Friday, October 9, 2015

எச்சரிக்கை: சொல்லும் உணவை உண்ணாவிட்டால்… மோடி இந்தியாவில் நீங்களும் கொல்லப்படலாம்.

 
 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மோடி சர்க்கார் நேரிடையாக இந்த சம்பவங்களில் பங்கெடுக்காவிட்டாலும், இந்த காட்டுமிராண்டிதனத்தை கண்டும் காணாமல் இருப்பதும், அதை கண்டிக்காமல் மௌனம் சாதிப்பதும் அந்த கொடும் குற்றங்களை ஊக்குவிப்பதாகவே கருதப்பட்டு குற்றவாளியாகிறார் - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 
தங்களின் சமய நம்பிக்கைக்களுக்காக அப்பாவி மக்கள் கொல்லப்படுவது பண்டைய நாளிலிருந்தே வழிவழியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரோமர்களின் ஆட்சிகாலத்தில் கிருத்துவர்கள் சிங்களுக்கு இரையாவதை சுற்றிச் சூழ்ந்து சிம்மாசனங்களில் அமர்ந்து திளைத்த ரோமானிய கதைகள் ஒன்றும் புதிதல்ல.

பண்டைய அரபிகளும், தங்கள் நம்பிக்கைகளை தக்க வைக்க நபிகளாரையும், அவரது தோழர், தோழியரையும் சொல்லொண்ணாத கொடுமைகளுக்கு ஆளாக்கியதும் வரலாறுகளில் பதிந்துள்ளது.

புத்தரின் கொள்கை கோட்பாடுகள் துடைத்தெறியும் வண்ணம் அவரது போதனைகளுக்கு எதிராக நடந்த வன்முறைகள் ஒருபுறம் என்றால், நிகழ்காலத்தில் அதே அஹிம்சா கொள்கைகளும், புத்தரின் சீடர்களும் கொலை வாட்களை கையில் ஏந்தி ஆள்வெட்டி குண்டர்களாய் மியான்மரில் நடத்தும் கொடுமைகள் நிகழ்கால வரலாற்று சாட்சிகளாக நிற்கின்றன.

ஆக, நம்பிகைகளுக்கு ஒரு விலை உண்டு என்கிறது வரலாறு.

இன்று இந்தியாவில் இந்த நம்பிக்கைகளுக்காகவே மற்றவர்கள் அவர்கள் என்ன உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் மோடி சர்க்காரின் ராஜ்ஜியத்தில்! ஆம்.! 50 வயது விவசாயி முஹம்மது அஹ்லாக் மாட்டு மாமிசத்தை உண்டார் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில், உள்ளூர் கோயிலின் ஒலிபரப்பி வழியாக வதந்தியைக் கிளப்பி வன்முறையார்களால் தீர்ப்பெழுதி அநீதியாக கொலை செய்யப்பட்டார். அவரது 20 வயதான மகன் குற்றுயிரும், குலையுயிருமாகும் அளவுக்கு தாக்கப்பட்டார்.

இந்த காட்டுமிராண்டித்தனம் ஏதோ ஒரு குக்கிராமத்தில் நடந்தது அல்ல. இந்திய நாட்டு தலைநர் தில்லிக்கு மிக சமீபத்தில் உள்ள தாத்ரியில்தான் நடந்தது.

இந்திய உப கண்டத்தையும் தாண்டி உலகம் முழுவதும் அதிர்ச்சி பேரலைகளை உண்டாக்கிய சம்பவம் இது. முஹம்மது அஹ்லாக்கின் மற்றொரு மகன் சர்தாஜ் இந்திய விமானப்படையில் பணிபுரிபவர், தந்தையார் கொல்லப்பட்டதை மன்னித்துவிட்டதும் பிந்தைய செய்திகள்.

கடைசியில், அஹ்லாக் உணவாக உண்டது மாட்டு இறைச்சி அல்ல. ஆட்டு இறைச்சிதான் என்ற முடிவுகள் வெளிவந்தபிறகு, “அந்நியாயமான முறையில் என் தந்தையாரின் உயிரை எடுத்தவர்கள் இப்போது அதை திரும்பவும் தர முடியுமா?” – என்று உடைந்து நொறுங்கினார்.

