Monday, September 28, 2015

வைகறை நினைவுகள்: 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு


கம்பீரமாய் திறக்கப்பட்ட இரும்புக் கதவுகள். சென்னையின் பிரபலமான கல்லூரி அது.

நேரம்: மாலை சுமார் 6.30 மணி.

எதிரே வாகனங்கள் நெரிச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தன. கும்பல், கும்பல்களாக மாலை நேர வகுப்பு மாணவர்கள், ‘மச்சான்களுடனும், ஜோ… யார்…’ – களுடன் மும்மொழி வம்பளத்துக் கொண்டிருந்தார்கள்.

பழைய புகை ரெயில் வண்டிகளை ஞாபகப்படுத்த என்னவோ புகைகளாக கக்கிக் கொண்டிருந்தனர்.

நண்பர் ஒருவரின் வருகைக்காக கல்லூரியின் பக்கத்திலிருந்த கடையில் காத்திருந்தேன் நான்.

“டேய்..! மச்சி..! அதோ..! ஒரு ‘இண்ட் ஸீஸீகி’ ஹெல்மெட் இல்லாம வருது. அதை எப்படி கலாய்க்கிறேன் இப்போ பாரு..!” – கும்பலிலிருந்த மாணவர் ஒருவர் நடுரோட்டிற்கு வந்தார்.

“சார்.. சார்..!”

45 வயது மதிக்கத்தக்க நபரை சுமந்து வந்த ‘இண்ட்ஸீஸீகி’ கிறீச்சிட்டு பிரேக் போட்டு நின்றது. பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சைக்கிள் அதன் மீது மோதியும், மோதாமலும், ”சரியான.. சாவுகிராக்கி!” – என்று அர்ச்சனை செய்துவிட்டு சென்றது.


“என்ன தம்பி?” – ஸ்கூட்டரில் வந்தவர் அந்த கல்லூரி மாணவரிடம் கேட்டார்:

“சார்.. முன்னாலே ஹெல்மெட் கேஸ் பிடிக்கிறாங்க…. பார்த்து போங்க..!”

மாணவரின் பொய்யை உண்மை என்று நம்பிய அந்த வாகனமோட்டி வண்டியின் வேகத்தைக் குறைத்து முன்னால் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே மெதுவாக சென்றார்.

மாணவர் கும்பலிலிருந்து “குபீர்” என்று சிரிப்பொலி கிளம்பியது.

வாகனமோட்டியை வெற்றிகரமாக ஏமாற்றிய மாணவரின் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம் பளிச்சிட்டது.

அடுத்து அவர்களின் பார்வையில் பட்டது இரண்டு பெண்கள். அவர்களையும் அழாத குறைக்கு கேலி செய்து அனுப்பியது அக்கும்பல்.

“டேய்..! ஜோ.. அதோ.. யார்! மாமா.. போறார்..!”

“மாமா..! மாமா…!” – இது சட்டத்தின் காவலர் ஒருவருக்கு வீசப்பட்ட ஏவுகணை. அவரும் நமக்கேன் வம்பு?” – என்று கண்டும், காணாமலும் சென்று விட்டார்.

ஒரு நாட்டின், முதுகெலும்பான இந்த இளைய சமுதாயம், ஒழுக்கம் குன்றிய மிக மோசமான நிலையில் அனுதினமும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

வருங்காலத்தின் மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், பொறியாளர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் இவர்கள்தான் என்று எண்ணும்போது சோகம்தான் மிஞ்சுகிறது.

இளைய வயதிலேயே இறையச்சத்தை ஊட்டி, அதன் விளைவாக உண்டாகும் மேலான ஒழுக்கத்துடன் கூடிய கல்விமுறை ஒன்றைத் தவிர வேறு எதனாலும் இந்த இளந்தளிர்கள் திருந்தப் போவதுமில்லை..! இவர்களால் புதிதாக நாட்டிற்கு ஒன்றும் ஆவப்போவதுமில்லை.

மாறுமா.. இந்த நிலை?''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

நண்பர்களே! மேலே கண்டது ஒரு கட்டுரை! அதன் தலைப்பு “இதோ..! நாளைய சிற்பிகள்!”

அநேகமாய எனது எழுத்துலக பயணத்தின் துவக்கம் இந்த கட்டுரைதான் சொல்லலாம்.

இதற்கு முன்பாகவே எனது பள்ளி நாட்களில், சென்னை வானொலி நிலையம் மற்றும் துக்ளக் போன்ற பத்திரிகளுக்கு நேயர் விருப்பம், வாசகர் கடிதங்கள் எழுதி உள்ளேன். அவை வாசிக்கப்பட்டும், பிரசுரிக்கப்பட்டுமிருந்தன.

இருந்தாலும். அதிகாரபூர்வமாய் நான் கட்டுரையாளனாக, எழுத்தாளனாக ஆனது சமரசத்தின், ‘இதோ நாளைய சிற்பிகள்!’ என்ற இந்த கட்டுரையின் மூலம்தான்!


1987-ம், ஆண்டு - டிசம்பர் 16-31, சமரசம் இதழில் பக். 17-ல், பிரசுரமான கட்டுரை இது.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில் நான் தினமணிக்கு வாசகர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன்.

தினமணியின் தலையங்கம் மற்றும் தலையங்கப் பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு தபால் கார்ட்டுகளில் விமர்சனம் எழுதுவேன்.

நுணுக்கி, நுணுக்கி 10-15 வரிகளில் அந்த விமர்சனம் இருக்கும்.

மறக்காமல், அதன் பிரதி ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு, வாசகர் கடித்தங்களில் பிரசுரமாகும் என் கடிதங்களில் எந்தெந்த பகுதிகள் வெட்டப்பட்டுள்ளன என்று கவனமாக பரிசீலிப்பேன்.

இந்த நேரத்தில் நீங்கள் தெளிவாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு கொள்கை உண்டு என்பதுதான் அது. அந்த கொள்கைகளைச் சார்ந்தே அந்த பத்திரிகை பயணப்படும்.


 நடுநிலை பத்திரிகை என்பது இல்லவே இல்லை.

வெட்டப்படும் பகுதிகள், பிரசுரமாகும் பகுதிகள் என்று தனித்தனியாக பிரித்து பார்த்து தினமணியின் கொள்கை மற்றும் அதன் போக்கை எடைபோடுவேன். இப்படிதான், எனது கொள்கையும் விட்டுத்தராதவாறு எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டேன். அதேநேரத்தில், எனது விமர்சனம் பிரசுரமாகின்றதோ இல்லையோ தவறான கருத்துக்களை சுட்டிக் காட்டவும் ஆரம்பித்தேன்.

தோழர்களே! மேற்கண்ட பாராக்களை நீங்கள் கவனமாக மீண்டும் மீண்டும் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், முரண்பாடுகள், உடன்பாடுகள் கொண்டதுதான் வாழ்க்கை. எல்லோருடனும், எப்போதும் முரண்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உடன்பாடுகள் நம்மோடு பொருந்திப் போகும்போது, அதற்கான தளத்தை நாம் அமைத்துக் கொள்வதுதான் விவேகமானது.

நீங்கள் இன்னொன்றையும், கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாலுவரி வாசகர் கடிதம்தானே என்று அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால், ஆசிரியர் குழுவின் போக்கை மாற்ற வல்ல கடிதங்கள் அவை. ஒவ்வொரு கடிதமும், கவனமாக வாசிக்கப்பட்டு ஆசிரியர் குழுவில் விவாதிக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தினமணியின் வாசகர் கடிதங்களில் நுணுக்கி, நுணுக்கி எழுத நான் பெற்ற பயிற்சிதான் உள்நாட்டு அஞ்சலில் அதாவது இண்ட் லேண்ட் கடிதத்தில் இதோ நாளைய சிற்பிகள் கட்டுரையை என்னால் எழுத முடிந்தது.

இப்படிதான் எனது முதல் முதலாவது பரிச்சயம், 28 ஆண்டுகளுக்கு முன் சமரசத்தின் ஆசிரியரான ‘அந்த அழகிய ஒளிவிளக்கோடு’ ஏற்பட்டது.

யார் ‘அந்த அழகிய ஒளிவிளக்கு? இறைவன் நாடினால் அடுத்த வைகறை நினைவுகளில்…

''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
 

Thursday, September 24, 2015

சமூகம்: பாவக்கறைகளைப் போக்கும் பயணம்: தியாகத் திருநாள் சிறப்புக் கட்டுரை


நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பேழையிது.

“இறைவன் ஒருவன்! அவன் இணை-துணையில்லாதவன்!” என்ற இந்த ஓரிறைத் தத்துவத்தை உரக்க உச்சரித்து வீடுவாசலையும் நாடுநகரத்தையும் சொந்தபந்தங்களையும் பொன்புகழையும் துறந்து கொள்கையின் கோமானாய் வரலாற்றில் உயர்ந்து நிற்பவர் இப்ராஹீம் நபி. இறைவனின் ஆணைக்கேற்ப சிரம் தாழ்த்தி, பலிக்காகச் சுயமாகத் தம்மை ஒப்புக்கொடுத்தவர்தான் அவருடைய மகன் இஸ்மாயீல் நபி!

இப்பெருந்தகைகள் இறைவனின் விருப்பப்படி கஅபா ஆலயம் கட்டிட முனைப்புக் காட்டிய சமயம், அவர்களின் நெஞ்சிலிருந்து அளவிலா அன்பு கண்ணீராய்ப் பெருக்கெடுத்து வழிகிறது. பிரார்த்தனை வடிவில் கசிந்துருகுகிறது.

“எங்கள் இறைவனே! எங்களுடைய இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக! எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக, முஸ்லிம்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் வழித்தோன்றல்களிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக!... இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருபவராகவும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும்.”

பாலை வெளியில் கட்டப்பட்ட ஆலயம்

பொட்டல் வெளியில், புற்பூண்டுகூட முளைக்காத பாலைவெளியில் ஓர் ஆலயம் கட்டி, வெறும் பிரார்த்தனையோடு உலகின் கேந்திரமாக அது திகழ வேண்டுமென 4,000 ஆண்டுகளுக்கு முன் கண்ட கனவு பலித்தது!

பொட்டல் வெளியில் கஅபா கட்டப்பட்டது உண்மைதான். அது முயற்சி! ஆனால், அதோடு வெளிப்பட்டது நம்பிக்கை.

“என் இறைவனே! மக்காவாகிய இந்நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாய் ஆக்கிவைப்பாயாக! நான் என் மக்களை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்துக்குரிய உன் இல்லத்துக்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். அவர்கள் இங்கு தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக! அவர்கள்மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! இவர்களுக்கு உண்பொருளை வழங்குவாயாக!”

இப்படி உறுதியுடன் பரம்பொருள் சார்ந்து வாழும் நம்பிக்கை அது. இதில்தான் பொட்டல் வெளி உயிர்பெற்றது. அகில உலக முஸ்லிம்களின் ஓரிறைத் தலைமைக் கேந்திரமாக கஅபா உருப்பெற்றது.

இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையிலான கஅபா என்னும் இறையில்லத்தை ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் தம் வாழ்நாளில் ஒருமுறை ‘சந்திக்க’ நாடும் நாட்டமே ‘ஹஜ்’ எனப்படுகிறது.


ஹஜ் பயணம் மனிதனின் பாவங்களைத் தொலைத்திட உதவும் ஒரு வழி. அண்ணல் நபிகளார் அதைத்தான் நவின்றார்.

