Thursday, November 26, 2015

இறைவன் அழைக்கின்றான்: 'நாளைய தினத்திற்காக தயாரா?'

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள்.  மேலும், ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்திற்காக எதனை தயார் செய்து வைத்திருக்கிறான் என்று பார்க்கட்டும்! இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்பவை அனைத்தையும் திண்ணமாக இறைவன் அறிபவனாக இருக்கின்றான்" (திருக்குர்ஆன்)

நிகழ்வுகள்: பந்தாடப்படும் மதச்சார்பின்மை


பருவக்காலம் தொடங்கிவிட்டது. ஆம்..! மதச்சார்பின்மை பருவம் தொடங்கிவிட்டது. எதிர்பார்த்தது போலவே, வியாழக்கிழமை (26.11.2015) தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை கால்பந்தாட்ட களத்தின் பந்தானது.

1949-ஆம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 26) இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததன் நினைவாகவும், சட்டமேதை அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினத்தை ஒட்டியும், மக்களவையில் 2 நாள் சிறப்பு விவாதம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், ‘மதச்சார்பின்மை’ திரித்துப் பொருள்கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்து  அவர் பேசியதாவது:

அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தில் "மதச்சார்பின்மை' "சோஷலிசம்' என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைகளைச் சேர்ப்பது அவசியம் என அம்பேத்கர் கருதவில்லை.

அதன்பிறகு 1976-ஆம் ஆண்டில்தான், 42-ஆவது சட்டத் திருத்தம் மூலமாக, "மதச்சார்பின்மை', "சோஷலிசம்' என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவின் இயல்பிலேயே அமைந்துள்ளது.

ஆனால், "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை தற்போது திரித்துப் பொருள்கொள்ளப்பட்டு, மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

ஏனெனில், "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுவதால், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், சமூக ஒற்றுமையைப் பராமரிப்பது சிரமமாக உள்ளது.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஜாதி, இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பு அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

72 பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்பாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.

அவமதிப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிப்புகளுக்கு ஆளான அம்பேத்கர், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு முறை கூட யோசித்ததில்லை - என்று ராஜ்நாத் சிங் கூறினார்.


இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசுவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தகுதியில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு விவாதத்தின்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசிய உரையின் முக்கிய அம்சங்கள்:

சகிப்பின்மை காரணமாக அண்மையில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

நமது அரசமைப்புச் சட்டத்தின் மீது பாஜகவினர் நம்பிக்கை வைக்கவில்லை. அதை உருவாக்குவதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடுகிறார்கள். அதன் மீது விவாதமும் நடத்துகிறார்கள். இது கேலிக்குரியதாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளும், அதன் தத்துவங்களும் தற்போது அச்சுறுத்தலில் உள்ளன. நமது அரசமைப்புச் சட்டம் நெகிழ்வுத் தன்மை கொண்டது. இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதில், சந்தேகம் ஏதுமில்லை.

ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில், அரசுக்கும், அதன் பிரதிநிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

அரசமைப்புச் சட்டம் சிறப்பாக இருந்தாலும், அதை அமல்படுத்துவோர் தீயவர்களாக இருந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை சட்டமேதை அம்பேத்கர் முன்பே கூறியிருக்கிறார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் கல்வியை முடித்து நாடு திரும்பிய அம்பேத்கரின் தனித்திறமைகளை அறிந்த காங்கிரஸ் கட்சி, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அவரைத் தேர்வு செய்தது.

சிறந்த தலைமை இல்லாதிருந்தால், அரசமைப்புச் சட்டத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கமுடியாது என்று அம்பேத்கரை டாக்டர் ராஜேந்திர பிரசாத் பாராட்டினார் என்றார் சோனியா காந்தி.

மக்களவையில் வியாழக்கிழமை மாலை 7 மணி வரை இந்த விவாதம் நீடித்தது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த விவாதத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை இலக்கியம்: சிறுவர் கதை: 'பொய் சொல்லக்கூடாது பாப்பா!'பொற்கொடியைப் பார்க்க தமிழரசி வந்தாள்.

தமிழ் நோட்டுப் புத்தகம் கேட்டாள்.

தமிழரசிக்கு விருப்பமில்லை. அதனால், அதை "கண்ணகி வாங்கிப் போனாப்பா!" - கூசாமல் பொய் சொன்னாள் அவள்.

"சரி.. சரி.. நீ படிப்பா.. வேறே யாரிடமாவது வாங்கிக்கிறேன்.."

தமிழரசி கேட்டைத் தாண்டியதும், அவள் கேட்ட நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைக்க பொற்கொடி எழுந்தாள்.

அந்த நேரம் பார்த்து, "மாமி! அம்மா ரெண்டு தக்காளி கேட்டாங்க!" - என்றவாறு மீண்டும் வந்தாள் தமிழரசி.

புத்தகம் எங்கே அவள் கண்ணில் படப்போகிறதோ என்று பயந்து போனாள் பொற்கொடி. அவசரம் அவசரமாக அதை சோபாவுக்கு அடியில் தள்ளினாள். நெஞ்சு படபடத்தது; உடல் வியர்த்தது.

தமிழரசி தக்காளி வாங்கிச் செல்லும்வரை பொற்கொடிக்குக்குப்  படிப்பில் கவனம் செல்லவில்லை. சில முக்கியமான பாடங்களுக்கான விடைகளை மறுநாள் வகுப்பாசிரியையிடம் ஒப்புவிக்க வேண்டும். இருப்பினும் அவளது மனம் படிப்பில் முழு ஈடுபாடு கொள்ளவில்லை.

தேவையில்லாமல் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. பொய் சொன்னதற்காக உள்ளம் உறுத்தியது. பேசாமல் தமிழரசி கேட்ட நோட்டைக் கொடுத்திருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

"பொற்கொடி! கொஞ்சம் காலை மேலே தூக்கிக்க! எவ்வளவு தூசி!" - என்றவாறு அம்மா சோபாவுக்கு அடியில் துடைப்பதால் பெருக்க மறைத்து வைத்திருந்த நோட்டுப் புத்தகம் வெளியில் வந்தது.

"இது என்னடி புத்தகம்?"-என்று அம்மா நீட்டவும், "மாமி.. மாமி..!"-என்றவாறு தமிழரசி வரவும் சரியாக இருந்தது.

பதறிப்போன பொற்கொடி, "அதைக் கொடும்மா இப்படி.."- என்று வாங்கிக் கொண்டு உள்ளறைக்கு ஓடினாள். அம்மாவும், தமிழரசியும் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தனர்.

சற்று நேரம் கழித்து வந்த பொற்கொடியிடம் அம்மா, "என்னடி அது?"- என்றாள்.

"ஒன்னுமில்லேம்மா.. இங்கிலீஷ் புக்"-என்று மறுபடியும் பொய் சொன்னாள் பொற்கொடி.

