Friday, November 20, 2015

மாற்றான் தோட்டத்து மல்லிகை: பாரீஸ் பயங்கரம் சொல்லும் பாடம்

"அதற்கான முதல் நடவடிக்கை நா காப்பது. மத உணர்வுகளைக் கொம்பு சீவி விடும் விதத்திலோ, மற்ற மதத்தினர் ஆத்திரமோ, அச்சமோ கொள்ளும் வகையிலோ பொது அரங்கில் கருத்துகள் உதிர்க்காமல் இருப்பது நாட்டிற்கு நல்லது. அச்சம், ஆத்திரம், ஆணவம் இவைதான் பதற்றத்தின் விதைகள். 

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கலாசாரக் காவலர்கள், ஊடகங்கள், அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். அவர்களிடம் அப்பாவிப் பொதுமக்களாகிய நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல், சற்று வாயை மூடிக் கொண்டிருங்கள்." - மாலன்

'''''''''''''''''''''''' 

தமிழகம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் செய்திகள் நாளிதழ்களை நனைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஊடகங்களுக்குக் கிடைத்த ஒரு சூடான செய்தி பாரீஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல். ஏழாண்டுகளுக்கு முன், 2008-ஆம் ஆண்டு இதேபோல ஒரு நவம்பர் மாதத்தில், சென்னையை நிஷா புயல் அச்சுறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாரீஸ் சம்பவத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டு இடங்களிலும் அரசியல் பகைமையின் காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மும்பையில் மக்கள் பெருமளவில் வந்து போகும் ரயில் நிலையத்தில், பாரீஸில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த விளையாட்டரங்கில், உணவகத்தில், அரசியலின் பெயரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல, சாதாரணப் பொதுமக்கள்தான்.

இந்த இரு தாக்குதல்களும் எல்லைகளுக்கு அப்பால் இருந்து வந்தவர்களால் நிகழ்த்தப்பட்டன. இரண்டிற்குப் பின்னாலும் பெரிய அளவில் நுட்பமான திட்டமிடல் இருந்தது. இந்தத் தாக்குதல்களை அரங்கேற்றிய அமைப்புகள்தான் வேறு வேறு. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானால் ஏவி விடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். பாரீஸில் தாக்குதல் நடத்தியவர்கள், தங்களைத் தனி அரசு என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ். அமைப்பு.

பாரீஸ் சம்பவங்களுக்கு, மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்குமிடையே நிகழ்ந்து வரும் மோதல்தான் காரணம் என்ற போதிலும், மும்பை சம்பவத்தை நினைவில் கொண்டு பார்க்கும் போது, இந்தியாவுக்கும் ஓர் எச்சரிக்கை அதில் புதைந்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். என்ன அந்த எச்சரிக்கை மணி?

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை பத்தாண்டுகளுக்கு மேல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவை நடத்தி வந்த போதிலும், அவை எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை. மாறாக, வெட்ட வெட்ட முளைக்கிற மயில்ராவணன் தலை போல, அது கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் வெளிப்பட்டிருக்கிறது.

2001-இல் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடங்கியது. ஆனால், 2004-இல் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் தாக்குதல் (191 பேர் பலி), 2005-இல் லண்டன் (இருமுறை), 2006 ஸ்பெயின் (7 முறை), 2007 அல்ஜீரியா, 2008 மும்பை, 2009 பெஷாவர், லாகூர் (பாகிஸ்தான்), 2010 மாஸ்கோ (ரஷியா), 2011 நார்வே, 2012 பிரான்ஸ், 2014 சிட்னி, ஆஸ்திரேலியா, பிரஸ்ஸல்ஸ், போர்ச்சுகல் என ஆண்டுதோறும் அது எங்கேனும் தலைவிரித்தாடியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், பயங்கரவாதம் என்பது ஓர் அரசுக்கெதிராக ஒரு நாட்டிற்குள் நடக்கும் கொரில்லா வகைத்தாக்குதல் என்ற நிலையிலிருந்து, எந்த நாட்டிலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று மாறிவிட்டது. அரசுகளுக்கு மாறாக அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைப்பதன் மூலமாக அச்சத்தையும், பதற்றத்தையும் பரப்பவேண்டும் என்று அதன் நோக்கமும் மாறிவிட்டது.

பாரீஸ் தாக்குதல்களை இந்தவிதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். அதை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், சிரியாவை நோக்கிப் பயணிக்க வேண்டும். மேற்காசியாவில் உள்ள சிரியா, நெடிய வரலாறும் சிறிய பரப்பளவும் கொண்ட நாடு. அங்குள்ள டெமாஸ்கஸ் நம் மதுரையைப் போல் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று.

9,000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அங்கு மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன (மதுரையில் கி.மு.500-லிருந்து வாழ்ந்து வருகிறார்கள்).

மேற்கே மத்தியதரைக் கடல், லெபனான், கிழக்கே இராக், வடக்கே துருக்கி, தெற்கே ஜோர்டான் ஆகியவற்றால் சூழப்பட்ட தேசம். மக்கள்தொகை இரண்டு கோடிக்கும் கீழ். வளமான மலைகளும், சமவெளிகளும், அதேசமயம் பாலைவனங்களும் கொண்ட நாடு.