“ஒருவர் இந்த கஅபா ஆலயத்தைத் தரிசிக்க வருகை தந்து, மன இச்சை சம்பந்தமான சொல் எதனையும் பேசாமலும், இறைவனுக்கு மாறு செய்யும் செயல் எதனையும் செய்யாமலும் இருந்தால் அவருடைய அன்னை அவரைப் பெற்றெடுத்த அதே நிலையில், பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட தூய நிலையில் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்!”

ஹஜ் பயணம் இறைநம்பிக்கை யாளர்களிடம் உண்டாக்கும் உற்சாகம், உத்வேகம் உணர்வுகளின் கதம்பம். வார்த்தைகளில் வடிக்க இயலாத தெய்வீகம். நினைத்தாலே உள்ளமெல்லாம் குளிர்ந்திடும் நல்லின்பம்.

பூமி பெரிதுதான்! ஆனால், அது சில சமயங்களில் சிறுத்துப் போவதுண்டு. ஹஜ் போன்ற நாட்களில்!

ஹஜ் பெருநாள்

ஆறுகள் கடலில் சங்கமிக்கும் என்பது நிஜம்தான்! ஆனால், முழு உலகமே திரண்டு ஓரிடத்தில் நின்றிடும் நாள் ஹஜ் பெருநாளாகும்.

எத்தனை நிறங்கள்..! எத்தனை மொழிகள்..! எத்தனை எத்தனை மனிதர்கள்..! மனித சமூகம் முழுவதும் திரண்டு வந்ததோ என ஐயம் எழுப்பும் இடம் அது.

ஓயாமல் ஒலிப்பது கடல் அலை மட்டுமா? “அல்லாஹீம்ம லப்பைக்க.. அல்லாஹீம்ம லப்பைக்க..!" அதாவது "இறைவா..! நான் வந்துவிட்டேன்! இறைவா..! நான் வந்துவிட்டேன்!” என ஒவ்வொரு ஹஜ் பயணியும் மாறாத லயத்துடன் ஒலிக்கும் ‘தல்பியா’ முழக்கமும் கூடத்தான்!

ஹஜ்ஜின் தொடக்கமே ஒரு வேள்வி!

காம, குரோதங்களிலிருந்து விலகி, இல்லற இன்பங்களைத் துறந்து, தேவையற்ற வீண் பேச்சுகள், தூஷணைகள், கோபதாபங்கள், புறம்பேசுதல், கோள்சொல்லுதல் போன்ற அனைத்துத் தீய பண்பு களையும் பொசுக்கிவிடும் வேள்வி அது. மனிதனைத் தூயவனாகப் புடம் போடும் ஒரு வேள்வி அது!

ஒவ்வொரு ஹஜ் பயணியும் அணியும் இஹ்ராம் என்னும் வெள்ளுடை சமாதானத்தின் சீருடை. அரசன், ஆண்டி, செல்வந்தன், ஏழை அனைவரும் ஒன்றுதான் எனச் சொல்லும் சமத்துவத்தின் பேருடை அது. ஆடம்பர படாடோபங்களை இழந்து இறைவன் திரு முன் அனைவரும் சமம் என நினைவுறுத்தும் நல்லுடை அது.

இறைவனை உணர்வது. அவனுக்கு இணைத்துணை கற்பிக்காமலிருப்பது. இறைவன் காட்டிய வழியில் நடப்பது. அதிலேயே நிலைத்திருப்பது. நற்சமூகம் அமைப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் பொறுப்பாகும்.

இதற்கு நல்லுதாரணங்களாக இப்ராஹீம் மற்றும் அவருடைய அருமை மகனார் இஸ்மாயீல் நபியும் திகழ்கிறார்கள். இவர்களின் நற்பணிகளின் தொடராக அண்ணல் நபிகளாரின் வாழ்வியலையும் அன்னாரின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் முன்னிறுத்தி வாழ முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இந்தப் பெருந்தகைகள் உருவாக்க முயன்ற அமைதி தவழும் சமூகத்தை, மனித நேய சமூகத்தை உருவாக்கப் பாடுபடுவதும் இவர்கள் மீதுள்ள கடமையாகும்.

(24.09.2015 அன்றைய தி இந்து - தமிழ், ஆனந்த ஜோதி இணைப்பில் பிரசுரமான எனது, 'தியாகத் திருநாள்' சிறப்புக் கட்டுரை)

Wednesday, September 23, 2015

முக்கிய செய்திகள்: இரு சக்கர வாகனத்துடன் 2 ஹெல்மட்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுஇரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து இரண்டு தரமான தலைக்கவசங்களை வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக, தலைக்கவசம் தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

நகரப் பகுதிகளில் மட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிகின்றனர். கிராமப்புறங்களில் கட்டாய தலைக்கவச உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. எனவே, கட்டாய தலைக்கவச உத்தரவை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

மத்திய மோட்டார் வாகன விதியின்படி, இரு சக்கர வாகனத்தைத் தயாரிப்பவர்கள் வாகனத்தை விற்பனை செய்யும்போது தலைக்கவசத்தையும் அளிக்க வேண்டும்.

தற்போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து இந்திய தர நிர்ணய அமைவனம் (ஐஎஸ்ஐ) நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய இரண்டு தலைக்கவசங்களை வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இதன்மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். தலைக்கவசத்தைப் பாதுகாப்பதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால் பலரும் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.

எனவே, தலைக்கவசத்தைப் பாதுகாப்பாக வைக்க பூட்டு தேவைப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் பூட்டை தனியாகத் தயாரித்துக் கொடுக்காமல், வாகனத்திலேயே அதற்கான வசதி இருக்கும்படி தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 30-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tuesday, September 22, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 6: அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..!


ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். வாழ்ந்த நிலபரப்பு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்! பேசிய மொழியும் அன்னியம்தான்! அவரைக் கண்ணால் பார்த்ததில்லை. சிலை இல்லை. சித்திரம் இல்லை! அவரது பேச்சைக் காதால் கேட்டதுமில்லை. வரலாற்றுப் பதிவுகள்தான் ஆதாரங்கள்! 

ஆனாலும், அவர் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் விந்தை. "சிறு துரும்புகூட அவர் மீது பட அனுமதியோம்!"-என்று அவரது இன்னுயிர் தோழர் - தோழியர் அன்று கொண்ட பிரேமையைப் போலவே இன்றும் உலக முஸ்லிம்களிடம் தொடரும் அந்த ஈர்ப்பு!

அவர் கற்றவராக இருந்தாலும் சரி அல்லது கல்லாத கூலி வேலை செய்பவராக இருந்தாலும் சரியே! ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் தமது பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வி அளிப்பதில் காட்டும் முக்கியத்துவம். 'மக்தபுகள் - தொடக்கக் கல்வி கூடங்கள், மதரஸாக்கள் - நடுநிலை .. உயர்நிலை கல்விச் சாலைகள் என்று ஒரு தலைமுறை, அடுத்த தலைமுறைக்குத் தங்களின் கொள்கைகளை எடுத்துச் செல்லும் இயல்பான பொறுப்புணர்வு .. முஸ்லிம்களின் ஆன்மா அது.

இத்தகைய மாபெரும் ஆளுமைக்குச் சொந்தக்காரர் முஹம்மது நபி. அவரது பெயரைக்கூட வெறுமனே சொல்வதில்லை. "ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்!" அதாவது இறைவனின் சாந்தியும்-சமாதானமும் உண்டாகட்டும் அவர் மீது!" - என்று வாழ்த்தும் பேரன்பு!

ஒருவர் முஸ்லிம் என்று தெரிந்தோ இல்லையோ புன்முறுவலோடு, "உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" - என்று விரைந்து ஒலிக்கும் வாழ்த்தொலி: "அஸ்ஸலாமு அலைக்கும்!" சலாம்.

அவர் எந்த நாட்டவர்? எந்த இனத்தவர்? எந்த மொழிக்குரியவர்? என்ற பாகுபாடு இல்லை. சிறியவரா? பெரியவரா? ஆட்சியாளரா? சாமான்யரா? என்ற கேள்வியே இல்லை.

சலாமுக்கு பதிலாக, "உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" - என்று பதில் வாழ்த்தொலி செலுத்தும் பாங்கு.

இறைவனின் பெயர் சொல்லி அறுக்கப்படாதவை. செத்தவை, உடலுக்கு பெரிதும் தீது விளைவிக்கும் பன்றியின் இறைச்சி போன்றவை மது, வட்டி, விபச்சாரம் என்று நீளும் பட்டியல் உலகின் எந்த மூலையில் வாழும் முஸ்லிம்களுக்கும் ஹராம்தான்! அதாவது தடுக்கப்பட்டவைதான்! நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள் என்று மாறாத சர்வதேச பொதுவிதி!

முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் போப்பாண்டவர் போல ஒரு தலைவர் இல்லை. ஆனாலும், "இரண்டை விட்டுச் சொல்கின்றேன்! அவற்றைப் பின்பற்றும்வரை நேர்வழி தவற மாட்டீர்கள்"- என்று நபிகளார் காட்டிச் சென்றதை இன்றும் பின்பற்றும் முஸ்லிம்கள்.

திருக்குர்ஆனின் கட்டளைகள், திருநபியின் வழிமுறைகள் தான் அந்த இரண்டும். இந்த திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் எனப்படும் இவை இரண்டுமே உலக முஸ்லிம்களின் சர்வதேச பொதுச் சட்டங்கள். 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாட்களிலும் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நடத்தப்படும் பிரசங்கத்திலும் தொழ வருபவர்களுக்காக செய்யப்படும் அறிவுரைகள் இவை. 

தனிநபர் வாழ்வா? கூட்டுச் சமூக வாழ்வா? அரசியலா? ஆன்மிகமா? அறிவியலா? வானயியலா? பூகோளமா? அல்லது பொருளாதாரமா? மனித வாழ்க்கையில் எதிர்படும் 24 மணி நேரப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் சட்டங்கள் (ஷ ரீஅத்)

நபிகளாரின் ஆளுமைக்கு மற்றொரு சாட்சி, ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒலிப்பெருக்கி வழியே விடப்படும் தொழுகைக்கான அழைப்பு-பாங்கு.

"இறைசக்திதான் உலக சக்திகளைவிட மேலானது. "அல்லாஹீ அக்பர்!" - என்ற பிரகடத்துக்குப் பிறகு "முஹம்மது நபி இறைவனின் திருத்தூதர் - முஹம்மதுர் ரஸீலூல்லாஹ்!" - என்று உரத்து செய்யப்படும் பிரகடனம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் 24 மணி நேரமும் உலகின் பகுதிதோறும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் திருப் பெயர்.

இறைவன் ஒருவன் என்பதோடு மனிதகுலத்துக்கான மார்க்கமும் ஒன்றுதான் என்பதே இஸ்லாத்தின் முழக்கம்.
  •      ஏகத்துவம் (Unity of God)
  •      மனித இனித்தின் ஒருமைப்பாடு (Unity of Mankind)
  •      மார்க்க அடிப்படையிலான ஒருமைப்பாடு (Basic Unity of Religion)
- இவை இஸ்லாத்தின் மிக முக்கிய அம்சங்கள்.

அமெரிக்க நீக்ரோ இன மக்களின் தலைவரான மால்கம் எக்ஸ் - மாலிக் யேல் ஷஹபாஜ் தனது ஹஜ் அனுபவங்களைத் தனது உதவியாளர் அலெக்ஸிடம் பகிர்ந்து கொள்ளும்போது சொலகிறார்.