இரவு உணவுக்குப் பின் படிக்கலாம் என்று நினைத்தவளுக்குத் தூக்கம்தான் வந்தது.

அடுத்த நாள்.

பாடங்களைப் படிக்காததால்.. ஆசிரியையிடம் அடி கிடைத்தது.

பொய் சொன்னதால்.. தமிழரசியிடம் சகஜமாக பழக முடி யாமல் போனது.

பொற்கொடி ஒரு பொய் சொன்னாள்.

அந்த ஒரு பொய்யை மறைக்கப் பல பொய்கள் சொல்ல வேண்டிவந்தது.

கூட உடலும்-உள்ளமும் பாதிக்கப்பட்டது.

உண்மை பேசியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது!

அதானல், எப்போதும் நாம் உண்மையே பேச வேண்டும்.

(தினமணிகதிர் குழந்தை இலக்கியத்தில் வெளியான எனது சிறார் கதை)


இஸ்லாம் வாழ்வியல்: கண்ணீர் விட்ட ஒட்டகம்!


மதீனா மாநகரம்!  நகரைச் சுற்றியும் அடர்த்தியான பேரீச்சைத் தோட்டங்கள். சூரிய ஒளி ஊடுருவ முடியாதவாறு பசுங்குடையாய் படர்ந்திருந்தது நிழல். வெய்யிலின் வெம்மை தெரியாத அங்கே பகல் பொழுது ஜிலு.. ஜிலுவென்று குளிர்ச்சியாக இருக்கும்!

மதீனாவாசிகள்  வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்துக்க கொள்ள இத்தகைய மரத் தோட்ட  நிழலில் களைப்பாறுவார்கள். நேரம் போவதே தெரியாமல் பேசி மகிழ்வார்கள்.

ஒருநாள்.

நபிகளார் அவ்வழியே சென்றார். வழியிலிருந்த தோட்டத்தில் நுழைந்தார்.

தோட்டத்தின் ஒரு மூலையில் ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை நபிகளார் கண்டார்.

ஒட்டகம் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. அதனிடமிருந்து பரிதாபமான முனகல் சத்தம் கேட்டது.

நபிகளார் ஒட்டகத்தின் அருகில் சென்றார்.

ஒட்டகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் அழுததன் அடையாளமாக அதன் முகத்தில், தாரைத்தாரையாக ஈரக் கோடுகள் படிந்திருந்தன. எலும்பும்-தோலுமாய்  ஒட்டகம்  மெலிந்து காணப்பட்டது.

இந்தக் காட்சியைக் கண்டதும், நபிகளாரின் மனம் பதறிவிட்டது.  ஒட்டகத்தின் நிலைமை அன்னாரை கலங்கடித்தது.

நபிகளார் ஒட்டகத்தை பரிவுடன் தடவிக் கொடுத்தார். அதன் கண்ணீரை துடைத்து விட்டார்.


அந்த இதமான வருடல் ஒட்டகத்தின் அழுகையை நிறுத்தியது. முணுகலும் நின்று போனது! மகிழ்ச்சி அடைந்ததற்கு அடையாளமாக ஒருவிதமான சத்தத்தையும் எழுப்பியது.

நபிகளார் தோட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தார். "இதன் உரிமையாளர் யார்?" - என்று விசாரித்தார்.

அதைக் கேட்டு ஒட்டகத்தின் உரிமையாளர் நபிகளாரிடம் ஓடோடி வந்தார். "இறைவனின் திருத்தூதரே!  நான் தான் இதன் உரிமையாளன்!" – என்றார்.

ஒட்டகம் சரியான பராமரிப்பு இல்லாமல் மெலிந்திருக்கிறது. அதிக பணிச் சுமைத் தாங்காமல் பலவீனமாகி விட்டது. அதற்கு போதுமான தீவனம் இல்லை. குடிக்கத் தண்ணீரும் வைக்கவில்லை.

நபிகளார் இதை எல்லாம் ஒட்டகத்தின் உரிமையாளரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் ஒட்டகத்திடம் கொடுமையாக நடந்து கொண்ட விதத்தை நபிகளார் சுட்டிக் காட்டினார்.

“இந்த வாயில்லாத ஜீவனான ஒட்டகத்தின் விஷயத்தில் இறைவனின் பயம் உமக்கு ஏற்படவில்லையா?" - என்று கேட்டார்.

கடைசியில், ஒட்டகத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அதன் உரிமையாளரிடம் நபிகளார் அறிவுறுத்தினார்.

ஒட்டகத்தின் உரிமையாளர் தனது தவறை புரிந்து கொண்டார்.

"நான் தவறு செய்துவிட்டேன். நான் எனது தவறுக்காக வருந்துகிறேன் இறைவனின் திருத்தூதரே!" - என்றார் அவர் சோகத்துடன்.

‘எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டு!’ - என்பது நபிகளாரின் செயலுருவ போதனை!

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
(26.11.2015 அன்றைய தி இந்து, ஆனந்த ஜோதியில் பிரசுரமான எனது கட்டுரை)


Tuesday, November 24, 2015

இறைவன் அழைக்கின்றான்: 'நிம்மதி உங்கள் சாய்ஸ்'

 
ஒளி!

ஒளி நிஜமானது. அது இயல்பானது. இயற்கையாக இருப்பது. அது தடுக்கப்பட்டால்.. அந்காரம் அவதரிக்கும். மனிதனுள்ளும், சமூகத்துள்ளும் அந்த காரிருளை விரட்டுவதற்கு ஒளியைச் சுற்றியிருக்கும் திரையை.. தடுப்பை நீக்கிவிட்டால்.. போதும்.. இருள் அகன்று.. ஒளி பிறக்கும்!

மனிதன் இயல்பிலேயே சமூக ஜீவி. நல்லதை விரும்புபவன். தீயதை வெறுப்பவன். அவனுடைய நல்லியல்புகளை போதனைகள்.. பயிற்சிகள்.. சூழல்கள் போஷித்து வளர்க்கின்றன. இல்லாவிட்டால்.. அவை துருப்பிடித்த இரும்பாய் பயனற்றுப் போகும். சில நேரங்களில் அவனை தீமைகளின் பக்கம் இழுத்துச் சென்றுவிடும்.

நல்லவை செழித்து வளரும்போது, மனித வாழ்க்கை நன்மைகளால் பூத்துக் குலுங்கும். சமூகம் முழுக்க அமைதி தவழும். நன்மைகள் நசுக்கப்படும் போது, மேலெழுவது.. வளர்வது.. செழிப்பது தீமைகளே! அதன் விளைவாக உருவாவது நாற்றமெடுக்கும் வாழ்க்கை அமைப்பு. அமைதியை பறிகொடுத்த சமூகம். நிம்மதியைத் தொலைத்துவிட்ட மனங்கள், ஒழுக்கச் சூழல்கள் மாசுபடும்போது தனிநபர் வாழ்விலும், சமூகக் கூட்டு வாழ்விலும் காணக் கிடைப்பது.. செல்வாக்குப் பெறுவது.. கோலோச்சி நிற்பது.. தீமைகளே!

