்


ஜனாதிபதி உமர், சிரியாவிலிருந்து தலைநகர் மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு குடிசை கண்ணில் பட்டது. காட்டுப்பகுதியில் அமைந்திருந்த அந்தக் குடிசையைக் கண்டதும் அவருக்கு வியப்பு ஏற்பட்டது.

குடிசையின் எதிரே ஒரு மூதாட்டி, சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். குழிவிழுந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும் அவளது ஏழ்மையை பறைச்சாற்றின.

உமர் மூதாட்டிக்கு சலாம் சொன்னார். பேச்சு கொடுத்தார்.

“பாட்டி ஜனாதிபதி உமரை நீங்கள் அறிவீர்களா?”

“எனக்கு உமரையும் தெரியாது! யாரையும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய பிழைப்பே மிக மோசமாக இருக்கும்போது, நான் அவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது?”

மூதாட்டியின் பேச்சில் விரக்தியும், கோபமும் வெளிப்பட்டன.

ஜனாதிபதி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு கேட்டார்.

“பாட்டி! உமர் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் ஏன்?”

“வந்ததிலிருந்து உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பேச்சு உமரையே சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. நான் நீண்ட நாட்களாக இப்படி பசி, பட்டினியோடு செத்துக் கொண்டிருக்கிறேன். உமர் என்னைக் குறித்து கவலைப்பட்டதாகவோ, என் துயர் களைய முயன்றதாகவோ தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, அவர் மீது கோபமும், வெறுப்பும் வராமல் என்ன செய்யும்? மறுமை நாளில் எனக்கு உமருக்கும் இடையில் நடைபெறவிருக்கும் வழக்கை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன்!”

அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி உமர், “பாட்டி, நீங்கள் சிரமப்படுவதையும், உதவி தேவைப்படுவதையும் ஜனாதிபதிக்குத் தகவலாவது தந்தீர்களா?” என்று கேட்டார்.

“என்ன சொல்கிறாய் நீ? என்னுடைய நிலையை நான் தெரிவிக்க வேண்டும் என்றால், ஜனாதிபதியாய் அவர் எதற்கு? இந்தப் பகுதி அவரது ஆளுகைக்கு உட்டதில்லையா? மக்களின் குறைகள் அறிவதும், அவற்றை களைவதும் ஆட்சியாளரின் பொறுப்பல்லவா?” மூதாட்டி கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

“பாட்டி! ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்கள் ஊரைவிட்டு இப்படி காட்டில் தனிமையில் வசித்தால் பாவம் ஜனாதிபதி என்னதான் செய்வார்? பிரச்னை என்னவென்று தெரிவிப்பது உங்கள் பொறுப்புதானே?”

“உனக்கு புத்தி பேதலித்துவிட்டது போலும்! அதுதான் இப்படி பேசுகிறாய்! ஊரைவிட்டு ஒதுங்கிய பகுதி என்றால், உமர் இதை தமது ஆட்சி, அதிகாரத்தில் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும்?”

இதுவரை மூதாட்டியின் கோபமான பேச்சை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி உமரின் விழிகள் குளமாயின. முத்துமுத்தாய் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தமது அதிகாரத்துக்கு உட்பட்ட மக்களின் நலன்கள் குறித்து மறுமையில் இறைவன் கேட்கும் கேள்விக்கு தாம் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற அச்ச உணர்வு அவரை நடுங்கச் செய்தது.

நீண்ட நேரம் அழுதவாறு நின்ற ஜனாதிபதி உமர், “பாட்டி நீங்கள் சொன்னது சரிதான்!” என்று கரகரத்த குரலில் சொல்லிவிட்டு குதிரையேறி புறப்பட்டார்.

அழுகையும், புலம்பலுமாய் அந்தப் பயணம் தொடர்ந்தது.

தலைநகர் மதீனாவை அடைந்ததும் உமரின் முதல் அரசாணை மூதாட்டியின் நிவாரணத்துக்கானதாக இருந்தது. அதன் பிறகுதான் அவரது மனம் சமாதானம் அடைந்தது.

தனது ஆளுகைக்கு உட்பட்ட யூப்ரடீஸ் நதிக்கரையோரம் இருக்கும் ஓர் ஆட்டுக்குட்டிக்கு உணவு கிடைக்கவில்லையெறால்கூட, மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்குமென்று நள்ளிரவுகளில் ஜனாதிபதி உமர் அழுது புலம்பிக் கொண்டிருப்பாராம்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 10.12.2015 அன்று பிரசுரமான எனது கட்டுரை)

No comments:

Post a Comment