மால்கம் எக்ஸ் சொன்னது என்ன?

-இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/

முக்கிய செய்திகள்: 'டோல் கட்டணங்கள்': காலனி ஆதிக்கத்தின் குறியீடு'நல்ல நாள்', 'சப்கா சா'த், 'சப்கா விகாஸ்', 'மேக் இன் இண்டியா', 'தொழில் செய்வது சுலபம்' உள்ளிட்ட மத்திய அரசின் கோஷங்கள் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும்தான். ஏழைகளுக்கும் குறிப்பாக சாலைப் போக்குவரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது வெறும் கற்பனை மட்டுமே!

அதீத வரிவிதிப்புகள், பின்னடையச் செய்யும் கொள்கைகள், சட்டங்கள் போன்றவை சாலைப் போக்குவரத்துத் துறையை மேலும் அழிப்பதுடன், ஊழல், முறைகேடு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றையே வலுப்படுத்தும்.

டோல் கட்டணங்கள் உண்மையாகவே காலனி ஆதிக்கத்தின் குறியீடுகள். இவை, அத்துமீறல்கள் மற்றும் ஊழலின் கூடாரங்களாக உள்ளன. சுங்கச் சாவடிகளில் அசுரத்தனமாக வளரும் ஊழல், அத்துமீறல்கள், காலவிரயம் ஆகியவை காரணமாக இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் நலனை நீடித்திருக்கச் செய்யாது. எனவே வருவாய் வேண்டுமெனில் அவற்றை மறைமுக வரியாக வசூலிக்கலாம்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 373 சுங்கச் சாவடிகள் ரூ.1.73 லட்சம் கோடி முதலீ்ட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 72 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 14,192 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட 63 சுங்கச் சாவடிகளில் இருந்து ரூ.22,636 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

டோல் கட்டண வசூல் என்பது வெளிப்படையாக இல்லை.

ஐஐஎம் ஆய்வின்படி அடிக்கடி வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மனித உழைப்பு மற்றும் எரிபொருள் இழப்பு போன்ற இழப்புகளால் ரூ. 87 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.

காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக..!


அவர் மௌலான அபுல் கலாம் ஆசாத்துடன் நெருங்கி பழகியிருக்கிறார்.  அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார். கட்டுரைகளைப் படித்திருக்கிறார். மாபெரும் கவி அல்லாமா இக்பால் மனதில் பிரவாகமெடுத்த கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார். அவருக்கு மௌலானா அன்வர் ஷா கஷ்மீரியின் இமாமத்தில் (தலைமையில்) தொழும் நற்பாக்கியம் கிடைத்தது. ஹஸன் அஹ்மது மதனீ, முஃப்தி கிஃபாயதுல்லாஹ் போன்ற பெரும் மார்க்க அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமது இளமையில் சில நாட்களை ஸயீத் அதாவுல்லாஹ் ஷா புகாரியின் கல்விப் பாசறையில் பயின்றிருக்கிறார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவரை மிகச் சிறந்த சிந்தனையாளராக்கும் மைல்கற்களாக அமைந்தன.

இஸ்லாமிய பேரரசுகளின் வளமும் செழுமையும், பண்பாடும், கலாச்சாரமும் அந்த அரசுகள் தந்த அமைதியான வாழ்க்கை அமைப்பும், முஸ்லிம்கள் இஸ்லாமிய பேரொளியில் ஸ்பெயினிலிருந்து இந்தோனேஸியாவரை  ஆண்ட உன்னதங்களும் கண்களில் மிளிர்ந்தன. உலகாசையில் விழுந்த முஸ்லிம்கள் தங்கள் இலக்கையும், குறிக்கோளையும் மறந்து போனதால்.. அடைந்த இழப்புகள் அவரது இரவுகளை வேதனை மிக்க தூங்கா இரவுகளாக்கின. முஸ்லிம்கள் இஸ்லாமிய ராஜபாட்டையிலிருந்து விலகி நடந்ததால்.. இதன் பிறகு ஒரு புதிய இஸ்லாமிய பெயர் தாங்கி அமைப்பு உருவானதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனை மாற்றியமைத்து புதுயுகங்களை சமைக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை அவர் திட்டவட்டமாக நம்பினார்.

இந்த நேரத்தில் வெள்ளையனை விரட்டியடிக்க உக்கிரமான பன்முகப் போராட்டங்கள் இந்தியாவில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நச்சு விதைகளை விதைக்கிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இதன் விளைவாக 1915-இல், மதன் மோகன் மாளவியா இந்த மகா சபையை நிறுவினார். பின்னாளில் அது வகுப்புவாத அமைப்பாக உருவெடுத்தது. 1925-இல், கேசவ பலிராம் ஹெட்கேவார் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆரம்பித்தார். 1923-இல், நாக்பூரில் நடந்த வகுப்புக் கலவரங்களையொட்டி இந்துத்துவவாதிகள் செய்த பொய்யான பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ் உருவெடுக்க காரணங்களாயின.

உலக அரசியலை எடுத்துக் கொண்டால்.. ஸ்டாலினின் 'செம்படையினர்' நாத்திகவாதமே வாழ உரிமையுடையது என்ற எண்ணத்தில் ரஷ்யாவின் முஸ்லிம் பகுதிகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், சமர்கண்ட், நேஷாபூர், புகாரா போன்ற மாநிலங்களை ரத்தக் களரியாக்கினர். அப்பகுதிகளில் வசித்துவந்த முஸ்லிம் அறிஞர்களையும், மேதாவிகளையும் கொன்றொழித்து மசூதிகளையும், பாடசாலைகளான மதரஸாக்களையும் கால்நடை தொழுவங்களாக்கினர்.

நாத்திகவாதம், ஆத்திகவாதத்தை 'கிரெம்ளின்' மாளிகையிலிருந்து விரட்டியடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது. மற்றொருபுறமோ ஜெர்மன் 'நாஜி' தலைவர் ஹிட்லர் தனது இனவாத சித்தாந்தத்தை நிலைநாட்ட மனித பிணங்கள் மீது அரியணை அமைக்கும் தீவிர முயற்சியில் களம் இறங்கியிருந்தார்.

உலகை அமைதி பூங்காவாக்க வேண்டிய இஸ்லாமிய சக்தியோ அரசியல், பொருளாதாரம், அறிவியல் என்று வாழ்க்கையின் பல்வேறு துறைகளாக கூறு போடப்பட்டு இருந்தது. மேற்கத்திய சித்தாந்தம் முஸ்லிம்களின் வாழ்வில் திணிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக அறநெறிகளுக்கும், வாழ்வின் பிற துறைகளுக்கும் சம்பந்தமில்லை என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டது. பாரிஸ், லண்டன் கலாச்சாரங்கள் தாரளமயமாக்கப்பட்டு முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய வர்ணங்களுக்காளாயின.

1888-களிலேயே பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. 'பிளட்ஸ்டோன்' என்ற பிரமுகர், 'இளைஞர்கள் சமூகத்தின் முதுகுத்தண்டு போன்றவர்கள். அதனால், இளைய சக்தியை திசை திருப்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்களை நம் பக்கம் கவர்ந்துவிட்டால்.. இஸ்லாமிய வாழ்க்கை முறையை செயல்பட விடாமல் தடுத்துவிட முடியும்!"- என்ற ஆலோசனையை முன் வைத்தார். அத்துடன் நில்லாமல் மேசையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, "இது குர்ஆன்! முஸ்லிம்களின் வழிகாட்டி! இந்த நூலைவிட்டு அவர்களை விலக்க வேண்டும்!"-என்றார்.

இவரது ஆலோசனை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

பிரச்னைகளின் பிடியில் சிக்கி முஸ்லிம்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சிலர் நாட்டு விடுதலைக்காக.. சிலர் தொழிலாளர் உலகுக்காக.. இன்னும் சிலரோ 'பாஸிஸம்' வளர்வதற்காக தத்தமது சக்தி-சாமார்த்தியங்களை செலவழித்துக் கொண்டிருந்தார்கள். உலகமே, ரத்தக் களறியாகி.. மனிதகுலம் பிண மலைகளாய் குவிக்கப்பட்ட துயரம் வாய்ந்த நாட்களவை!

இந்த சூழலில் 16 வயதுகொண்ட அந்த துடிப்புள்ள இளைஞர் மனித குலத்துக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். வரவிருக்கும் நவீன அறிவியல் உலகை 'எழுதுகோல்தான்' ஆளப்போகிறது என்ற திடமான தீர்மானத்துக்கு வந்தார். அறிவின் மூல ஊற்றே எழுதுகோல்தானே! திருக்குர்ஆனும் இதற்கு சாட்சியாகவல்லவா இருக்கிறது.


1919 இல், தனது 16 வயதில் அவர் முதன் முறையாக 'ஜபல்பூரிலிருந்து' வெளியான 'தாஜ்' வார இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். மனித உள்ளங்களில் அன்பை பீறிட்டெழச் செய்வது இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்றும், அதன் பக்கம் திரும்புவது ஒன்றே ஈடேற்றத்துக்கான வழி என்றும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

1920 இல், தாஜ் இதழ் நின்று போனது. அதன் பிறகு அந்த இளைஞர் தில்லி சென்றடைந்தார். தில்லியில் 'ஜமீயதுல் உலமாயே ஹிந்த'  என்ற அமைப்பு 'முஸ்லிம்' என்ற பெயரால் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தது. இப்பத்திரிகையின் ஆசிரியராக அந்த இளைஞர் பொறுப்பேற்றார். தமது அற்புதமான ஆக்கங்களால் முஸ்லிம் சமுதாயத்தில் எழுச்சியை உருவாக்க கடுமையாக உழைத்தார்.

1926 இல், சுத்த சன்மார்க்க சங்கத்தின்   தலைவர் பண்டிட் சச்தானந் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒரு முஸ்லிம் இளைஞர். இச்சம்பவம் காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த கொலையை காந்திஜி விமர்சிக்கும்போது, "இஸ்லாம் இரத்தம் சிந்துவதை ஊக்குவிக்கிறது" என்றும், "இஸ்லாத்தின் துவக்கமும் வாள்தான்! அதன் முடிவும் வாளகவும்தான் இருக்க முடியும்!" - என்று சொன்னார்.

காந்தியின் இந்த கடும் விமர்சனத்தின் மீது பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த அபாண்டம் பெரும் பிரச்னையாக வடிவெடுத்தது.

இச்சமயத்தில், மௌலானா 'முஹம்மது அலி ஜவஹர்' தில்லியின் ஜாமியா மஸ்ஜிதில் அவசரகால கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் மௌலானா முஹம்மது அலி ஜவஹரின் சொற்பொழிவைக் கேட்டு பெரிதும் பாதிக்கப்பட்டார். மௌலானாவின் கேள்வி, "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- அவரது நினைவில் எழுந்து அவரது தூக்கத்தைப் பறித்துவிட்டது. அதன் விளைவாக, 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' (இஸ்லாத்தில் ஜிஹாத்தின் உண்மை நிலை) என்ற புத்தகத்தை எழுதினார். உலகில் அமைதியை நிலைநாட்ட வந்த இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறது என்ற தவறான கருத்தைக் கொண்டோருக்கு அது தக்க பதிலாக இருந்தது. மேற்கத்தியவாதமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று நினைத்துவந்த உலகத்தாருக்கு அந்த இளைஞரின் எழுதுகோலிலிருந்து பிறந்த அற்புதம் அது.