இப்படி தீமைகள் என்னும் காரிருள் நாற்புறமும் சுற்றிச் சூழும் போது, அவை கனத்த போர்வையாய்ப் படர்ந்து இருக்கும் போது.

நன்மைகள் என்னும் ஒளிக்கீற்று கூரான வாளாகி இருட்திரையைக் கிழித்துப் பேரொளிப் பிழம்பைப் பரவச் செய்யும்.

ஒவ்வொரு பொழுதின் உதயமும் இதைத்தான் நமக்கு அறிவிக்கிறது.

மனித வாழ்க்கையில் ஆன்மாவை ஒளிரச் செய்யும் பண்புகள் குறைந்துவிட்டன. மனதைத் தூய்மைப்படுத்தும் சிந்தனைகள் விலகிவிட்டன. அமைதியை உருவாக்கும் வாய்ப்புகள் அருகிவிட்டன. மனங்களுக்கு நிம்மதி அளிக்கும்.. அறியாமை இருளை விலக்கும் .. அறிவொளி தீபத்தை ஏற்றும், வாழ்க்கையை நேர்வழியில் செலுத்தும் வழிமுறைகளே இன்றைய அவசர.. அவசியத் தேவைகள்!

கருணைக் கடலான இறைவன் அந்த முக்கியத் தேவைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திக்கின்றான்; தனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) நபிகளார் மூலம் அருளியிருக்கின்றான்; வான்மறை திருக்குர்ஆன் வடிவில்!

குழப்பமடைந்த இருதயங்களுக்கு அமைதியை.. திருப்தியை.. உண்டாக்கும் வரப்பிரசாதத்தை அதில் குறிப்பிட்டிருக்கின்றான் இதோ!

"அறிந்து கொள்ளுங்கள்! இறைவனை நினைவு கூர்வதில்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன" (13:28)

ஆம்..!

இறைவனைப் போற்றி.. புகழ்ந்து அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தால்தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கிறது.

(01.08.2001 - ஒற்றுமை இதழில் வெளிவந்த எனது ஆக்கம்)

'''''''''''''''''''''''''''''''''''''''''
இதற்கு முந்தைய இணைப்புகளை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 001. இதுவே உன்னத அழைப்பு : http://ikhwanameer.blogspot.in/2015/10/1.html

002. இறையன்பைப் பெற்றுத் தரும் ஒரே வழி: http://ikhwanameer.blogspot.in/2015/11/2.html

Friday, November 20, 2015

மாற்றான் தோட்டத்து மல்லிகை: பாரீஸ் பயங்கரம் சொல்லும் பாடம்

"அதற்கான முதல் நடவடிக்கை நா காப்பது. மத உணர்வுகளைக் கொம்பு சீவி விடும் விதத்திலோ, மற்ற மதத்தினர் ஆத்திரமோ, அச்சமோ கொள்ளும் வகையிலோ பொது அரங்கில் கருத்துகள் உதிர்க்காமல் இருப்பது நாட்டிற்கு நல்லது. அச்சம், ஆத்திரம், ஆணவம் இவைதான் பதற்றத்தின் விதைகள். 

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கலாசாரக் காவலர்கள், ஊடகங்கள், அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். அவர்களிடம் அப்பாவிப் பொதுமக்களாகிய நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல், சற்று வாயை மூடிக் கொண்டிருங்கள்." - மாலன்

'''''''''''''''''''''''' 

தமிழகம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் செய்திகள் நாளிதழ்களை நனைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஊடகங்களுக்குக் கிடைத்த ஒரு சூடான செய்தி பாரீஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல். ஏழாண்டுகளுக்கு முன், 2008-ஆம் ஆண்டு இதேபோல ஒரு நவம்பர் மாதத்தில், சென்னையை நிஷா புயல் அச்சுறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாரீஸ் சம்பவத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டு இடங்களிலும் அரசியல் பகைமையின் காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மும்பையில் மக்கள் பெருமளவில் வந்து போகும் ரயில் நிலையத்தில், பாரீஸில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த விளையாட்டரங்கில், உணவகத்தில், அரசியலின் பெயரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல, சாதாரணப் பொதுமக்கள்தான்.

இந்த இரு தாக்குதல்களும் எல்லைகளுக்கு அப்பால் இருந்து வந்தவர்களால் நிகழ்த்தப்பட்டன. இரண்டிற்குப் பின்னாலும் பெரிய அளவில் நுட்பமான திட்டமிடல் இருந்தது. இந்தத் தாக்குதல்களை அரங்கேற்றிய அமைப்புகள்தான் வேறு வேறு. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானால் ஏவி விடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். பாரீஸில் தாக்குதல் நடத்தியவர்கள், தங்களைத் தனி அரசு என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ். அமைப்பு.

பாரீஸ் சம்பவங்களுக்கு, மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்குமிடையே நிகழ்ந்து வரும் மோதல்தான் காரணம் என்ற போதிலும், மும்பை சம்பவத்தை நினைவில் கொண்டு பார்க்கும் போது, இந்தியாவுக்கும் ஓர் எச்சரிக்கை அதில் புதைந்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். என்ன அந்த எச்சரிக்கை மணி?

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை பத்தாண்டுகளுக்கு மேல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவை நடத்தி வந்த போதிலும், அவை எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை. மாறாக, வெட்ட வெட்ட முளைக்கிற மயில்ராவணன் தலை போல, அது கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் வெளிப்பட்டிருக்கிறது.

2001-இல் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடங்கியது. ஆனால், 2004-இல் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் தாக்குதல் (191 பேர் பலி), 2005-இல் லண்டன் (இருமுறை), 2006 ஸ்பெயின் (7 முறை), 2007 அல்ஜீரியா, 2008 மும்பை, 2009 பெஷாவர், லாகூர் (பாகிஸ்தான்), 2010 மாஸ்கோ (ரஷியா), 2011 நார்வே, 2012 பிரான்ஸ், 2014 சிட்னி, ஆஸ்திரேலியா, பிரஸ்ஸல்ஸ், போர்ச்சுகல் என ஆண்டுதோறும் அது எங்கேனும் தலைவிரித்தாடியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், பயங்கரவாதம் என்பது ஓர் அரசுக்கெதிராக ஒரு நாட்டிற்குள் நடக்கும் கொரில்லா வகைத்தாக்குதல் என்ற நிலையிலிருந்து, எந்த நாட்டிலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று மாறிவிட்டது. அரசுகளுக்கு மாறாக அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைப்பதன் மூலமாக அச்சத்தையும், பதற்றத்தையும் பரப்பவேண்டும் என்று அதன் நோக்கமும் மாறிவிட்டது.

