Tuesday, October 13, 2015

அழைப்பது நம் கடமை: 13, மக்கள் சேவையில் மனம் திளைத்த ஜனாதிபதி

 

இந்த வரலாற்று சம்பவத்தை எழுதும் போதெல்லாம் நான் மலைத்துப் போகின்றேன்! நம்பவே முடியாத வரலாற்று நிகழ்வுகள்!

"இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களே! வாழ்ந்திருக்கிறார்களே!"- என்று என்னுள் முணுமுணுப்பு எழுகிறது.

நான் வாழும் சமுதாயம் எப்படியெல்லாம் கறைபடிந்து ஓர் அவநம்பிக்கையை என்னுள் எழுப்பிவிட்டுள்ளது? அரைநூற்றாண்டுக்கும்  அதிகமாக கறைபடிந்த சூழல்கள் என் எண்ணங்களை, பார்வையை சிதைத்து அவற்றையே என் மூளையின் பதிவுகளாக்கி விட்டதால் வந்த வினை இது!

முடியும் என்று நானும் என்னைச் சேர்ந்தோறும் வாழும் வாழ்க்கை என் நம்பிக்கையை வலுப்படுத்துவதால்.. இந்த நிஜங்களை நோக்கி உலகம் முழுக்க உள்ள இறைநம்பிக்கையாளர்களின் நடப்புகள் பல்வேறு தியாகங்களுக்கிடையே நகர்வதால் ...

இந்த சமூக அமைப்பை விட்டால்.. உலகில் வேறு மாற்றேயில்லை என்று மாற்றங்கள் நிகழ்வதால்..

அதை இறைவன் நாடினால்..  என் ஆயுட்காலத்திலேயே பார்க்கும் வாய்ப்பும் இருக்கும் என்று உறுதியில் இந்த சம்பவங்களை அழுத்தம் திருத்தமாக பதிக்கின்றேன்.

மதீனாவின் கிராமப் பகுதிகளில் ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) இரவு நேர நகர்வலம் வந்து கொண்டிருந்தார்கள்; வழக்கம் போல மாறு வேஷத்தில்!

இரவின் கும்மிருட்டில் அந்த பள்ளத்தாக்குப் பகுதியைக் கடப்பது மிகவும் சிரமாக இருந்தது.

தொலைவில், 'மிணுக்.. மிணுக்..' என்று விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதை நோக்கி ஜனாதிபதி உமர் அவர்கள் விரைந்தார்கள்.

அருகில் சென்றதும் விளக்கு எரிந்து கொண்டிருந்த கூடாரத்திலிருந்து யாரோ அழும் குரல் கேட்டது.

கூடாரத்துக்கு வெளியே ஒரு மனிதர் தன்னந்தனியாக ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார். அவர் முழங்கால்களில் தலைக் கவிழ்ந்து அழுது கொண்டிருந்தார்.

அவர் ஏதோ பெரும் சோகத்தில் சிக்கியிருப்பதை உமர் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அந்த மனிதரை நெருங்கி 'சலாம்-முகமன்' கூறினார்கள். விவரத்தை விசாரித்தார்கள்.

தாளமுடியாத துக்கத்தில் இருந்ததற்கு அடையாளமாக அவரிடமிருந்து பெரும் கேவல் வெளிப்பட்டது. வார்த்தைகள் வெளிப்படவில்லை.

ஆறுதலாக அவரது தோள்களில் கை வைத்த உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள்.


கடைசியாக வழிப்போக்கர் தனது பிரச்சினையை அழுகையுடன் சொன்னார் இப்படி:

'அந்த வழிப்போக்கர் ஜனாதிபதி உமர் அவர்களைக் கண்டு உதவி பெறுவதற்காக தலைநகருக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவிக்கு பேறுகால வேதனை ஏற்பட்டுவிட்டது. அந்த அகால இரவில், பிரசவம் பார்க்க தகுந்த ஆளும் உதவியும் இல்லாமல் அவர் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்!'

இதை அறிந்து கொண்ட உமர் அவர்கள் அங்கே ஒரு நிமிடம்கூட தாமதிக்கவில்லை. நேராக இல்லம் சென்றார்கள். தங்களின் துணைவியார் உம்முல் குல்தும் பின்த் அலி அவர்களை (இறையருள் பொழிவதாக!) எழுப்பினார்கள். விவரத்தைச் சுருக்கமாக சொன்னார்கள். அதன் பின்,

"இறைவனின் நற்கூலியைப் பெற்றுத் தரும் ஓர் அரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடனே என்னுடன் கிளம்புங்கள்!"- என்றார்கள்.

மகப்பேறுக்குத் தேவையான பொருட்களையும், உணவு மற்றும் குடிநீரையும் எடுத்துக் கொண்டு உம்முல் குல்தும் உடனே புறப்பட்டார்கள்.

இருவரும் வெகு விரைவிலேயே கூடாரத்தை அடைந்தார்கள். தமது துணையியாரை பிரசவம் பார்க்க கூடாரத்தில் அனுப்பிவிட்டு உமர் அவர்கள் வழிப்போக்கரின் அருகில் அமர்ந்தார்கள். அவருக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். அத்தோடு நிற்காமல் கொண்டுவந்த உணவுப் பொருட்களை சமைக்க ஆரம்பித்தார்கள்.

அந்த வழிப்போக்கருக்கு தமது பக்கத்தில் ஒரு சாமான்யராக அமர்ந்திருந்து... உணவு சமைத்துக் கொண்டிருப்பது அகண்ட இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி என்பது தெரியாது.

சற்று நேரத்தில் கூடாரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

"ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற நற்செய்தியைச் சொல்லுங்கள்! தாயும்-சேயும் நலமாக இருப்பதையும் தெரிவித்துவிடுங்கள்!"-என்றார்கள் உம்முல் குல்தும் அவர்கள் கூடாரத்திலிருந்து எட்டிப் பார்த்தவாறு.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியுறுகிறார் அந்த வழிப்போக்கர்.

தான் இதுவரையில் பேசிக் கொண்டிருந்தது... பிணங்கிக் கொண்டது... இயலாமையால் கடிந்து கொண்டது... பார் போற்றும் ஜனாதிபதி.. இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்... நபித்தோழர்.. உமர் (இறையருள் பொழிவதாக!) அவர்கள் என்பதை அறிந்ததும் ஆடி போய்விட்டார்.

சூழலைப் புரிந்துகொண்ட உமர் அவர்கள் வழிப்போக்கரின் தோளில் மெல்ல தட்டிக் கொடுத்தார்கள். சுட.. சுட தயாரித்த உணவை கூடாரத்தில் அனுப்பி குழந்தையின் தாய்க்கு ஊட்டிவிடும்படி தங்களின் துணைவியாரைப் பணித்தார்கள்.

அதற்கு அடுத்த நாட்களில் தலைநகர் வந்த அந்த வழிப்போக்கருக்கு தேவையான நிதியுதவிகளை செய்தார்கள். அந்த நிதியுதவியில் குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட நிரந்தர உதவியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சேவையில் மனத் திளைத்த.. ஜனாதிபதிகள்!

இறையச்சத்தால் பதறிய ஆட்சியாளர்கள்...!!

இஸ்லாமிய சமூக அமைப்பென்னும் மகா சமுத்திரத்தில் ஒரு சில திவலைகள்தான் இங்கே குறிப்பிட்டிருப்பது. இஸ்லாமிய அரசாட்சியின் எடுப்பான முத்திரைகள் இவை.

ஆனால்... இன்று நடப்பது என்ன?

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html

11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html

12. கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/09/12.html

No comments:

Post a Comment