'இஸ்லாம் ஜிஹாத்' என்ற பெயரில் 'அல் ஜமியத்' பத்திரிகையில் (அந்த இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) அவருடைய ஆக்கங்கள் வெளிவரலாயின. அதன் பிறகு அது 500 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிடப்பட்டது. இஸ்லாமிய இலக்கியத்தில் இன்றுவரை அந்தப் புத்தகம் பேரிலக்கியமாக போற்றப்பட்டு வருகிறது. மார்க்க அறிஞர்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பொக்கிஷமாக  கருதப்படுகிறது   மகாகவி அல்லாமா இக்பால். 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' என்னும் இந்தப் புத்தகத்தை உயர்ந்த நூல் என்று மனந்திறந்து பாராட்டியுள்ளார்.

மகாகவி அல்லாமா இக்பால்
தமது 24 வயதுக்குள் உலகின் கவனத்தை திசை திருப்ப காரணமான அந்த இளைஞர்தான் இன்று 'மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி' என்று அழைக்கப்படுகிறார்.

1928 இல், ஜமியத்துல் உலமாயே ஹிந்த் அரசியல் சார்புடைய இயக்கமாக மாறியது. 'அல் ஜமியத்' இதழும் கட்சியின் பத்திரிகையாகிவிட்டது. இந்த நடவடிக்கை மௌலானாவுக்கு பிடிக்கவில்லை. அல் ஜமிஅத்துக்கு விடை கொடுத்துவிட்டு 1932 இல், இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுவதில்  கவனம்  செலுத்த ஆரம்பித்தார்.  இந்த  நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து 'தர்ஜுமானுல் குர்ஆன்' என்ற பெயரில் மாத இதழ் ஒன்று  வெளிவந்து  கொண்டிருந்தது.  மௌலானா அதன் ஆசிரியராக  பொறுப்பு  ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனில்  ஒளிவெள்ளமே  மானுட பிரச்னைகளுக்கான தீர்வு என்று மனங்கவரும் விதமாக படிப்பவர் உள்ளங்களை ஈர்க்கும்விதமாக எழுதலானார்.

1933-1937 வரை இஸ்லாமிய சித்தாந்தத்தை உள்வாங்கி, சமூக -அரசியல்துறைச் சார்ந்த பல்வேறு புத்தகங்களை மௌலானா எழுதினார்கள். அப்போது எழுதப்பட்டவைதான் வட்டி, பர்தா, கணவன்-மனைவி உரிமைகள் மற்றும் கடமைகள், இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு போன்ற உயரிய வாழ்வியல் இலக்கியங்கள்.

இவ்வெளியீடுகள் மேற்கத்திய பிரச்சார சாதனங்களுக்கு பெருத்த தலைவலியாக மாறின. இஸ்லாம் மற்றும் அதன் உன்னத கருத்துக்களை சகித்துக் கொள்ள அவை தயாராக இல்லை. சுரண்டலற்ற, கண்ணியம் வாய்ந்த இஸ்லாமிய சமூக அமைப்பை ஜீரணிக்க மேற்குலக ஆதிக்க சக்திகளால் முடியவில்லை.

மௌலானாவின் புத்தகங்கள் இஸ்லாமிய உலகில் பெரும் அறிவு புரட்சியைத் தோற்றுவித்தன. அதிலும் குறிப்பாக முதலாளித்துவத்துக்கும், கம்யூனியஸத்துக்கும் மூளைச் சலவைச் செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டன.


1938 இல், அல்லாமா இக்பாலின் அழைப்புக்கிணங்க மௌலானா மௌதூதி ஹைதராபாத்திலிருந்து லாஹீருக்குச் சென்றார். அவர் லாஹீர் சேரும்போது, இந்தியா சுதந்திரமடையப் போகிறது என்ற செய்தி ஊர்ஜிதமானது.

சுதந்திர இந்தியாவில் அமையப் போகும் புதிய அரசு, இந்திய முஸ்லிம்களின் சமூக - அரசியல் வாழ்க்கைக்கு அந்த அரசு தரும் உத்திரவாதம் இவற்றை குறித்த கவலைகள் மௌலானாவின் மனதை அரித்தெடுக்கலாயின.

1941 ஆகஸ்ட், 26 இல், வெறும் 75 பேர் கொண்ட ஒரு சிறு குழுவை ஒன்றுபடுத்தி 'ஜமாஅத்தே இஸ்லாமி' (இஸ்லாமிய கூட்டமைப்பு) என்ற இயக்கத்தை மௌலானா ஆரம்பித்தார்கள். அக்குழுவினரால் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒருபுறம் இயக்கப் பொறுப்புகள் மறுபுறம் எழுத்துப் பணிகள் என்று மௌலானா சூறாவளியர் சுழன்றார்கள்.

லெனின் இஸ்லாத்தை ஏளனம் செய்யும் வகையில், "வானத்தில் சுவனம் அமைப்பதைவிட பூமியில் சுவனம் அமைப்பதே எங்களது முக்கியப் பணி!" - என்றார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில் மௌலானா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பெருந்திரளாய் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், "வானத்தில் சுவனம் அமைப்பதை லட்சியம் கொண்டவரால் மட்டுமே பூமியிலும் சுவனம் அமைக்க முடியும் என்றே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன!" - என்றார். தொடர்ந்து சொல்லும்போது, "ஆகாயத்தில் சுவனம் அமைக்க விருப்பமில்லாதவர்களால் ஆகாயத்திலும் நரகமே; பூமியிலும் நரகமே அமைப்பார்கள்! ஒருகாலம் வரும் ; அன்று மாஸ்கோவில் கம்யூனிஸம் சமாதி கட்டப்படும்!" - என்றார்கள் தீர்க்கதரிசனத்தோடு!

மௌலானா மௌதூதியின் தலைமையில் உருவான இஸ்லாமிய பேரெழுச்சி உலகம் முழுவதும் பரவலாயிற்று. 1970 இல், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய 'தஃப்ஹீமுல் குர்ஆன்' உருதுவில் முழுமை அடைந்தது. திருக்குர்ஆனின் அந்த விளக்கவுரை இன்று உலகின் பல்வேறு மொழிகளிலும், இந்தியர்களின் பெரும் பகுதி மொழிகளில் ஏறக்குறைய 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மௌலானாவின் பல நூல்கள் உலகின் 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய இலக்கிய உலகில் பல்வேறு  சாதனைகள் புரிந்தோர் எல்லாம் மௌலானாவின் நூல்களையே 'சார்பு' நூல்களாக கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன உலகுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இறுதி வேத நூலான திருக்குர்ஆனின் கருத்துக்களுக்கு விளக்கவுரை எழுதியவர்களில் தலையாய இடம் பிடித்தவர்கள் மௌலானா அவர்கள்.


1947, ஆகஸ்ட் 15 இல், இந்தயா-பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தன. இருபுறமும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. பாகிஸ்தானில் மௌலானா மௌதூதியும், இந்தியாவில் காந்தியும் வகுப்புக் கலவரங்களைத் தடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்கள்.


ஆனால், காந்தியின் முயற்சிகளை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்தின. மெளலானாவின் முயற்சிகளையும், அமைதிக்கான பெரும் பணிகளையும் இருட்டடிப்புச் செய்தன. இஸ்லாம், முஸ்லிம்களின் விஷயத்தில் ஊடகங்களின் போக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் ஒரே மாதிரியாக தொடர்கிறது.

தனி நபராக இஸ்லாமிய பாதையில் பயணித்த மெளலானாவின் அடிச்சுவட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அணி திரண்டார்கள்.


இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நவீன சாதனங்கள் மூலமாக மனித குலத்துக்கு எட்டச் செய்ய கடந்த நூற்றாண்டில் பாடுபட்ட மாமனிதர் மௌலானா மௌதூதி ஆவார்.

1978-இல் சவுதி அரசின் 'சவுத் அல் ஃபைஸல்' விருதுக்காக மௌலானா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்வதேச அளவில் நடக்கும் இந்த தேர்வை சர்வதேச அளவிலான அறிஞர் குழுதான் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் சர்வாதிகாரி 'ஷா'வின் ஆட்சி இமாம் ஆயதுல்லாஹ் குமைனியின் தலைமையில் நடந்த மக்கள் புரட்சியால் கவிழ்ந்தது. ஈரானின் அதிபராக குமைனி தேர்வு செய்யப்பட்டார்.

அதிபரானதும் குமைனி முதன்மை பணியாக தமது பிரதிநிதி குழு ஒன்றை மெளலானா மௌதூதியை சந்திப்பதற்காக லாஹீருக்கு அனுப்பி வைத்தார்.

மௌலானாவும் இஸ்லாமிய ஆட்சிக்கான நெறிமுறைகளையும், அரிய பல ஆலோசனைகளையும் அக்குழுவினருக்கு வழங்கினார்கள்.

ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:

"அன்புள்ள தந்தை நிகர் மெளாலானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன்.

மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"

கடிதத்தை படித்து முடித்த மௌலானாவின் கண்கள் குளமாயின. 

"உண்மைதான்! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார்கள் கனத்த குரலில்.


27, மே மாதம் 1979 - இல், தமது சக இஸ்லாமிய சேகவரும் மகனுமான டாக்டர் அஹ்மது பாஃரூக்குடன் மௌதூதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்கள். ஆகஸ்ட் 20 ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 4 இல் நுரையீரல் நோய் சம்பந்தமான அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மௌலானா அவர்கள் செப்டம்பர் 22 அதிகாலையில் இறையடி சேர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி.. வ இன்னா இலைஹி ராஜிவூன்.."

மௌலானாவின் மரணம் முஸ்லிம் உலகுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. உலக முஸ்லிம் சமுதாயம் சோகப் பெருங்கடலில் மூழ்கியது. சில இளைஞர்கள் மூர்ச்சையடைந்து போனதாக செய்திகளும் வெளியாயின. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இரங்கல் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

மௌலானாவின் பௌதீக உடல் அமெரிக்காவிலிருந்து பி.ஐ.ஏ. பிரத்யேக விமானத்தில் லாஹீர் கொண்டு வரப்பட்டது. கதாஃபி ஸ்டேடியத்தில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட. உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்திருந்த அறிஞர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் உட்பட பல நாடுகளின் ஆட்சியாளர்கள் அத்தொழுகையில் கலந்துகொண்டார்கள்.

எழுதுகோலையே தனது போராட்டக்கள ஆயுதமாக்கி ஜிஹாத் என்னும் அறப்போர் புரிந்த மாமனிதரின் இறுதித் தொழுகையை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அன்றைய தலைவர் பேரறிஞர் அல்லாமா யூஸீஃப் அல் கர்ளாவி தலைமைத் தாங்கி நடத்தி வைத்தார்கள்.


இன்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் நம்மிடையே இல்லை. ஆயினும், அவர் விட்டுச் சென்ற பணிகள் 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்' வடிவில் நாடு முழுவதும் பெரும் விருட்சமாய் படர்ந்துள்ளது.

மெளலானா விட்டுச் சென்ற பணிகளை இன்னும் துடிப்பாக எடுத்துச் செல்ல வேண்டியது நமது பொறுப்பு. இந்தப் பணிகள் திருக்குர்ஆன் மற்றும் திருநபிகளாரின் சுன்னாஹ் - இவை இரண்டும் முஸ்லிம்கள் மீது சுமத்தும் பொறுப்புகளின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டவை.

யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.

இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!