பாரீஸ் தாக்குதல்களை இந்தவிதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். அதை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், சிரியாவை நோக்கிப் பயணிக்க வேண்டும். மேற்காசியாவில் உள்ள சிரியா, நெடிய வரலாறும் சிறிய பரப்பளவும் கொண்ட நாடு. அங்குள்ள டெமாஸ்கஸ் நம் மதுரையைப் போல் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று.

9,000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அங்கு மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன (மதுரையில் கி.மு.500-லிருந்து வாழ்ந்து வருகிறார்கள்).

மேற்கே மத்தியதரைக் கடல், லெபனான், கிழக்கே இராக், வடக்கே துருக்கி, தெற்கே ஜோர்டான் ஆகியவற்றால் சூழப்பட்ட தேசம். மக்கள்தொகை இரண்டு கோடிக்கும் கீழ். வளமான மலைகளும், சமவெளிகளும், அதேசமயம் பாலைவனங்களும் கொண்ட நாடு.

இந்தியாவைப் போலவே பல இனத்தவர்களும் பல மதத்தவரும் வாழ்கிறார்கள். அரேபியர்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், துருக்கியர்கள், அசிரியர்கள், குர்துகள் எனப் பல இனத்தவர்களின் வாழ்விடமாக இருந்து வருகிறது சிரியா. இந்தியாவின் சிந்து வெளி நாகரிகத்தைப் போலவே, தொன்மையான நாகரிகமான மெசபடோமிய நாகரிகம் தோன்றித் தழைத்த நாடு.

செல்லம் கொடுத்து வளர்க்கும் குழந்தை தறுதலையாகும். செல்லம் கொடுக்காமல் வளர்க்கும் குழந்தை ரவுடியாகும். ஜனநாயகத்தால் கெட்ட நாடு இந்தியா. ஜனநாயகம் இல்லாமல் கெட்ட நாடு சிரியா.

பாஷா(ர்) அல் அசாட் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். அதற்கு முன் அவரது தந்தை 30 ஆண்டுகள் அதிபராக இருந்து வந்தார். அதிபர் என்று சொன்னாலும் அங்கு ஜனநாயகம் இல்லை. 1963-லிருந்து 2011 வரை தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் நெருக்கடிநிலை அமலில் இருந்தது.

அதிக சுதந்திரம் கோரி ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரம் சிறு குழுக்கள் அரசுக்தெதிராகப் போராடி வருகின்றன. அவர்களுக்குப் பொதுவான அமைப்போ, தலைமையோ கிடையாது.

2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அவர்கள் செய்த குற்றம், அரசுக்கெதிரான வாசகங்களை சுவரில் கிறுக்கியது. அதைக் கண்டித்து மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. நான்கு பேர் இறந்து போனார்கள். அவர்களது இறுதிச் சடங்கின் போதும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இனிப் பொறுப்பதில்லை என்று மக்கள் ஆயுதம் ஏந்தியப் போராட்டத்தில் இறங்கினார்கள். நாடெங்கும் ரத்தக் களறி.

ஒரு கட்டத்தில் இந்த உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தியது யார் என்பது குறித்த பட்டிமன்றம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அரசுத் தரப்புத்தான் பயன்படுத்தியது என்பது கிளர்ச்சியாளர்களின் குற்றச்சாட்டு, இல்லவே இல்லை என்கிறது அரசு.

இந்தக் குழப்பங்களுக்கிடையே 2014-இல், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் சிலவற்றை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதை மேலும் முன்னேறவிடாமல் தடுக்க, 2014 செப்டம்பரில் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை விமானத் தாக்குதல்கள் நடத்தின.

முன்னொரு காலத்தில் அதாவது, முதலாம் உலகப் போரின்போது பிரெஞ்சுச்காரர்கள் பிடியில் இருந்த நாடு சிரியா என்பதால், பிரான்ஸ் இந்தத் தாக்குதலில் முன்னிலை வகித்தது.

இவற்றால் எல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்கள். குறிப்பாகக் குழந்தைகள். பாதிக்கப்பட்ட மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள். சுமார் 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்குக் குடிபெயர்ந்திருப்பதாக ஒரு கணக்குச் சொல்கிறது. 80 லட்சம் பேர் சிரியாவிற்குள்ளேயே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

பாரீஸில் நிகழ்ந்த பயங்கரவாதம் சிரியாவில் தலையிட்ட பிரான்ஸிற்குக் கொடுக்கப்பட்ட பதிலடி என்கிறார்கள். சம்பவத்திற்குப் பின்னால் சிரியா நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். அமைப்பினர் உள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் சிரிய நாட்டு கடவுச் சீட்டுகள் இருந்தன.

இது வெறும் பயங்கரவாதச் செயல் அல்ல. எங்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். இதற்கு இரக்கமின்றி பதிலடி கொடுப்போம் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதுவரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எதிர்பார்த்த பலன்களை அளிக்காத நிலையில், இந்தப் புதிய இரக்கமற்ற போர் வேறு பல நாடுகளில் பயங்கரவாதச் சம்பவங்கள் நடக்கவே வழி வகுக்கும்.

ஐ.எஸ். அமைப்பின் எதிரிகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போல நம்மிடம் வலுவான உளவறியும் அமைப்பு இல்லை என்பது யதார்த்தம். ஏற்கெனவே பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவில் நடந்தேறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதற்கான முதல் நடவடிக்கை நா காப்பது. மத உணர்வுகளைக் கொம்பு சீவி விடும் விதத்திலோ, மற்ற மதத்தினர் ஆத்திரமோ, அச்சமோ கொள்ளும் வகையிலோ பொது அரங்கில் கருத்துகள் உதிர்க்காமல் இருப்பது நாட்டிற்கு நல்லது. அச்சம், ஆத்திரம், ஆணவம் இவைதான் பதற்றத்தின் விதைகள்.

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கலாசாரக் காவலர்கள், ஊடகங்கள், அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். அவர்களிடம் அப்பாவிப் பொதுமக்களாகிய நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல், சற்று வாயை மூடிக் கொண்டிருங்கள்.

இது அச்சத்தினால் எழுந்த வேண்டுகோளாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை.

செல்லம் கொடுத்து வளர்க்கும் குழந்தை தறுதலையாகும். செல்லம் கொடுக்காமல் வளர்க்கும் குழந்தை ரவுடியாகும். ஜனநாயகத்தால் கெட்ட நாடு இந்தியா. ஜனநாயகம் இல்லாமல் கெட்ட நாடு சிரியா.

நன்றி: தினமணி (20.11.2015)

இறைவன் அழைக்கின்றான் - 2: இறையன்பைப் பெற்றுத் தரும் ஒரே வழி'


இறை நம்பிக்கை என்பது பக்தி-பரவசங்கள் என்பதோ.. வெறும் புறத்தோற்றங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதோ அல்ல. இவை அகவாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவை.