இந்தியாவைப் போலவே பல இனத்தவர்களும் பல மதத்தவரும் வாழ்கிறார்கள். அரேபியர்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், துருக்கியர்கள், அசிரியர்கள், குர்துகள் எனப் பல இனத்தவர்களின் வாழ்விடமாக இருந்து வருகிறது சிரியா. இந்தியாவின் சிந்து வெளி நாகரிகத்தைப் போலவே, தொன்மையான நாகரிகமான மெசபடோமிய நாகரிகம் தோன்றித் தழைத்த நாடு.

செல்லம் கொடுத்து வளர்க்கும் குழந்தை தறுதலையாகும். செல்லம் கொடுக்காமல் வளர்க்கும் குழந்தை ரவுடியாகும். ஜனநாயகத்தால் கெட்ட நாடு இந்தியா. ஜனநாயகம் இல்லாமல் கெட்ட நாடு சிரியா.

பாஷா(ர்) அல் அசாட் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். அதற்கு முன் அவரது தந்தை 30 ஆண்டுகள் அதிபராக இருந்து வந்தார். அதிபர் என்று சொன்னாலும் அங்கு ஜனநாயகம் இல்லை. 1963-லிருந்து 2011 வரை தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் நெருக்கடிநிலை அமலில் இருந்தது.

அதிக சுதந்திரம் கோரி ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரம் சிறு குழுக்கள் அரசுக்தெதிராகப் போராடி வருகின்றன. அவர்களுக்குப் பொதுவான அமைப்போ, தலைமையோ கிடையாது.

2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அவர்கள் செய்த குற்றம், அரசுக்கெதிரான வாசகங்களை சுவரில் கிறுக்கியது. அதைக் கண்டித்து மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. நான்கு பேர் இறந்து போனார்கள். அவர்களது இறுதிச் சடங்கின் போதும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இனிப் பொறுப்பதில்லை என்று மக்கள் ஆயுதம் ஏந்தியப் போராட்டத்தில் இறங்கினார்கள். நாடெங்கும் ரத்தக் களறி.

ஒரு கட்டத்தில் இந்த உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தியது யார் என்பது குறித்த பட்டிமன்றம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அரசுத் தரப்புத்தான் பயன்படுத்தியது என்பது கிளர்ச்சியாளர்களின் குற்றச்சாட்டு, இல்லவே இல்லை என்கிறது அரசு.

இந்தக் குழப்பங்களுக்கிடையே 2014-இல், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் சிலவற்றை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதை மேலும் முன்னேறவிடாமல் தடுக்க, 2014 செப்டம்பரில் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை விமானத் தாக்குதல்கள் நடத்தின.

முன்னொரு காலத்தில் அதாவது, முதலாம் உலகப் போரின்போது பிரெஞ்சுச்காரர்கள் பிடியில் இருந்த நாடு சிரியா என்பதால், பிரான்ஸ் இந்தத் தாக்குதலில் முன்னிலை வகித்தது.

இவற்றால் எல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்கள். குறிப்பாகக் குழந்தைகள். பாதிக்கப்பட்ட மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள். சுமார் 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்குக் குடிபெயர்ந்திருப்பதாக ஒரு கணக்குச் சொல்கிறது. 80 லட்சம் பேர் சிரியாவிற்குள்ளேயே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

பாரீஸில் நிகழ்ந்த பயங்கரவாதம் சிரியாவில் தலையிட்ட பிரான்ஸிற்குக் கொடுக்கப்பட்ட பதிலடி என்கிறார்கள். சம்பவத்திற்குப் பின்னால் சிரியா நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். அமைப்பினர் உள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் சிரிய நாட்டு கடவுச் சீட்டுகள் இருந்தன.

இது வெறும் பயங்கரவாதச் செயல் அல்ல. எங்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். இதற்கு இரக்கமின்றி பதிலடி கொடுப்போம் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதுவரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எதிர்பார்த்த பலன்களை அளிக்காத நிலையில், இந்தப் புதிய இரக்கமற்ற போர் வேறு பல நாடுகளில் பயங்கரவாதச் சம்பவங்கள் நடக்கவே வழி வகுக்கும்.

ஐ.எஸ். அமைப்பின் எதிரிகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போல நம்மிடம் வலுவான உளவறியும் அமைப்பு இல்லை என்பது யதார்த்தம். ஏற்கெனவே பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவில் நடந்தேறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதற்கான முதல் நடவடிக்கை நா காப்பது. மத உணர்வுகளைக் கொம்பு சீவி விடும் விதத்திலோ, மற்ற மதத்தினர் ஆத்திரமோ, அச்சமோ கொள்ளும் வகையிலோ பொது அரங்கில் கருத்துகள் உதிர்க்காமல் இருப்பது நாட்டிற்கு நல்லது. அச்சம், ஆத்திரம், ஆணவம் இவைதான் பதற்றத்தின் விதைகள்.

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கலாசாரக் காவலர்கள், ஊடகங்கள், அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். அவர்களிடம் அப்பாவிப் பொதுமக்களாகிய நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல், சற்று வாயை மூடிக் கொண்டிருங்கள்.

இது அச்சத்தினால் எழுந்த வேண்டுகோளாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை.

செல்லம் கொடுத்து வளர்க்கும் குழந்தை தறுதலையாகும். செல்லம் கொடுக்காமல் வளர்க்கும் குழந்தை ரவுடியாகும். ஜனநாயகத்தால் கெட்ட நாடு இந்தியா. ஜனநாயகம் இல்லாமல் கெட்ட நாடு சிரியா.

நன்றி: தினமணி (20.11.2015)

No comments:

Post a Comment