Friday, September 18, 2015

இஸ்லாம் வாழ்வியல்: எல்லாம் மறுமைக்காகஒருநாள். நபிகளாரைக் காண நபித்தோழர் உமர் சென்றார்.

பள்ளிவாசலை ஒட்டிய ஒரு சிறு குடிசையில் நபிகளார் வசித்து வந்தார்.

களிமண் சாந்தால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்கள். மேலே பேரீச்சம் கீற்றுகளால் வேயப்பட்ட கூரை. கட்டாந்தரை. இதுதான் நபிகளாரின் வீடு.

குடிசையின் வாசல் ஓரத்தில் உமர் நின்றார். முகமன் சொன்னார்.

“உமர் பின் கத்தாப் வந்திருக்கிறேன் இறைவனின் தூதரே! உள்ளே வரலாமா?” – என்று அனுமதி வேண்டி நின்றார்.

பதில் முகமன் சொன்ன நபிகளார், “உள்ளே வாருங்கள் உமரே! – என்று வீட்டுக்குள் அழைத்தார்.

சிறிய வாசல் கொண்ட அந்தக் குடிசையில் குனிந்து நுழைந்த உமர் தரையில் அமர்ந்தார். சுற்றி நோட்டம் விட்டார்.

உள்ளே மெத்தை ஏதும் இல்லை. ஒரு சிறிய பாய் மட்டும் இருந்தது. அதில்தான் நபிகளார் பாதி உடல் தரையிலும், பாதி உடல் பாயிலுமாய் படுத்திருந்தார். பாயின் கோரைகளின் அழுத்தம் நபிகளாரின் முதுகில் வரிவரியாய் பதிந்திருந்தன. உடலில் ஒரு முரட்டு ஆடை இருந்தது. தலைக்கு இலைதழைகளால் நிரப்பப்பட்ட தலையணை இருந்தது. குடிசையில் உண்பதற்கு வசதியான உணவு ஏதும் இல்லை. படுப்பதற்கு எந்தவிதமான படுக்கை வசதிகளும் இல்லை. ஒரு மூலையில் கொஞ்சம் பெர்ரி இலைகளும், ஒரு துடைப்பமும் இருந்தன. சுவற்றில் தைக்கப்படாத தோலாடை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட உமரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அதைக் கண்டு நபிகளார், “உமர்..! ஏன் அழுகிறீர்கள்?” – என்று விசாரித்தார்.

“அழாமல் என்ன செய்வது இறைவனின் திருத்தூதரே! அழாமல் வேறு என்னதான் செய்வது? நான் இங்கே காணும் காட்சிகள் என்னை நிலைக்குலையச் செய்கின்றன. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதரின் இருப்பிடமும், உடைமைகளும் என்னைக் கலங்கடித்துவிட்டன.

பைசாந்திய, பார்சிய அரசர்கள் எல்லாம் ஆடம்பரமாக, வசதியாக செல்வச் செழிப்பில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் சிம்மாசனங்களோ பொன்னால் செய்யப்பட்டவை. அவர்களின் படுக்கைகளோ தூய பட்டால் நெய்யப்பட்டவை!” – என்ற உமர் கண்களைத் துடைத்துக் கொண்டே குடிசையினுள் இருந்தவற்றைச் சுட்டிக் காட்டியவாறு, “இதோ..! இவைதான் தங்கள் உடைமைகள், சொத்து, சுகங்கள்!” எனறு கனத்த குரலில் பெருமூச்சு விட்டவாறே சொன்னார்.

இதைக் கேட்டதும், நபிகளாரின் முகத்தில் புன்முறுவல் இழையோடியது. கனிவுடன் உமரை நோக்கினார். மென்மையான குரலில் சொன்னார்:

“உமரே! நானும் இந்த உலகின் சுகபோகங்களையும், ஆடம்பரங்களையும் அனுபவிக்கலாம்தான்! உலகின் அரசர்கள் எல்லோரும் தங்கள் பங்கிற்கான இன்பங்களை இங்கேயே…. இம்மையில் அனுபவித்துவிடலாம்தான்! ஆனால், இவ்வலகைவிட்டு பிரிந்து செல்லும்போது, மரணத்திற்குப் பின் எதிர்படவிருக்கும் மறுமை உலகில் அவர்கள் பங்கு ஏதுமில்லை. வெறும் நஷ்டத்திலிருக்கும் உமரே! ஆம்..! அவர்கள் நஷ்டவாளிகளாக இருப்பார்கள்! நிலையாக நீடித்திருப்பவை மறுமை இன்பங்கள்தான் உமரே! இது உமக்கு சந்தோஷம் அளிக்கவில்லையா?”

நபிகளாரின் அரசு, மறுமை உலகின் நீண்ட நெடிய இன்பங்களின், வெகுமதிகளின் எதிர்ப்பார்ப்பில் இறையச்சத்துடன் வாழத் தயாராக இருக்கும் தலைவர்களால் ஆளப்படும் அரசு என்பது நபித்தோழர் உமர் புரிந்து கொண்டார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 17.09.2015 அன்று பிரசுரமான எனது ஆக்கம்)

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இஸ்லாம் வாழ்வியல் முந்தைய இணைப்புகளுக்கு:

1. இரவில் ஒலித்த அழுகுரல் : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_21.html

2. சவாலை ஏற்ற சிறுவன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/blog-post_15.html

Tuesday, September 15, 2015

இஸ்லாம் வாழ்வியல்: சவாலை ஏற்ற சிறுவன்இராக்கின் 'கூபா' நகருக்கு விதண்டாவாதம் புரியும் மேதாவி ஒருவர் வந்தார். அவ்வூர் அறிஞர்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார். யாராலும் பதில் சொல்ல முடியாமல் போகவே கடைவீதியின் உயர்ந்த மேடையில் நின்று கொண்டு மக்களுக்கு அறைகூவல் விட்டார்.

அதை ஒரு சிறுவன் கேட்டான். சவாலை ஏற்றான்.

இது முதல் கேள்வி:

"தம்பி! இப்போது உன் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?"

சிறுவன் அமைதியாக, "அய்யா, கேள்வி கேட்பவரைவிட பதில் சொல்பவரே அந்தஸ்தில் உயர்ந்தவர். அதனால், நீங்கள் மேடையை விட்டுக் கீழறங்கி வர வேண்டும்!" - என்றான்.

மேதாவி கீழே இறங்கினார்.

மேடையின் மீது ஏறிய சிறுவன், "இப்போது என் இறைவன் இறைநம்பிக்கையற்ற ஒருவரின் மதிப்பைக் குறைத்து, தன் அடியானின் மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கின்றான்" - என்றான்.

சுற்றி நின்ற மக்கள், "உண்மை! உண்மை!" - என்று அதை ஆமோதித்தார்கள்.

திடுக்கிட்ட மேதாவி இரண்டாவது கேள்வி கேட்டார்:

"தம்பி! உன் இறைவனுக்கு முன்னால் என்ன இருந்தது?"

"பெரியீர்! நீவிர் 9 லிருந்து இறங்கு வரிசையில் எண்களைக் கூறுங்கள்!"

"ஒன்பது.. எட்டு.. !" - எண்ணிக் கொண்டே வந்த மேதாவி ஒன்றில் வந்து நின்றார். "அவ்வளவுதான். ஒன்றுக்கு முன்னால் எதுவும் இல்லை தம்பி!" - என்றார்.

சிறுவன் புன்முறுவலுடன், "அதுபோலத்தான் இதுவும். இறைவனுக்கு முன்னால் எதுவும் கிடையாது. அவன் முதலும் முடிவுமானவன்; ஆதியும், அந்தமுமில்லாதவன்!" - என்றான்.

மேதாவிக்கு வியர்த்துக் கொட்டியது. கடைசி கேள்வியைக் கேட்டார்:

"தம்பி! இறைவனின் முகம் எந்தப் பக்கமாய் உள்ளது?"

சிறுவன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தான்.

"அய்யா! இதன் வெளிச்சம் எந்தப் பக்கம் உள்ளது?" - என்று கேட்டான்.

"நாலா பக்கமும்" - என்றார் மேதாவி.

"இறைவன் ஜோதி வடிவானவன். அதனால், அவனது முகம் எல்லாப்புறமும் உள்ளது!" - என்றான் சிறுவன்.

தோல்வியை ஒப்புக் கொண்ட மேதாவி அங்கிருந்து அகன்றார்.

சிறுவயதில் இத்தகைய அறிவைப் பெற்றிருந்தவர், இஸ்லாமிய சட்ட நிபுணர்களில் உச்சாணியில் வைத்துப் போற்றப்படும் பேரறிஞர் இமாம் அபூஹனீபா அவர்கள்தான்.

(தினமணி, ஆன்மிகச் சிந்தனையில் 07.07.1995 அன்று பிரசுரமான எனது கட்டுரை)  

'''''''''''''''''''
இஸ்லாம் வாழ்வியல் முந்தைய இணைப்புகளுக்கு:1. இரவில் ஒலித்த அழுகுரல் : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_21.html

 


அழைப்பது நம் கடமை - 12,'கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி!'

 

உண்மையில், அரசியல் அமைப்பு என்பது என்ன? அரசியல் அமைப்பின் நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும்?

அழைப்பாளர்கள் தங்கள் அழைப்பியல் களங்களில் பயன்படுத்த வேண்டிய உயிர்துடிப்புள்ள அந்த வரலாற்று நிஜங்கள் இதோ!

ஒருமுறை. ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!)  மதீனத்துத் தெருவில் நண்பர்கள் சூழ நடந்து  சென்று கொண்டிருந்தார்கள். உடன் அவருடைய மகன் அப்துல்லாஹ் பின் உமரும் (இறையருள் பொழிவதாக!) இருந்தார்.

தெருவில் ஒரு சிறுமி தென்பட்டாள். வறுமையின் மொத்த வடிவமாய் அவள் திகழ்ந்தாள்.

பரட்டைத் தலை. ஒட்டுப் போட்ட சட்டை. இடுங்கிய கண்கள்.

சிறுமியிடம் இரக்கம் கொண்ட ஜனாதிபதி உமர் அவர்கள், "யாரிந்த ஏழைப் பெண்?"-என்று அவளைப் பற்றி விசாரித்தார்கள்.

பக்கத்தில் வந்து கொண்டிருந்த மகன் அதற்கு நேரிடையாக பதில் சொல்லாமல் திருப்பி கேள்வி கேட்டார்:

"இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு இந்தப்  பெண் யாரென்று தெரியவில்லையா?"

"இல்லை. இந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியவில்லை. யார் இவள்?"

அரபுலகையும் தாண்டி அகண்டு விரிந்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர் உமர் அவர்களின் மகனார் பதில் தந்தார்:

"இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவள் என் மகள்!"

"என்ன! அப்துல்லாஹ்..! இவள் உமது மகளா? இவ்வளவு வறிய நிலையில்..?"

நம்ப முடியாமல் கேட்டார்கள்.

"ஆமாம்! தந்தையே! இவள் எனது மகளேதான்! அரசு பொது நிதியகமான பைத்துல்மாலிருந்து உங்கள் குடும்பத்தாராகிய எங்களுக்கு அதிகப்படியாக ஒரு பைசாவையும் தருவதில்லை. எனது வறுமை.. என் மகளை இப்படியாக்கி விட்டது!" - அப்துல்லாஹ் பின் உமரின் குரல் உடைந்து வெளிப்பட்டது.