இறை நம்பிக்கையும், இறை பக்தியும் கொண்ட மனிதனின் அகம் சதா தூய்மையாக இருப்பதுடன்.. அன்பு, கருணை, இரக்கம், மனிதநேயம் போன்ற உயர் பண்புகளால் நிரம்பி வழியும். தியாகம், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய நன்னெறிகளால் நிரம்பியதாக இருக்கும். கோபமும்-குரோதமும், பிணக்கும்-பூசல்களும், ஆவேசமும்-அகங்காரமும், பரம வைரிகளாக இருக்கும்.

அதனால், அப்படிப்பட்ட மனிதனின் நடத்தைகளும் கூட அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலிக்கும் விதமாக உயர்ந்ததாக இருக்கும். அவனது  சிந்தனையும் செயலும் குன்றிலிட்ட விளக்காக ஒளி வீசும்

இறைவன் தனது அடியார்களின் நம்பிக்கைகளுக்கு மட்டுமல்ல.. நடைமுறை வாழ்க்கைக்கும் வழிகாட்டியிருக்கின்றான்.  எண்ணங்களுக்கு மட்டுமல்ல.. செயல்களுக்கும் பாதை அமைத்துத் தந்திருக்கின்றான். வழிமுறைகள், கொள்கைகள் மட்டுமல்லாமல் அவற்றை செயல்படுத்திக் காட்ட ஏற்பாடும் செய்திருக்கின்றான்.

யதார்த்த பூர்வமான இந்த வாழ்வியல் திட்டம், மனிதன் உலகில் தோன்றிய நாள் முதற்கொண்டு ஒவ்வொரு கால கட்டத்திலும், அவனை வழிநடத்திக் கொண்டே வந்திருக்கின்றது.

இத்தகைய வாழ்வியல் நெறிமுறைகள், மனித சமூகம் உலகில் பரவியிருந்த இடமெல்லாம் எடுத்துச் சென்று சேர்க்கப்பட்டன. மனித குலம் முழுமைக்கும் பரப்பப்பட்டன. சத்தியத்தை எத்தி வைக்கும் அந்தத் தொடரின் இறுதியானவர்தான் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள்.

மனித இனம் இறையன்பையும், இறை நெருக்கத்தையும் பெற வேண்டும்  என்றால்.. நபிகளாரை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியேயில்லை!

"நபியே! மக்களிடம் நீர் கூறுவீராக: நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாய் இருந்தால்.. என்னைப் பின்பற்றுங்கள்; இறைவன் உங்களை நேசிப்பான். மேலும், உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். இறைவன் மன்னிப்பு வழங்குபவனும், பெரும் கருணையுடையவனுமாவான்!" (திருக்குர்ஆன்:3:31)

கேட்டீர்களா?

இறைவனை நேசிப்பதற்கும், அவன் மீது பக்தி பரவசம் கொள்வதற்கும் 'உரைகல்' அவனது திருத்தூதரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று இறைவன் சொல்வதை!

அத்துடன் நபிகளாரை நேசிப்பது இறைநேசத்தையும், பாவ மன்னிப்பையும் பெற்றுத் தருவதற்கு வழிகோலுகிறது.

- அழைப்பது தொடரும்


இதற்கு முந்தைய இணைப்புகளை வாசிக்க:

001. இதுவே உன்னத அழைப்பு : http://ikhwanameer.blogspot.in/2015/10/1.html

Thursday, November 19, 2015

கருத்துப்படம்: 'இந்த கொலைகள் ஏன்?'


"வெறும் பாலுணர்வு தூண்டுதலுக்கா? மருத்துவத்துக்கா? அல்லது பேராசைக்கா? எங்களை ஏன் கொல்கிறீர்கள்?"  கொம்புகளுக்காக, காண்டா மிருகங்கள் கொல்லப்படுவது சம்பந்தமாக, 'வனவிலங்குகள் நீதிக்கான ஆணையம்' வெளியிட்டிருந்த கருத்துப்படம் இது. 

- நன்றி: கார்ட்டூன் மூவ்மெண்ட்.

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 12: 'குற்றம்.. குற்றமே!'நபிகளாரை காலம்தோறும் சிலர் வெறுக்கிறார்களே.. ஏன்? அன்பு நபிகளார் மீது புழுதி வாரி இறைக்கிறார்களே.. ஏன்?

வானத்து முழு நிலவை.. கோடையின் குளிர் தென்றலை...  அறியாமையில்.... வெறுப்புவர்களுக்கு இது சமர்ப்பணம்.


மக்கா வாழ் கோத்திரங்களில் உயர்ந்தது 'மக்ஸீம்' கோத்திரம். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி ஒரு திருட்டுக் குற்றம் செய்து விட்டாள். அவளது பெயர் ஃபாத்திமா.

நபி பெருமானாரின் அன்பு மகளராது பெயரும் ஃபாத்திமாதான்!

மக்ஸீம் கோத்திரத்துப் பெண் கடும் தண்டனைப் பெறுவதை அந்தக் கோத்திரத்தார் விரும்பவில்லை.

மக்காவில் இஸ்லாத்தின் வருகைக்கு முன் ஒவ்வொரு குலம், கோத்திரம் இவைகளின் நடப்பு செல்வாக்குகளுக்கு ஏற்றாற் போல சட்டங்களும் இருந்தன. அவரவர் தேவைக்கேற்ப அவை நெளிந்து.. வளைந்து கொடுத்தன.

ஆனால், "ஓர் இறை..! ஓர் நிறை...!!"- என்ற முழக்கத்துடன் கால் பதித்த இஸ்லாம், 'சட்டங்கள் அனைவருக்கும் சமம்!'-என்று அழுத்தம் திருத்தமாக கூறியது. அத்துடன் நில்லாமல் எவ்விதப் பாரபட்சமும் இன்றி, அவை அமல்படுத்தவும்பட்டன.

புதிதாக இஸ்லாத்தை தழுவிய மக்களால் இதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

"இது எப்படிச் சாத்தியம்? உயர்குடியைச் சேர்ந்த நமது பெண், சாதாரணமான மக்களைப் போல தண்டனை பெறுவதா? இல்லை.. இது சரியில்லை..எப்படியாவது... என்ன விலைக் கொடுத்தாவது இவளைக் காப்பாற்றிட வேண்டும்!"-என்று எண்ணியவர்கள் அதற்கான வழி ஏதும் புரியாமல் குழம்பினார்கள்.

நபிகளாரின் பணியாளர், வளர்ப்பு மகனார், ஆரம்பக் காலத்தில் நாலாவது நபராக இஸ்லாத்தைத் தழுவியவர் ஜைது. அவரது பிள்ளையின் பெயர் உஸாமா.

சிறுவர் உஸாமா மீது நபிகளாருக்குக் கொள்ளை விருப்பம். இதைத் தெரிந்து வைத்திருந்த மக்ஸீம் கோத்திரத்தார், உஸாமா மூலமாக நபிகளாரிடம் சிபாரிசு அனுப்ப முடிவெடுத்தார்கள்.

