Thursday, November 19, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 12: 'குற்றம்.. குற்றமே!'நபிகளாரை காலம்தோறும் சிலர் வெறுக்கிறார்களே.. ஏன்? அன்பு நபிகளார் மீது புழுதி வாரி இறைக்கிறார்களே.. ஏன்?

வானத்து முழு நிலவை.. கோடையின் குளிர் தென்றலை...  அறியாமையில்.... வெறுப்புவர்களுக்கு இது சமர்ப்பணம்.


மக்கா வாழ் கோத்திரங்களில் உயர்ந்தது 'மக்ஸீம்' கோத்திரம். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி ஒரு திருட்டுக் குற்றம் செய்து விட்டாள். அவளது பெயர் ஃபாத்திமா.

நபி பெருமானாரின் அன்பு மகளராது பெயரும் ஃபாத்திமாதான்!

மக்ஸீம் கோத்திரத்துப் பெண் கடும் தண்டனைப் பெறுவதை அந்தக் கோத்திரத்தார் விரும்பவில்லை.

மக்காவில் இஸ்லாத்தின் வருகைக்கு முன் ஒவ்வொரு குலம், கோத்திரம் இவைகளின் நடப்பு செல்வாக்குகளுக்கு ஏற்றாற் போல சட்டங்களும் இருந்தன. அவரவர் தேவைக்கேற்ப அவை நெளிந்து.. வளைந்து கொடுத்தன.

ஆனால், "ஓர் இறை..! ஓர் நிறை...!!"- என்ற முழக்கத்துடன் கால் பதித்த இஸ்லாம், 'சட்டங்கள் அனைவருக்கும் சமம்!'-என்று அழுத்தம் திருத்தமாக கூறியது. அத்துடன் நில்லாமல் எவ்விதப் பாரபட்சமும் இன்றி, அவை அமல்படுத்தவும்பட்டன.

புதிதாக இஸ்லாத்தை தழுவிய மக்களால் இதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

"இது எப்படிச் சாத்தியம்? உயர்குடியைச் சேர்ந்த நமது பெண், சாதாரணமான மக்களைப் போல தண்டனை பெறுவதா? இல்லை.. இது சரியில்லை..எப்படியாவது... என்ன விலைக் கொடுத்தாவது இவளைக் காப்பாற்றிட வேண்டும்!"-என்று எண்ணியவர்கள் அதற்கான வழி ஏதும் புரியாமல் குழம்பினார்கள்.

நபிகளாரின் பணியாளர், வளர்ப்பு மகனார், ஆரம்பக் காலத்தில் நாலாவது நபராக இஸ்லாத்தைத் தழுவியவர் ஜைது. அவரது பிள்ளையின் பெயர் உஸாமா.

சிறுவர் உஸாமா மீது நபிகளாருக்குக் கொள்ளை விருப்பம். இதைத் தெரிந்து வைத்திருந்த மக்ஸீம் கோத்திரத்தார், உஸாமா மூலமாக நபிகளாரிடம் சிபாரிசு அனுப்ப முடிவெடுத்தார்கள்.

"உஸாமா.. இதோ ஃபாத்திமாவைப் பாருங்கள். அப்பாவிப் பெண். இவளையா சராசரி நபர்களைப் போல தண்டிப்பது? இது தகுமா? இந்த தண்டனை உயர்க்குடி மக்களான எங்களுக்கு அவமானம் தராதா?

தயவு செய்து நீர்தான் சமயம் பார்த்து இதை நபிகளாரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். தண்டனை இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்!" -என்று உருக்கமான கோரிக்கை வைத்தனர்.

அறியாத பருவத்துப் பிள்ளையான உஸாமாவிடம் ஏதேதோ சொல்லி ஃபாத்திமாவின் குற்றத்துக்குத் தண்டனை இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். கடைசியில் அவரை உடன்படவும் செய்தார்கள்.

நல்லதொரு சந்தர்பத்தில் சிறுவர் உஸாமா திக்கித் தடுமாறி விபரீதத்தின் விளைவைப் புரிந்து கொள்ளாமல் நபிகளாரிடம் சொல்லியும் விட்டார்.

"இறைவனின் திருத்தூதரே, தங்களது அன்பு மகளின் பெயர் கொண்ட ஒரு அப்பாவிப் பெண் அவள்! திருட்டுக் குற்றத்துக்காக தண்டனை பெற இருக்கிறாள். மக்ஸீம் கோத்திரம் போன்ற உயர்குடி மக்கள் தண்டனைப் பெறலாமா? அதனால்... அதனால்.. தயவு.. செய்து.. அவளது தண்டனையை ரத்து செய்ய வேண்டும்!"

இதைக் கேட்டதும் நபிகளாரின் திரு முகம் கோவைப் பழமாய்ச் சிவந்து விட்டது.

உஸாமா, தான் ஏதோ வம்பில் சிக்கிக் கொண்ட உணர்வுடன் பாவம்.. தலைக் குனிந்து கொண்டார்.

"உஸாமா, என் அன்புக்குரியவன் நீ .. உண்மைதான்! ஆனால், நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்.. தெரியுமா.? இறைச் சட்டங்களை வளைக்கச் சொல்கிறாய்..அதுவும் குற்றவாளி உயர்குடியைச் சேர்ந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக!" - என்றார்கள் நபிகளார்.

அன்று மாலை.. பள்ளியில் தொழுகை முடிந்ததும் நபிகளார் எழுந்து நின்றார்கள்.

"பரம்பொருளே.. பெரியது..! அல்லாஹீ அக்பர்..என்று முழங்கினார். பிறகு பேசத் தொடங்கினார்கள்:

"மக்களே, நமக்கு முன்னிருந்த பல நாடுகளும், சமூகங்களும் அழிந்து போனதற்குக் காரணம்.. அவர்கள் ஒரே குற்றத்துக்காக இரண்டு விதமான அளவுகோல்கள் கடைப்பிடித்ததுதான்! வேண்டியவர்.. வேண்டாதவர்.. என்று ஆளாளுக்கு சட்டங்களை வளைத்ததுதான்!

யாருடைய கையில் என் உயிர் இருக்கிறதோ.. அந்த இறைவன் மீது ஆணையாக..! ஃபாத்திமா.. எனது மகள் ஃபாத்திமாவே தவறு செய்திருப்பினும் குற்றம் குற்றமே..! குற்றம் குற்றமே..!!"

"இறைநம்பிக்கைக் கொண்டவர்களே, நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும், இறைவனுக்காக சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும் உங்களுக்கோ.. உங்கள் பெற்றோருக்கோ.. நெருங்கிய உறவினருக்கோ.. பாதகமாக இருந்தாலும் சரியே..!" (4:135)

அன்பு நபி திருக்குர்ஆனின் மேற்கண்ட திருவசனங்களுக்கு ஒப்ப உன்னத சமுதாய அமைப்பை உருவாக்கிக் காட்டியது அன்னாரை எதிர்ப்பவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ..?

-  இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்..


முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html

10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html

11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html

No comments:

Post a Comment