ஆனால், ஜனாதிபதி உமர் அவர்கள் இறைநம்பிக்கையின் உறுதியுடன் சொன்னார்கள்:

"மகனே! இறைவனை சாட்சியாக்கிக் கூறுகின்றேன்! மற்றவர்களுக்கு பொதுவாக எதைத் தருகின்றேனோ அதைவிட அதிகமாக என் குடும்பத்தாருக்குத் தர என்னிடம் ஏதுமில்லை! இது குறித்து இறைவனின் வேதம் நம்மிடையே தீர்ப்பு வழங்கட்டும்!"

தனது மகனின் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் கண்ணீரையும் உமர் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இன்னொரு முறை. ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள்.

இதனை ஜனாதிபதி உமர் அவர்கள் கண்டார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம் சொன்னார்கள்:

"கொஞ்சம் இந்த பரிவாரங்களுக்கு என்னோடு சேர்ந்து காவல் நிற்க முடியுமா?"

இதற்கு அந்த நபித்தோழரும் ஒப்புக் கொண்டார்கள்.

இருவரும் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலாய் நின்றார்கள். பிந்தைய இரவான தஹஜ்ஜுத் நேரத்தில் இருவருமாய் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் அவர்கள் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்.

கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் அவர்கள் தாயிடம் விரைந்து சென்றார்கள். "அம்மா! இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!" - என்றார்கள்.

மீண்டும் அதே குழந்தை அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி அவர்கள் குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்கள்.

இப்படி மூன்று முறை நடந்தது.


கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி அவர்கள், "அம்மா! நீங்கள் நல்ல தாய் போல நடந்து கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!" - என்றார்கள்.

தான் ஜனாதிபதி உமர் அவர்களிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்:

"இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்றப் பெயரில் தொந்திரவு செய்துவிட்டீர்கள். நான் இந்தக் குழந்தைத் தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்று வருகின்றேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விடமாட்டேன் என்கிறது!" - என்று சலித்துக் கொண்டாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர் அவர்கள், "அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்கும் அவசியம்தான் என்ன?" - என்று கேட்டார்கள்.

"காரணமில்லாமல் செய்ய நான் என்ன கல் நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!"

"சரி..இந்த குழந்தைக்கு வயதென்ன?"

"குழந்தை பிறந்து சிலமாதங்கள்தான் ஆகின்றன!"

"குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!" - என்றவாறு ஜனாதிபதி அங்கிருந்து சென்றார்கள்.

அதிகாலைத் தொழுகையை முன்நின்று நடத்திக் கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமர் அவர்கள் அழுதுவிட்டார்கள். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழு தழுத்தது. தொழுகையின் முடிவில் சொன்னார்கள்:

"உமர் அழிந்தான்! அவன் இறைநம்பிக்கையாளர்களின் குழந்தைகளைக் கொன்று விட்டான்!"

அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் இப்படி ஆணை பிறப்பித்தார்கள்:

"குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப் படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால்குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி உண்டு!"

சிறப்பு மிக்க இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை இதுவரை உலகம் கண்டதில்லை.

ஓர் அகண்ட பேரரசின் ஜனாதிபதியின் குடும்பத்தார் வறுமையில் உழன்றார்கள்.

சர்வ வல்லமைக் கொண்ட ஜனாதிபதி தமது குடிமக்களின் பரிவாரத்துக்கு காவலனாய் நின்றார்கள்.

அந்த பரிவாரத்தின் கால்நடைகளும், மனிதர்களும் நன்றாக ஓய்வெடுக்க உதவினார்கள்.

ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) ஒரு சாமான்ய கடைநிலைக் காவலனைப் போல தங்களின் பொறுப்பை நிறைவேற்றுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:


1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html
7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html

11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html

Monday, September 14, 2015

சிறுவர் கதை:"என் தம்பிதான்!"


 “யம்மா, பசிக்குது!”

“இன்னைக்கு சனிக்கிழமை. உங்கப்பா கூலி வாங்கிட்டு வருவார். வந்ததும் சமைச்சுப் போடறேன்டா ராசா. கொஞ்சம் பொறுத்துக்கோ!”

“போம்மா! நீ எப்பப் பார்த்தாலும் இப்படிதான் சொல்றே. கடைசியிலே கஞ்சி தண்ணி கொடுத்து தூங்க வச்சுடறே!’

“என்ன ராசா செய்யறது? நான் வெச்சுகிட்டா இல்லேன்றேன்?”

“பசிக்குதும்மா..! தாங்க முடியலே!”

பசி தாளாமல் ராஜா அழும்போதுதான் வெளியிலிருந்து அந்தக் குரல் கேட்டது:

“ராஜா.. ராஜா..!”

ராஜா எட்டிப் பார்த்தான். குடிசைக்கு வெளியே முஸ்தபா நின்றிருந்தான். அவன் கையில் ஒரு ‘தூக்கு’ பாத்திரம் இருந்தது.

“வாடா மசூதிக்குப் போகலாம். ரம்ஜான் ‘நோன்பு-கஞ்சி’ ஊத்துவாங்க. வாங்கிட்டு வரலாம்!”

ராஜா அம்மாவைப் பார்த்தான். அந்தப் பார்வை, ‘பசிக்குதும்மா. கஞ்சியாவது குடிக்கலாமா?”- என்று கெஞ்சுவதைப் போலிருந்தது.

அம்மாவின் கண் கலங்கியது. எதுவும் பேசாமல் அவள் ஒரு பாத்திரத்தை ராஜாவிடம் கொடுத்தாள்.

முஸ்தபாவும் – ராஜாவும் தோளில் கை போட்டுக் கொண்டு மசூதியை நோக்கிச் சென்றார்கள்.

வழியில் ராஜா கேட்டான்:

“டேய்.. முஸ்தபா! எனக்கும் கஞ்சி கிடைக்குமா?”

“ஏன் கிடைக்காது?”

“நான் இந்துவாச்சேடா!”

“இந்துன்னா உனக்குப் பசிக்காதா?”

“உம்… பசிக்கும்.. கேட்டேன்.!”

“இப்ப எனக்கும் பசி. உனக்கும் பசி. பேசாமல் வா. நான் பார்த்துக்கிறேன்.

மசூதி.

ஒரு மூலையில் பெரிய பெரிய அண்டாக்களில் நோன்பு கஞ்சி தயாராகிக் கொண்டிருந்தது. கஞ்சி வாங்க வந்த பிள்ளகைளின் இரைச்சல் காதைத் துளைத்தது.

“பசங்களா.. கத்தாம இப்படி அமைதியா வந்து லைன்ல நில்லுங்க”

ஒரு வெள்ளைத்தாடி பெரியவர் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைத்தார்.

வரிசையிலிருந்த ராஜா முணுமுணுத்தான்:

“டேய்.. முஸ்தபா! எனக்கு பயமாயிருக்குடா!”

“உஷ்..! பேசாம வா. நான் பார்த்துக்கிறேன்”

“இருந்தாலும் பயமா..” – ராஜா இழுத்தான்.

முஸ்தபா சட்டென்று தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றினான். ராஜாவின் தலையில் மாட்டி விட்டான்.

பிள்ளைகளுக்கு கஞ்சி ஊற்ற ஆரம்பித்தார்கள். வரிசை நகர்ந்தது.

ராஜாவுக்கு திக்… திக்’ என்றிருந்தது.


அண்டாவை நெருங்கியதும், கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்தவர் ராஜாவைப் பார்த்து, “இவன் யாரு? புதுசா..!” – என்று கேட்டார்.

“இவன் என் தம்பி!” – பின்னாலிருந்த முஸ்தபா தயங்காமல் பதில் சொன்னான்.

ராஜாவின் பாத்திரத்தில் கஞசி ஊற்றப்பட்டது. அதன்பிறகுதான் அவனால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

மசூதிக்கு வெளியே இருவரும் வந்தார்கள். முஸ்தபா ராஜாவின் பாத்திரத்தைப் பார்த்தான்.

அவரசத்தில் கொஞ்சமாக ஊற்றியிருந்தார்கள்.

ராஜா பாத்திரத்தில் வழிந்திருந்த கஞ்சியை தொட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.

“ராஜா..! பாத்திரத்தைத் திற!”

“ஏண்டா?”

“இன்னும் கொஞ்சம் ஊத்தறேன். அம்மாவுக்கும் கொடு. பாவம்..! அவங்களும் பசியாயில்லே இருப்பாங்க!”

முஸ்தபாவும் – ராஜாவும் புறப்பட்டார்கள். தோளில் கையைப் போட்டவாறு நடந்தார்கள்.

ராஜா கேட்டான்: “டேய்..! முஸ்தபா! இன்னும் எத்தனை நாள் நோன்பு கஞ்சி ஊத்துவாங்க?”

“ஒரு மாசத்துக்கு ஊத்துவாங்கடா! ஆமாம்..! ஏன் கேட்கிறே?”

“இல்லே ஒரு மாசம் கவலையில்லாம இருக்கலாம்னுதான்!”

மீண்டும் தோளில் கையைப் போட்டுக் கொண்டு அந்த சின்ன ‘மனிதர்கள்’ நடந்தார்கள்.

(அக்.27, 1999-ல், இந்தியா டுடே சிறப்பு இணைப்பில் பிரசுரமான எனது சிறுவர் கதை)அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 5: 'ரொட்டித் துண்டுகள்!'இயற்கை வனப்பின் விலாசமாக இருந்தது அந்த மலைக்குன்று!

அங்கே ஒரு துறவி.

இறைவனைத் தொழுது நன்றி செலுத்துவதற்காக அந்த இடத்துக்கு அவர் வந்து அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டன.

மலை முகட்டிலிருந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த துறவியின் முகத்தில் புன்முறுவல்.

"உலக வாழ்க்கை சொற்பமானது! மறுமையோ நீண்ட நெடியது.. அழிவில்லாதது! உலக மாந்தர் சென்று சேர வேண்டிய அசலான தாயகம் அது!" - என்ற நிலையாமைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட மந்தகாசமது!

சில நாட்களுக்கு முன் பெய்திருந்த மழையால் அந்தப் பகுதி முழுவதும் சௌந்தர்ய சேலை கட்டியிருந்தது. அந்த அழகை ரசித்து அள்ளிப் பருக முடிவெடுத்த துறவி, வழியில் உண்ண இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொண்டு நடந்தார்.

அப்போது அவர் கண்களில் ஓர் இளமங்கை பட்டாள்.

படைப்பின் திறன் அனைத்தையும் இறைவன் அவள் மீது வாரி இறைத்திருந்தான்.

'களுக்'கென்ற சிரிப்பும், ஒய்யார நடையுமாய் வந்தவள் துறவியிடம் பேசவும் செய்தாள்.

அதேபோல, துறவியின் பேச்சை முகம் மலர ரசிக்கவும் செய்தாள்.

ஏகாந்தமும், அவளுடைய அழகும் உணர்வுகளைத் தூண்டிவிட இருவரும் மலர்-வண்டுகளாய் மாறினர்.

பிறகு அருகிலிருந்த அருவியில் குளிக்கச் சென்றார் துறவி.

வழியில் பசிக் கொடுமையால் வாடிக் கொண்டிருந்த ஒரு யாசகனுக்கு கையிலிருந்த ரொட்டித் துண்டுகளை இரக்கப்பட்டு கொடுத்தார்.

திடிரென்று ஒருநாள் அவர் இறந்துவிட்டார்.