"உஸாமா.. இதோ ஃபாத்திமாவைப் பாருங்கள். அப்பாவிப் பெண். இவளையா சராசரி நபர்களைப் போல தண்டிப்பது? இது தகுமா? இந்த தண்டனை உயர்க்குடி மக்களான எங்களுக்கு அவமானம் தராதா?

தயவு செய்து நீர்தான் சமயம் பார்த்து இதை நபிகளாரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். தண்டனை இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்!" -என்று உருக்கமான கோரிக்கை வைத்தனர்.

அறியாத பருவத்துப் பிள்ளையான உஸாமாவிடம் ஏதேதோ சொல்லி ஃபாத்திமாவின் குற்றத்துக்குத் தண்டனை இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். கடைசியில் அவரை உடன்படவும் செய்தார்கள்.

நல்லதொரு சந்தர்பத்தில் சிறுவர் உஸாமா திக்கித் தடுமாறி விபரீதத்தின் விளைவைப் புரிந்து கொள்ளாமல் நபிகளாரிடம் சொல்லியும் விட்டார்.

"இறைவனின் திருத்தூதரே, தங்களது அன்பு மகளின் பெயர் கொண்ட ஒரு அப்பாவிப் பெண் அவள்! திருட்டுக் குற்றத்துக்காக தண்டனை பெற இருக்கிறாள். மக்ஸீம் கோத்திரம் போன்ற உயர்குடி மக்கள் தண்டனைப் பெறலாமா? அதனால்... அதனால்.. தயவு.. செய்து.. அவளது தண்டனையை ரத்து செய்ய வேண்டும்!"

இதைக் கேட்டதும் நபிகளாரின் திரு முகம் கோவைப் பழமாய்ச் சிவந்து விட்டது.

உஸாமா, தான் ஏதோ வம்பில் சிக்கிக் கொண்ட உணர்வுடன் பாவம்.. தலைக் குனிந்து கொண்டார்.

"உஸாமா, என் அன்புக்குரியவன் நீ .. உண்மைதான்! ஆனால், நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்.. தெரியுமா.? இறைச் சட்டங்களை வளைக்கச் சொல்கிறாய்..அதுவும் குற்றவாளி உயர்குடியைச் சேர்ந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக!" - என்றார்கள் நபிகளார்.

அன்று மாலை.. பள்ளியில் தொழுகை முடிந்ததும் நபிகளார் எழுந்து நின்றார்கள்.

"பரம்பொருளே.. பெரியது..! அல்லாஹீ அக்பர்..என்று முழங்கினார். பிறகு பேசத் தொடங்கினார்கள்:

"மக்களே, நமக்கு முன்னிருந்த பல நாடுகளும், சமூகங்களும் அழிந்து போனதற்குக் காரணம்.. அவர்கள் ஒரே குற்றத்துக்காக இரண்டு விதமான அளவுகோல்கள் கடைப்பிடித்ததுதான்! வேண்டியவர்.. வேண்டாதவர்.. என்று ஆளாளுக்கு சட்டங்களை வளைத்ததுதான்!

யாருடைய கையில் என் உயிர் இருக்கிறதோ.. அந்த இறைவன் மீது ஆணையாக..! ஃபாத்திமா.. எனது மகள் ஃபாத்திமாவே தவறு செய்திருப்பினும் குற்றம் குற்றமே..! குற்றம் குற்றமே..!!"

"இறைநம்பிக்கைக் கொண்டவர்களே, நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும், இறைவனுக்காக சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும் உங்களுக்கோ.. உங்கள் பெற்றோருக்கோ.. நெருங்கிய உறவினருக்கோ.. பாதகமாக இருந்தாலும் சரியே..!" (4:135)

அன்பு நபி திருக்குர்ஆனின் மேற்கண்ட திருவசனங்களுக்கு ஒப்ப உன்னத சமுதாய அமைப்பை உருவாக்கிக் காட்டியது அன்னாரை எதிர்ப்பவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ..?

-  இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்..


முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html

10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html

11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html

Sunday, November 15, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 11: 'அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்?'"யாராக இருந்தால் என்ன? பாவம் அவர்கள்..! அவர்கள் என்ன எதிரிகளா போா்முனையில் கொல்வதற்கு! போர் வீரர்களா மோதுவதற்கு! போர் முனையில் கவனமாக இருக்க வேண்டாம்? ஐயகோ..! போரில் பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுவிட்டோமே?" - அழுதழுது துடித்தார் அவர்!

தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள அணு குண்டுகளை வீசி முதியோர்கள், பெண்கள், இயலாதோர், குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழல் என்று அனைத்தையும் அழித்த உலகத் தலைவர்கள் மத்தியில் அறியாமல் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக அந்த மாபெரும் தலைவர் கண்ணீர் சிந்தி அழுதாா். துடிதுடித்துப் போனாா் அண்ணல் நபிகளாா்.

குழந்தைகள் இறைவனின் அற்புதப் படைப்பு!

எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான் என்பதை நபி பெருமானார் தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டினார். அவர்கள் எல்லாக் குழந்தைகளையும் நேசித்தார். குழந்தைகள் நலனுக்காகப் பாடுபட்டார்.

குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால்.. அன்பு நபிகளாரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது!

அன்றும் அப்படிதான்!

போர்க்களத்திலிருந்து வந்த அந்தச் செய்தி நபிகளாரை மிகவும் பாதித்தது. மனதைக் கலங்கடித்தது.

"போர்க்களத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்ட சில சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள்!"- என்பதே அந்தச் செய்தி.

நபிகளார் அப்படி விரக்தி அடைந்து நபித்தோழர்கள் அதுவரையும் பார்த்ததே இல்லை.

"இறைவனின் தூதரே, தங்களின் வருத்தத்துக்கு என்ன காரணம் என்று நாங்கள் அறிந்து கொள்ளலாமா?" - என்று மெதுவாகக் கேட்கவும் செய்தார்கள்.

அத்தோடு நபிகளாரைச் சமாதானப்படுத்துவது போல, "போரில் கொல்லப்பட்டது நமது குழந்தைகள் அல்ல; எதிரிகளின் குழந்தைகள்! அதுவும் எதிா்பாராத விதமாக.... " - என்றார்கள் மெதுவாக தயங்கி.. தயங்கி.

ஆனால், நபித்தோழர்களின் வார்த்தைகள் நபிகளாருக்கு ஆறுதல் அளிக்கவில்லை. மாறாக, கோபமுறவே செய்தது.

"என்ன சொன்னீா்கள்? எதிாிகளின் குழந்தைகளா? அவா்கள் யாராக இருந்தால் என்ன? பாவம் அந்த குழந்தைகள்! அவர்கள் என்ன எதிரிகளா கொல்வதற்கு? போர்வீரர்களா மோதுவதற்கு? போர்முனையில் கவனமாக இருக்க வேண்டாமா? ஐயகோ! போரில் பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டு விட்டோமே!" - என்று அழுதழுது துடித்தார் நபிகளார்.