செவ்வாய் கிரகத்தில், நீர் இருப்பதாக கண்டுபிடித்த நாசாவின் முடிவுகள் குறித்து உலகம் வாத, பிரதிவாதங்களில் இருக்கும்போது, நமது நாட்டிலோ ஒரு உணவு பொருளுக்காக வாத, பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன மோடி சர்க்காரின் மின்னணு யுக இந்தியாவில்!

31 விழுக்காடு வாக்குகள் பெற்று வண்ணமய இந்திய கனவுகள் என்ற மாயையை முன்வைத்து ஆட்சி அமைத்த சங்பரிவார் கூட்டத்தாரின் சாயம் வெகு சீக்கிரம் கலைந்துவிட்டது.


வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்திய சமூக அமைப்பை முன்னெடுத்துச் சென்ற மகாத்மா காந்தி, நேரு, ஆஸாத் மற்றும் அம்பேத்கரின் வழிமுறைகள் ஏற்கனவே ஓரம் கட்டப்பட்டுவிட்டன. சவார்க்கர், கோல்வாக்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாவின் இனவாத, பாசிஸ சர்வாதிகார வழிமுறைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரே ஒரு தேர்தலின் முடிவுகள் ஒட்டுமொத்த இந்திய குடியரசு அமைப்பின் முகப்பை சீர்குலைத்திடும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்தியா தனது வரலாற்றில் இதுவரையும் சந்தித்திடாத ஒரு புதிய முகத்தை நாடு முழுவதும் கட்டமைக்க துரித முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாய் சூறாவளி சுற்றுப் பயணங்களில் மோடி சர்க்கார், சங்பரிவார் இந்திய வம்சாவளிகளை முன்னிறுத்தி உலக தலைவர்களோடு கரம் கோர்த்து அரிதாரம் பூசிய இந்திய முகத்தை காட்டி தன்னை நல்ல தலைவராக காட்ட முனைந்து கொண்டிருக்கிறார்.

இந்திய சமூக அமைப்பில், இனி யாருக்கும் பாதுகாப்பில்லை. அதற்கான உத்திரவாதமும் இனி யாரும் தர முடியாது. அஹ்லாக்கை போலவே நீங்களும் எந்த நேரமும் ஒரு பூச்சியைப் போல் தாக்கப்பட்டு நசுக்கி கொல்லப்படலாம் எச்சரிக்கை.

சமீபத்தில்தான் இந்தியாவின் முக்கிய பகுதியான கான்பூரில் தீவிரவாதி என்று ஒரு முஸ்லிம் எந்தவிதமான விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டார். அதற்கு சற்று முன் மார்ச் மாத்தில்தான் ஒரு முஸ்லிம் வணிகர் முழு நிர்வாணமாக்கப்பட்டு நட்ட முச்சந்தியில் தூக்கிலேற்றி எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நிர்வாகதுறையினர், காவல்துறையினர் முன்னிலையில்தான் அரங்கேற்றப்பட்டது.  இதேபோல, தனது இந்து தோழியிடம் பேசிய ஒரு குற்றத்துக்காக ஒரு முஸ்லிம் இளைஞர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். இது நடந்தது மங்களூரில்.

இவையாவும் எதேச்சையாக நடந்த சம்பவங்கள்தானா? மதத்துவ வன்மத்தாலும், சங்பரிவார் இனவாதத்தாலும் நாடுமுழுவதும், எரிக்கப்படும், மசூதிகளும், சர்ச்சுகளும் எதேச்சையான சம்பவங்கள்தானா?

மோடி சர்க்கார் நேரிடையாக இந்த சம்பவங்களில் பங்கெடுக்காவிட்டாலும், இந்த காட்டுமிராண்டிதனத்தை கண்டும் காணாமல் இருப்பதும், அதை கண்டிக்காமல் மௌனம் சாதிப்பதும் அந்த கொடும் குற்றங்களை ஊக்குவிப்பதாகவே கருதப்பட்டு குற்றவாளியாகிறார்

இந்திய சமூக அமைப்பு எதை நோக்கி செல்கிறது? இதற்காக இந்த சமூகம் கொடுக்கப் போகும் விலைதான் என்ன? ஒருவேளை கொல்லப்படும் அப்பாவிகள் வெறும் மாமிசமாக மோடி சர்க்காரின் கண்களுக்கு தெரிகின்றதோ என்னவோ?

'''''''''''''''''''''''''''''''''


No comments:

Post a Comment