இறை சந்நிதியில் நிறுத்தப்பட்ட அவரது கணக்கு-வழக்குகள் எடை போடப்பட்டன. அறுபதாண்டு தொழுகை, தியானங்கள் நன்மையின் தட்டிலும்,

இளம் பெண்ணுடன் கொண்ட தகாத 'விபச்சார' உறவு பாவங்களின் தட்டிலும் நிறுத்தப்பட்டபோது, பாவங்களின் தட்டே எடை கனத்திருந்தது.

அதன் பின் அவர், பசியால் வாடிய யாசகனுக்குச் செய்த தர்மமான இரண்டே இரண்டு ரொட்டித் துண்டுகள் நன்மையின் தட்டில் வைக்கப்பட்டதும் அதன் எடை கூடி விட்டது.

துறவியின் அந்த தர்மச் செயலலால் மகிழ்வுற்ற இறைவன், துறவியின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவரை மன்னித்து ஈடேற்றமளித்தான்.

தான தர்மங்களின் சிறப்பை வலியுறுத்தி அண்ணல் முஹம்மது நபிகளார் (ஸல்) தமது தோழருக்குச் சொன்ன முன் சென்று போன சமுதாயத்தாரின் வரலாற்றுச் சம்பவம் இது.

-- இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க: 

Sunday, September 13, 2015

லென்ஸ் கண்ணாலே:009- காமிரா எப்படி இயங்குகிறது?


என்ன அற்புதமான காட்சி அது!

அதை கண்டு வியந்து போகிறீர்கள்!

அதோ..! அதோ..! அங்கே பாருங்களேன்.. அந்த முள் புதரைத் தாண்டி.. அந்த கால்வாயில் … !!!

நீங்கள் விரல் நீட்டி காட்டிய இடத்தில்,

அழகான செந்நாரை ஒன்று நின்று கொண்டிருக்கிறது.சிறு அசைவும் அந்த பறவையை ஆபத்து என்று எச்சரித்து அங்கிருந்து பறக்க வைத்துவிடும்.

அதனால், முள் புதர்களுக்கு பின்னால் சத்தமில்லாமல் அமர்ந்து கொள்கிறீர்கள்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் பதுங்கிக் கொள்கிறீர்கள்.

அதன் பின்னர், தோளிலிருந்து கையில் எடுத்து குறி பார்த்து சுடுகிறீர்கள்!

“கிளிக்..!”

என்ன பயந்து விட்டீர்களா? வனச் சட்டங்கள்படி வேட்டையாடுவது குற்றம். அதுவும் தண்டனைக்குரிய குற்றம்!

ஆனால், நாம் சுட்டதோ காமிராவால்!


வீட்டுக்கு போய் படத்தை பெரிசாக்கி பார்த்தால் வண்ணங்களுடன் அற்புதமாக நாரை பதிவாகி இருப்பதைக் கண்டு ஆனந்தப்படுகிறீர்கள் அல்லவா?

உண்மையிலேயே அது அற்புதமான தருணம்தான்!

கண்ணால் கண்டு மனம் கவரப்பட்டு காட்சி ஆக்கியது ஆயிற்றே! காலத்துக்கும் போற்றப்பட வேண்டி ஒன்றல்லவா அது!

சரி இப்படி அழகழகான படங்களை எடுக்கும் காமிரா எப்படி செயல்படுகிறது? எப்படி இயங்குகிறது? என்று என்றைக்காவது நாம் சிந்தித்திருப்போமா?

காமிராவின் இயக்கம் சம்பந்தமாக எளிமையாக தெரிந்து கொள்வது நமக்கு அதற்கு அடுத்தடுத்து வரும் பாடங்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். நுட்பமான நுணுக்கங்களை கையாள உதவிகரமாக இருக்கும்.

நான் துவக்கத்திலேயே தெரிவித்திருக்கிறேன். கண்ணும், காமிராவும் ஒன்றுதான்! விழியாலும், லென்ஸ் வழியேயும் பார்ப்பது ஒன்றுதான்!

முந்தைய பாடங்களை கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.


கருக்கலின் இருட்டு. கருமை சூழ்ந்து சுற்றியும் இருப்பவை தெளிவற்றவையாக தெரிகின்றன. ஆனாலும் வைகறை உதயத்துக்காக இருட்டு சிணுங்கிக் கொண்டு விலகுவதால் என்னவோ ஓராயிரம் வர்ண ஜாலங்கள் வானத்தில் படர்கின்றன.

சற்று நேரத்தில் பொழுது பளீர் என்று புலரும்போது, கிழக்கில் அடிவானத்தைத் துளைத்துக் கொண்டு சிவந்து உதயமாகும் சூரியன் குளுமையாய் தெரிகிறது.

அதே சூரியன் நேரம் செல்ல செல்ல கீழ் வானத்தில் மேலெழுந்து பிரகாசமான ஒளியைப் படரச் செய்து, கண்களை கூச செய்கிறது.

அதன் பின் உச்சி, மேற்கு வானம் என்று பல நிலைகளில் அந்த ஒளி மாறுகிறது. அந்தியில் மீண்டும் குளுமையாகி இருள் படர்கிறது.


இரவின் முதல் துவக்கமான அந்த இருள் அந்தி மயக்கத்தால் ஓராயிரம் வர்ண ஜாலங்களாகி மறைந்து இரவு பிறக்கிறது. இருள் கப்பிக் கொள்கிறது.

மீண்டும் பார்க்கும் பொருட்களை உற்றுப் பார்க்க வேண்டும் அல்லது மின் விளக்கைப் பொருத்த வேண்டும் என்பதே யாதார்த்தம்.

இப்போது கண்களை, காமிராவோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீங்கள் எதை எதை பார்க்க முடிகிறதோ அவற்றை காமிராவால் பார்க்க முடியும். பளீர் வெளிச்சம் கண்கள் பாதிப்பதைப் போலவே, காமிரா லென்ஸீம் இத்தகைய சிக்கலுக்கு ஆளாகும்.

அதேபோல கும்மிருட்டில் கண்களுக்கு ஏற்படும் அதே தடுமாற்றமே காமிராவுக்கும் ஏற்படும்.

இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் காமிராவின் அத்தனை இயக்கங்களையும் எளிதாக கையாண்டு அற்புதமான படங்களை எடுக்க முடியும். இறைவன் நாடினால், உலகப் புகழ் பெற்ற ‘போட்டோ கிராபரா’ மாற முடியும்.

சரி… காமிராவின் இயக்கத்தை இந்த 7 அம்சங்கள்தான் தீர்மானிக்கின்றன.

1. வெளிச்சம் அல்லது ஒளி (LIGHT)

2. லென்ஸ் (LENSE)

3. அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு.

4. நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம்.

5. ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) அதாவது சென்ஸார் திரை தொடு உணர்வின் அளவு.

6. படம் பிடிப்பதற்கான தொகுப்பு (COMPOSITION - Placement or Arrangement of Visual Elements)

7. ஈர்க்கப்படுதல் (INSPIRATION).


மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு அம்சங்களையும் பொருத்திப் பார்க்க ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவத்தை காட்சிப்படுத்திப் பாருங்கள்.

அற்புதமான ஒரு நாரையைக் கண்டு ஈர்க்கப்பட்ட (INSPIRATION). நீங்கள், அந்த நாரையுடன் என்னவெல்லாம் (COMPOSITION) சேர்ந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்து காட்சிப்படுத்துகிறீர்கள்.

காமிராவை எடுத்து நீங்கள் படமெடுக்கப்போகும்போது,

அந்தசூழலில் உள்ள வெளிச்சம் (LIGHT), காட்சிப்படுத்தவிருக்கும் நாரையின் பின்புலத்தையும் (Background) கணிக்கிறீர்கள்.

அதன்படி நீங்கள் பயன்படுத்த இருக்கும் லென்ஸ் (LENSE) மற்றும் காமிராவின் உள்ளமைப்பு தொழில்நுட்பத்தில் (Aperture, Shutter Speed and ISO) செய்யவிருக்கும் மாற்றங்கள் என்று தீர்மானிக்கிறீர்கள்.

பிறகு, காமிரா ஆடாத ஒரு கிளிக். அற்புதமான ஒரு படம்!

காமிராவின் செயல்பாட்டை எளிதாக புரிந்து கொள்ள சில படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். APERTURE, SHUTTER SPEED மற்றும் ISO இவற்றை இறைவன் நாடினால் வேறொரு தனிப்பாடத்தில் பார்க்கலாம்.

இறைவன் நாடினால் கலைவண்ணம் படரும்...

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க:

001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html

005.படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html

006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html

007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி? : http://ikhwanameer.blogspot.in/2015/08/7.html

008. புகைப்படக் கலையின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/08/8_31.html

Saturday, September 12, 2015

வைகறை நினைவுகள் - 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்!


நாம் எத்தனையோ பேருக்கு மடல்கள் எழுதியிருப்போம். அதேபோல, பல்வேறு நபர்களிடமிருந்து மடல்கள் கிடைக்கப் பெற்றிருப்போம். மகிழ்வும், துன்பமும், வியப்பும், கோபமும் கலந்த பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மடல்கள் அவை.

நானும் எனது பள்ளி நாட்களிலிருந்தே அத்தகைய மடல்களை எழுதியிருக்கிறேன். எனது பாட்டி, என்னுடன் படித்த நண்பர்கள், தோழர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து மடல்களைப் பெற்றிருக்கிறேன். அவற்றின் முக்கியத்துவம் கருதி, அவற்றை இன்னும் பல கோப்புகளாய் பாதுகாத்தும் வருகிறேன்.

ஆனால், சகோதர சகோதரிகளே! நண்பர்களே!

எனது 30 ஆண்டு கால இதழியல் துறை வாழ்வில் இரண்டு மடல்களை மட்டும் என்னால் மறக்கவே முடியாது! அவற்றை இன்னும் நான் பயபக்தியோடு பாதுகாத்து வருகிறேன். எனது முன்னேற்றத்துக்கான வாழ்வியல் ஓட்டத்தின் குறிப்பிட்ட எல்லைக்கற்களாக அவற்றை நான் கருதுகிறேன்.

80-களின் பிற்பகுதியிலிருந்தே சமரசம், மணிச்சுடர், முஸ்லிம் முரசு மற்றும் தினமணி போன்ற பத்திரிகைகளில் எனது எழுத்து பயணம் ஆரம்பித்துவிட்டது.

நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்; யாருடைய பரிந்துரையும் இல்லாத, எந்தவிதமான பின்புலமும் இல்லாத திக்கற்றவன். எனக்கு துணையாக இருந்தது இறைவன் மட்டுமே என்று!

அன்றும், இன்றும் இறைவன் நாடினால் என்றுமே இப்படிதான் நான் இருப்பேன். என்னை மாற்றிக் கொள்ள என்னால் முடியவே முடியாது.

பள்ளி நாட்களில் 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்புவரை எனது வகுப்பு ஆசிரியை மேனகா டீச்சரிடமிருந்து நட்சத்திர குறியீடுகளை மட்டுமே மதிப்பெண் அட்டையில் பெற்றவன். யார் முதல்வன்? என்று சக மாணவர்களுக்கிடையே நடக்கும் அந்த கல்வி யுத்தத்தில் ஒரு அரை மதிப்பெண் குறைந்து பின்தங்கிவிட்டாலும் வெட்கமும், நாணமும் என்னை பிடுங்கி எடுத்துவிடும். பொல பொலவென்று ஊற்றெடுக்கும் கண்ணீரோடு அடுத்த யுத்ததிற்கு இன்னும் பல மடங்கு வேகத்தோடு தயாரிப்புகளில் மனம் ஈடுபடும். அடுத்த தேர்வில் முதலிடத்திற்கு வரும்வரை அந்த முயற்சிகள் ஓயவே ஓயாது!