"... நினைவில் வையுங்கள்! தோழர்களே, நன்றாக நினைவில் வையுங்கள்!" - நபிகளாரின் குரலில் கடுமை குடிக்கொண்டது.

"....தோழர்களே, இதை நன்றாக நினைவில் வையுங்கள்! குழந்தைகள் அப்பாவிகள். எந்தப் பாவமும் செய்யாதவர்கள். போரிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாதவர்கள். அதனால், இனி குழந்தைகள் விஷயத்தில் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். என்ன புரிகிறதா?" - என்று அறிவுறுத்தினார் நபிகளார் தமது தோழர்களிடம் பெருமூச்சுவிட்டவாறே.

(படம் - சுபான் பீா் முஹம்மது)

- - - - இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... :http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html  

10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html

Thursday, November 12, 2015

இஸ்லாம் வாழ்வியல்: 'பேரருள் பிழம்பின் ஒளியிலே அடைக்கலம்!'ஒரு முறை அண்ணல் நபியின் துணைவியார் ஆயிஷா அம்மையார் கேட்கிறார்: "இறைவனின் திருத்தூதரே! உஹத் நாளைவிட மிகவும் நெருக்கடியான நாளொன்றை தாங்கள் சந்தித்திருக்கிறீர்களா?"

உஹத் போர்க்களம் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்துக்கு உயிர்-உடமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அறைகூவலாக அமைந்த ஒரு யுத்தக்களம். அதில் நபிகளார் படுகாயமுற்றார். அவரின் திருமுகம் குருதி மயமானது. புனித பல்லொன்றும் உடைந்து போனது. எதிரிகளின் அம்பொன்று  நபிகளாரின் தலைக்கவசத்தையும் துளைத்துச் சென்றது.

அத்தகைய பேராபத்து மிக்க போர்க்களத்தைவிட கொடிய அனுபவம் கொண்ட நாள் ஒன்றை கண்டதுண்டா?’ – என்றறிவதே ஆயிஷா அம்மையாரின் அவா.

அந்தக் கேள்விக்கு நபிகளார் இப்படி பதில் அளித்தார்: "ஆம், உஹதைவிட கொடிய நாளொன்று எதிர்படவே செய்தது ஆயிஷா. அது தாயிப்!"

மக்காவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த மலைவாசத்தலம் தாயிப். 10 ஆண்டுகள் மக்காவில் போதனைச் செய்தும் அதை யாரும் ஏற்காததால் நபிகளார் இன்னொரு களத்தை தேர்வு செய்கிறார்; அது தாயிப் நகரமாகும்.

தாயிப் நகரின் சகீப் கோத்திரத்து பெருந்தலைவர்களை நபிகளார் சந்திக்க திட்டமிட்டு அவர்களை அணுகவும் செய்தார். தமது போதனைகளை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர்களில் ஒருவர் சொன்னார்: "உம்மைவிட்டால் இறைவனுக்கு வேறு யாரும் தூதராக கிடைக்கவில்லையோ?" அடுத்தவரோ, "நீர் உண்மையிலேயே இறைத்தூதராக இருப்பின் எனக்கு உம்மோடு பேசத்தகுதியில்லை! அப்படி இல்லையென்றால்.. என்னோடு பேச உமக்குத் தகுதி இல்லை!"- என்றார் கிண்டலுடன். மூன்றாவது நபரோ இவர்களுக்குச் சற்றும் சளைத்தவராக இல்லை. சொன்னார்: "உம்மை இறைத்தூதராக ஏற்றுக் கொள்வதைவிட அந்த கஅபாவின் திரைச்சீலையை கிழித்தெறிந்துவிடுவேன்!"

நபிகளாரை அவமானப்படுத்தியதோடு, நில்லாமல், அவர் மீது வன்முறையாளர்களை ஏவிவிட்டார்கள். கேலி, கிண்டல், கூச்சல் ஆர்ப்பாட்டங்களோடு வெறி கொண்ட அந்த கூட்டம் நபிகளாரை தாயிப் நகரின் தெருக்களில் ஓட விட்டார்கள்.

சொல்லடியுடன், கல்லடியும் சேர நபிகளாரின் உடலெங்கும் குருதிமயம். காலணிகள் நனைந்து நபிகளாரை சறுக்கிவிட அவர் விழுவதும், எழுவதுமாய் அங்கிருந்து சென்றார். இந்தக் காட்சி ஊர் எல்லைவரைத் தொடர்ந்தது. இந்த சம்பவத்தை ஆயிஷா அம்மையாரிடம் விளக்கிக் கொண்டிருந்த நபிகளார், "அந்த சூழலில் நான் எங்கே சென்று தப்பித்துக் கொள்வது என்று திசைத் தெரியாமல் ஊருக்கு வெளியே இருந்த ஒரு திராட்சைத் தோப்புக்குள் தஞ்சம் புக வேண்டி வந்தது ஆயிஷா!"என்றார்.


கல்லடியால் உடல் வலிக்க, சொல்லடியால் மனம் அதைவிட வலிக்க நபிகளாரின் இருகரங்களும் வானத்தை நோக்கி விரிந்தன.

“ஓ! இறைவா!! எனது பலவீனத்தை, நாதியற்ற நிலையை, மக்கள் முன் எனக்குள்ள இழிநிலையை உன்னிடமே நான் முறையிடுகின்றேன். நீயே எனது எஜமானன். என்னை யாருடைய கையில் நீ ஒப்படைக்க போகிறாய்? என்னைத் துன்புறுத்தக்கூடிய தூரத்து அந்நியரிடமா? அல்லது என்னை எதிர்க்கவென நீ நாடியுள்ள ஒரு பகைவரிடமா? அதெற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. நீ மட்டும் என்னிடம் கோபம் கொண்டுவிடாதே! உனது உதவியை அகன்றதொரு பாதையாக மாற்றிவிடு! உன் பேரருள் பிழம்பின் ஒளியிலேயே நான் அடைக்கலம் தேடுகின்றேன். அதன் மூலமே அனைத்து இருள்களிலிருந்தும் ஒளி கிட்டுகின்றது. அதன் மூலமே இம்மை-மறுமை அம்சங்கள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. உனது கோபத்தை என் மீது இறக்கிவிடாதே! உன் சோதனை என்னைப் பீடிக்கச் செய்துவிடாதே! நீ திருப்தி அடையும்வரை என்னை நீ கடிந்து கொள்வாய்! உன் மூலமே அன்றி எந்தவொரு அதிகாரமும் சக்தியும் இல்லை எனக்கில்லை.”

இதற்கு பிறகு தமது தலைக்கு மேலாக கருமேகம் கறுத்து வருவதை நபிகளார் கண்டார். வானவர் தலைவர் நபிகளார் முன் தோன்றுகிறார்.

"முஹம்மதுவே! உமதிறைவன் உமது மக்கள் உம்மிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கண்டான். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் கேட்டுக் கொண்டான். உமக்கு உதவியாக என்னை அனுப்பிவைத்துள்ளான். இதோ இந்த மலைக்கு பொறுப்பு வகிக்கும் வானவர்கள் என்னோடு இருக்கிறார்கள். நீங்கள் ஒரே ஒரு ஆணையிடுங்கள், இரு மலைகளுக்கு இடையுள்ள இந்த தாயிப் நகர மக்களை நாங்கள் நசுக்கிவிடுகின்றோம்!"

நபிகளாரின் திருமேனியிலிருந்து வழிந்து கொண்டிருந்த உதிரப்போக்கு இன்னும் நிற்கவில்லை. கல்லடிப்பட்ட இடங்களின் வலியும்-வேதனையும் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் பதறியவாறு நபிகளார் சொல்கிறார்: "வேண்டாம்.. வேண்டாம்! இவர்களை விட்டு விடுங்கள். நாளை இவர்களின் சந்ததிகளாவது எனது செய்தியை ஏற்கலாம். வேண்டாம் இவர்களை விட்டுவிடுங்கள்!"

தி இந்து தமிழ் நாளேட்டின் ஆனந்த ஜோதி இணைப்பில் 12.11.2015 அன்று பிரசுரமான எனது கட்டுரை

Wednesday, November 11, 2015

பீகார் தேர்தல்கள்: பீகாரிகள் கெட்டிக்காரர்கள் என்று பறைசாற்றிய தேர்தல்கள்


பீகார் தேர்தல்களில் முஸ்லிம்களின் நிலைப்பாடு மதசார்பற்றதாகவும், விவேகமானதாகவும், முதிர்ச்சியானதாகவும் இருந்த அதேநேரத்தில் அவர்களது சமூக பொறுப்பும் கூடுதலாக இருந்தது என்கின்றன புள்ளிவிவரங்கள். ஆம்..! 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் தேர்தல்களில் அவர்கள் அதிகளவு பங்கெடுத்துக் கொண்டு, தங்கள் பிரதிநிதித்துவத்தையும் அதிகரித்திருக்கிறார்கள்.

பீகார் சட்டமன்ற தேர்தல்களில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அதாவது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 9.88 விழுக்காடு.

லல்லு பிரசாத் யாதவ்-இன் ‘ராஷ்ட்ரீய ஜனதா தளம்’ கட்சி சார்பாக போட்டியிட்டு 12 முஸ்லிம் வேட்பாளர்கள் வென்றார்கள். அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக 6 முஸ்லிம்களும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 5 வேட்பாளர்களும், ஒருவர் சிபிஐ (எம்.எல்) சார்பாகவும் வெற்றிப் பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள் ஆவர்.

தேர்தல்களில் வெற்றிப் பெற்ற முஸ்லிம்களின் பட்டியல் இது:
 

வ.எண்
2015 பீகார் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள்


வெற்றி பெற்றவர்
கட்சி

வெற்றிப் பெற்றவருக்கு அடுத்தபடியாக இடம் பெற்றவர்
கட்சி
1
ABDUL BARI SIDDIQUI
RJD

MISHRI LAL YADAV
BJP
2
ABDUL JALIL MASTAN
INC

Saba Zafar
BJP
3
AVIDUR RAHMAN
INC

AJAY KUMAR JHA
LJSP
4
MOHAMMAD NAWAZ ALAM
RJD

AMRENDRA PRATAP SINGH
BJP
5
MD. Tauseef Alam
INC

AWADH BIHARI SINGH
BJP
6
Abdus Subhan
RJD

Binod Kumar
IND
7
MAHBOOB ALAM
CPI-ML

BARUN KUMAR JHA
BJP
8
MD NEMATULLAH
RJD

RAMPRAVESH RAI
BJP
9
FAIYAZ AHMAD
RJD

MANOJ KUMAR YADAV (BHOJ PANDAUL)
RLSP
10
MOHAMMAD ILIYAS HUSSAIN
RJD

JITENDRA KUMAR @ RINKU SONI
RLSP
11
FAISAL RAHMAN
RJD

PAWAN KUMAR JAISWAL
BJP
12
SARFRAZ ALAM
JDU

RANJEET YADAV
IND
13
SHAKEEL AHMAD KHAN
INC

CHANDER BHUSHAN THAKUR
BJP
14
MD. AFAQUE ALAM
INC

PRADIP KUMAR DAS
BJP
15
FARAZ FATMI
RJD

ASHOK KUMAR YADAV
BJP
16
DR MOHAMMAD JAWAID
INC

SWEETY SINGH
BJP
17
MUJAHID ALAM
JDU

AKHTARUL IMAN
AIMIM
18
DR. ABDUL GHAFOOR
RJD

CHANDAN KUMAR SAH
RLSP
19
SHAMIM AHMAD
RJD

SANT SINGH KUSHWAHA
RLSP
20
AKHTARUL ISLAM SHAHEEN
RJD

RENU KUMARI
BJP
21
SHARFUDDIN
JDU

LABHALI ANAND
Hindustani Awam Morcha (Secular)
22
KHURSHID URF FIROJ AHMAD
JDU

DILIP VARMA
BJP
23
SYED ABU DOJANA
RJD

AMIT KUMAR
IND
24
NAUSHAD ALAM (TATPAUWA)
JDU

GOPAL KUMAR AGRAWAL
LJSP

பீகார் சட்டமன்ற தேர்தல்களில் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருந்தது.

போஜ்பூரின் ‘ஆர்ரா’ சட்டமன்ற தொகுதிக்காக நடைபெற்ற தேர்தல்களில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பாக போட்டியிட்ட முஹம்மது நவாஸ் ஆலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதுவரை மும்முறை தேர்தல்களில் நின்று வென்ற பிஜேபியின் பலம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினரான பிரதாப் சிங்கை தோல்வியுறச் செய்தார். சிங் 2000, 2005 மற்றும் 2010 அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

பீகாரின் 2010-ஆம், சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிப் பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 அதாவது அவர்களின் பிரதிநிதித்துவம் 243 சட்டமன்ற உறுப்பினர்களில் 7.82 விழுக்காடு ஆகும்.

2011-ல், நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பீகார் மாநிலத்தின் 10.4 கோடி மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 16.86 விழுக்காடு.

இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இது: 
சட்டமன்ற தேர்தல்கள்
 மொத்த இடங்கள்
வெற்றிப் பெற்ற மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ விழுக்காடு
1990
324
20
6.17
1995
324
21
6.48
2000
324
30
9.26
2005
243
16
6.58
2010
243
19
7.82
2015
243
24
9.88


பஞ்சபராரியாகவும், நாட்டின் அனைத்து பகுதிகளில் உழைப்பியல் நாடோடிகளாகவும் காணப்படும் பீகாரிகள், தாங்கள் அறிவாளிகள், கெட்டிக்காரர்கள் என்பதை தேர்தல்களில் ஒன்றுபட்டு நிரூபித்திருக்கிறார்கள்.