மின்விளக்கு காணாத வீட்டில் காடா விளக்கு வெளிச்சமும், அதிகாலை குளிருக்கு இதமாய் வீட்டுக்கு முன் கணப்பாய் மூட்டும் குப்பைக் கூளங்களின் வெளிச்சமும், இரவில் ரயில் நிலையத்தின் மின் விளக்கொளி வெளிச்சமுமாய் கல்வியை கற்று வளர்ந்தவனுக்கு யாருடைய பரிந்துரையும் தேவையில்லைதானே!

அதனால், தினமணியிலும் எனது வளர்ச்சி என்பது நூற்றுக் கணக்கான வாசகர் கடிதங்கள் என்ற அடிமட்டத்திலிருந்து தகுதியின் அடிப்படையில் கூர்த்தீட்டப்பட்டு இடைவிடாத அந்த எழுதுகோல் அறப்போராட்டத்தில் பின்னாளில் அதே இதழின் ஆஸ்தான கட்டுரையாளனாய் வளர்த்தது. “வாப்பா! தினமணியின் ஆஸ்தான கட்டுரையாளரே!” – என்றுதான் என்னை தினமணியின் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தம் செல்லமாக அழைப்பார்.

இப்படி, என்னை வடிவமைத்தது என்னுள் இயல்பாய் இருக்கும் போர்க்குணமும், கடும் உழைப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் பேரருளுமின்றி வேறில்லை!

அன்று நான் ஆரம்பித்த அதே வேகம் இன்றும் நான் நிறுத்துவதாக இல்லை. தி இந்து நாளேடுவரை அதே வேகத்தில் எந்தவிதமான சிபாரிசுளும் இல்லாமல் இன்றும் நான் ஓடிகொண்டுதான் இருக்கிறேன்.

1995-ம், ஆண்டு.


தினமணி சிறப்புப் பகுதியான வேளாண்மணிக்கு, ‘மலேரியாவுக்கு சிறந்த மருந்து’ என்னும் தலைப்பில் தும்பை செடியின் சிறப்பை வலியுறுத்தி ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தேன். அது 07.11.1995 அன்றைய வேளாண்மணியில் . ‘தும்பை – அற்புத மருந்து’ என்னும் தலைப்பில் பிரசுரமும் ஆனது. அதன் பொறுப்பாசிரியர் கட்டுரையின் முதல் பாராவை எடிட் செய்து சில வரிகளை சேர்த்திருந்தார். இது எதேச்சையாக நடந்தது. வேண்டும் என்றே செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் எடிட் செய்தது கட்டுரை பிரசுரம் ஆகும்வரை எனக்குத் தெரியாது. ஒருவேளை அதன் பொறுப்பாசிரியர் என்னிடம் கேட்டிருக்கலாம்.

அந்தக் கட்டுரையை நான் இப்படி துவக்கியிருந்தேன்:


“வயல்வரப்புகளில், பாதையோரங்களில் எளிதாகக் கிடைக்கும் செடி தும்பைச் செடி. இதில் வெள்ளை நிறத்தில் கொத்து, கொத்தாய் பூக்கள் காணப்படும்…..”

ஆனால், எடிட்டிங்கில் அது இப்படி ஆகியிருந்தது:

“தும்பைப் பூ விநாயகர் பெருமானுக்கு உகந்த மலர் மட்டுமல்ல. விநாயகனே வெவ்வினையை வேரறுக்கவல்லான். விநாயகனே விண்ணுக்கும், மண்ணுக்கும் மருந்தாவான் என்பது ஒரு பக்திப் பனுவல். ஆனால், உண்மையிலேயே தும்பைச் செடி பல நோய்களுக்கு ஒரு அருமையான மருந்து…..”

இதற்கான பின்னூட்டமாய் வந்த நான் மறக்க முடியாமலிருக்கும் கடிதம் இதுதான். அதிர்ச்சியையும், அந்தக் காலகட்டத்தில் பெரும் சோகத்தையும் என்னுள் உருவாக்கிய கடிதம் அது.

ஆரம்பத்திலிருந்து நான் எழுதிய எனது எழுத்துக்கள் அனைத்துமே இதுவரையிலும் நான் பாதுகாத்து வருகிறேன். இவைதான் எனது சொத்து, சுகங்கள். இவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நூல்களாக வடிவம் பெற வேண்டும் என்ற விருப்பத்தால் இந்த சேகரிப்பு தொடர்கிறது. என்றைக்காவது ஒரு ராஜகுமாரன் வருவான் என்று காத்திருக்கும் ராஜகுமாரியின் நப்பாசையோடு நான் காத்திருக்கிறேன்.

இந்த கால கட்டத்தில், மணிச்சுடர் மற்றும் சமரசம் போன்ற இதழ்களில் அதிகளவில் பங்களித்துள்ளேன். மணிச்சுடர் சிராஜுல் மில்லத், மூதறிஞர் அப்துஸ் ஸமதின் பொறுப்பில்தான் இயங்கி வந்தது. அபாபீல், மழலைப்பிரியன் மற்றும் சின்னக்குயில் என்னும் புனைப் பெயர்களில் மணிச்சுடரில் நான் எழுதி வந்தேன். மற்ற பத்திரிகைகளில் எனது எழுத்துக்களைப் படித்து சகோதரர் தரமணி ரஸீல் மொய்தீன் மூலமாக என்னை நேரில் வரவழைத்து கட்டுரையாளர் பொறுப்பளித்தவர் மூதறிஞர் அப்துஸ் ஸமது சாஹெப்தான்.

எனது சிறுவயதில் சமய நல்லிணக்கத்துடனும், சமூக அக்கறையுடனும் நான் முதிர்ச்சியாக எழுதிய கட்டுரைகளைக் கண்டு, ‘அபாபீல்’ என்ற புனைப் பெயருக்கு உரியவர் அப்துஸ் ஸமது சாஹெப்தான் என்று ஆரம்பத்தில், சிலர் நினைத்தனர்.

இன்னும் சிலரோ, யாரோ வயதானவர் எழுதுவதாக கருதிவந்தனர்.

காலம் சென்ற நீடூர் சய்யித் சாஹெப் உட்பட இந்த கருத்துதான் கொண்டிருந்தனர்.

பிறகு அபாபீல் எழுத்துக்களுக்கு உரியவன், இந்த எளியவன்தான் என்று அறிந்து வியப்புற்றனர். பாராட்டினர்.

சமரசத்தில் பிற சமயங்களை சாடல் என்பது அறவே இல்லாதது.

இந்நிலையில்தான் தினமணி வேளாண்மணி கட்டுரைக்கு பின்னூட்டமாய் ஒரு மொட்டை கடிதம் வருகிறது இப்படி:


“இக்குவான் அமீர் என்றும் அப்பாபியல் என்றும், இன்னும் பலவிதமாக பெயர்களை வைத்துக் கொண்டு நடமாடித் திரியும் படாடோப வேஷதாரி, பல குரல் மன்னன், இரட்டை வேடதாரியை தமிழகம் நன்கறியும்.

இந்த இக்குவான் மணிச்சுடர் சமது சாகிபை ஒருபுறம் காக்காய் பிடித்துக் கொண்டு இந்துக்களை இழித்துரைத்து கட்டுரைகள் பல எழுதுவான். மறுபுறம், கோயங்காவின் கோமணத்தை நக்கிக் கொண்டு தினமணியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றான்.

தினமணி 7.11.95 அன்று சிறப்புப் பகுதியில் அவன் நஜீஸைக் கக்கி இருக்கும் நாரலை சற்றே கவனித்துப் பாருங்கள். அவன் சார்ந்திருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு இவனை ‘முர்த்தத்’ என்று அறிவிக்க தைரியம் உண்டா?

மணிச்சுடர் மௌலானாக்கள் மறையோனுக்கு … என்ன மறுமொழியை தயார் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

மீண்டும் அவனது கட்டுரைகள் முஸ்லிம்களின் பத்திரிகைகளில் வெளிவருமா? பொருத்திருந்து பார்ப்போம்….!”

- என்று எழுதி அதன் நகல்களை மணிச்சுடர், சமரசம், முஸ்லிம் முரசு மற்றும் தினமணி அலுவலகங்களுக்கு அனுப்பியிருந்தனர்.

மர்ஹீம் மூதறிஞர் அப்துஸ் ஸமது சாஹெப் அந்த மொட்டைக் கடிதத்தை அலட்சிப்படுத்திவிட்டார். முஸ்லிம் முரசு ஆசிரியரும் பொருட்படுத்தவில்லை. தினமணியின் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் மட்டும்தான் அதன் நகல் ஒன்றை என்னிடம் தந்துவிட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

அழுக்கான அத்தகைய கடும் வாசகங்கள் எனக்கு புதிதானவை.

நெஞ்சமெல்லாம் கனக்க சமரசம் அலுவலகத்துக்கு சென்றேன். அதன் ஆசிரியர் சிராஜுல் ஹஸனை சந்தித்தேன். என் முக வாட்டத்தைக் கண்டு அவர் என்ன..? ஏது..? என்று விசாரிக்க எனது வலியை பகிர்ந்து கொண்டேன்.

அப்போது சிராஜுல் ஹஸன் சொன்ன அந்த ஒற்றை வரிகள் எனது வருத்தத்தை தூக்கி எறிய வைத்தது. இன்னும் பன்மடங்கு வேகத்தோடு என்னை பாய வைத்தது. அவர் சொன்னார்: “விடுங்க.. இக்வான்..! உங்களைப் பற்றி அவங்களுக்கு என்ன தெரியும்! விட்டுத்தள்ளுங்க..!”

அடுத்த கடிதம்:

24.08.2005 அன்றைய தினமணி தலையங்கப் பக்கதில் ‘உயர்த்தும் ஒரு சொல்!’ - என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். தொழில்துறை சம்பந்தப்பட்ட கட்டுரை அது. அப்போது நான் சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாளராக இருந்தேன்.


தினமணி கட்டுரையைப் படித்துவிட்டு இந்தியா முழுக்க ஆல்போல் தழைத்து வளர்ந்திருக்கும், ஆசியாவின் மிக பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றின் நிர்வாக இயக்குனரான சேஷசாயி 26.08.2005 அன்று தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி எனக்கு அனுப்பியிருந்தார்.

இரத்தின சுருக்கமான அந்த கடிதம் இதுதான்:

அன்புக்குரிய இக்வான்,

உங்களுடைய ‘உயர்த்தும் ஒரு சொல்’ என்ற கட்டுரையைப் படித்தேன்.

நம் நிறுவனத்தின் குறிக்கோளையும், அதற்கான புதிய அணுகுமுறை பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

என்னுடைய வாழ்த்துக்கள்

உங்கள் அன்பான சேஷசாயி.

சேஷசாயி
திருக்குர்அன் சிறப்பளித்து விளிக்கும் ‘கைர உம்மத் – மேன்மை மிக்க சமுதாயத்தின்’ அருங்குணங்கள் பெற்றிருப்பவர் யார் என்பதை எனக்கு யோசிக்க வைத்த கடிதம் இது!

நீங்களும் யோசிக்க வேண்டும்!

இறைவன் நாடினால்.. அடுத்த வைகறை நினைவுகளில் ‘அந்த அழகிய ஒளிவிளக்கோடு’ எனது நினைவுகள்…

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
 
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html