Thursday, July 16, 2015

வைகறை நினைவுகள்: 1, “கருணையாளனான இறைவன், அவரது பாவங்களை மன்னிப்பானாக!”

இன்று யதேச்சையாக நடந்தது இது.

நோன்பு காலத்தின் வைகறை, 'சஹர் நேரத்தில்' எழுதலாம் என்ற சிந்தனை திடீர் என்று உருவெடுத்தது. ஒரு தொடராய் தருவதற்கான முயற்சி உள்ளது. நேரமும், வாய்ப்புகளும் அமைய வேண்டும். பிரார்த்தியுங்கள் சகோதர, சகோதரிகளே, அன்பு நண்பர்களே! - இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


1980-களின் பிற்பகுதி. அப்போது எனக்கு வயது 28.

வறுமையின் உச்சகட்ட கொடுமையில் வளர்ந்த நான் ஒரு சமூக மாற்றத்துக்கான தீர்வு காணும் தணலுடன் கொதித்துக் கொண்டிருந்தேன். பொதுஉடமை இயக்கங்கள் அப்போது என்னை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை. அவ்வகையில் எனது தேர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம்.

வளர்ந்த சூழல் வறுமை என்றால், பணிபுரிந்த சூழலோ 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மத்தியில். ஆசியாவின் மிக பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான சென்னை, அசோக் லேலண்ட்டில். ஒரு மினி இந்தியா என்றால் மிகையல்ல.

ஆக வர்க்க உணர்வு என்பது என்னுள் இயல்பாய் கனன்று கொண்டிருந்தது. பசித்தீ இனி எவரையும் பற்றக் கூடாது என்று சதா மூண்டு கொண்டிருந்தது என்னுள் பெரும் கனல். தொழிலாளர் உரிமைகள், அவர்களுக்கு எதிரான சுரண்டல்களுக்காக குரல் கொடுக்கும் மற்றொரு தீக்கணல் என்று நெருப்பு மயமாய் நான்.

கோபமும், தீமைகளுக்கு எதிராக தட்டிக் கேட்கும் துணிச்சலும் இயல்பாய் என்னை அரவணைத்துக் கொண்டது இப்படிதான்! எனது துரதிஷ்டம் நன்மைகள் தழைக்க வேண்டும் என்பதற்கான இந்தக் கோபம் என்னை நிரந்தரமான முன்கோபியாகவே அடையாளப்படுத்திவிட்டது. நீண்ட ஆண்டுகள் இந்த அடையாளத்திலிருந்து வெளிவர நான் யுத்தம் செய்ய வேண்டிவந்தது.


 நிறுவனம், குடும்பம், சமூகத்தின் பல்வேறு கூறுகள் என்று எங்கு சென்றாலும் நடக்கும் அநீதிகளை பொறுத்துக் கொண்டு என்னால் இருக்கவே இருக்க முடியாது. அவற்றை எப்படி அடக்கியாள வேண்டும் என்ற முதிர்ச்சி இல்லாத இளம் பருவம். அதனால், ஏற்கனவே நான் குறிப்பிட்ட முன்கோபி என்ற இலவச பட்டம் ‘விடாது கருப்பாய்’ என்னைத் தொடர்ந்தது.

இந்நிலையில், எனது மனத்துக்கு விருப்பமான திருமணம். குடும்பம் என்றான சூழல். அவரவர், அவருக்கு விருப்பமான வழிமுறைகள் என்று வாழ்ந்து கொண்டிருந்த குடும்ப அமைப்பில் எனது வேர்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வரமாய் எனது மூத்த மகள், ‘சோனா’ (இன்றைய ஆலிமா ஷர்மிளா சாலிஹா – சுமைய்யா என்றொரு பெயரும் உண்டு) வந்துதித்தாள்.

இடது சாரி சிந்தனை கொழுந்து விட்டெரியும் அந்தக் கட்டத்தில் எனது போர் பாசறையின் பிறிதொரு தளபதியாய் எனது சோனாவும் உருவெடுத்தாள். நானும், எனது மகளும் ஒவ்வொரு போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் செங்கொடியுடன் முன்னணியில் நிற்போம்; ஒரு துளி அச்சமும் இன்றி. 

ஓடும் பேருந்துகளை நிறுத்தி, மடக்கோலைகளை தருவதிலிருந்து, சுவரோவியம் தீட்டுவதுவரை இரவு பகலாய் அந்த செவ்வேள்விக்கு உயிரும் சதையுமாய் நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான், சகோதரர் அப்துற் றஹீமை சந்தித்தேன்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேறொரு பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர் ஒருநாள் (எதேச்சையாக அல்ல) அவரது திட்டப்படி என்னை சந்திக்க வந்திருந்தது பின்னாளில்தான் எனக்கு தெரிந்தது.

முதலில் நட்பாய் சிநேகிதம் என்று தொடர்புகளை வளர்த்துக் கொண்டவர் பிறகு குறைந்த பேச்சு, என்னிடமிருந்து விடை பெறும்போது, ஒரு புத்தகம் என்ற வழிமுறையை பின்பற்றுபவராக இருந்தார்.

அந்த குறைந்த பேச்சு எதார்த்தமான உண்மையை அறிந்து கொள்வதற்கான உரையாடலாய் இருக்கும். பயன்தரும் விவாதமாய் இருக்கும். இது சிறுக.. சிறுக வளர்ந்து… ஓய்வு நேரங்களில் நானே அவரைத் தேடிச் செல்லும் விதமாய் தொடர்ந்தது.இரு தாடிக்காரர்களின், இரு சித்தாந்தவாதிகளின், இரு சமூக போராளிகளின் அந்த கருத்து யுத்தத்தில் மெல்ல மெல்ல காரல் மார்க்ஸ், கரைந்து அன்பு நபி பெருமானார் என்னை ஆட்கொண்டது இப்படிதான் ஆரம்பித்தது. அண்ணலாரின் அந்த ஆளுமை வீச்சிலிருந்து பெரும் பெரும் அறிஞர் பெருமக்களே தப்பிக்க இயலாதபோது, ஒரு சராசரி தொழிலாளியான நான் தப்பிப்பது எங்ஙனம்?

இந்த நேரத்தில் ஒன்றை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
  •   ‘மண்டுகள், மக்குகளின்’ மார்க்கமல்ல இஸ்லாம். 
  • அது ‘அறிவீலிகளின்’ மார்க்கமும் அல்ல.
  • இஸ்லாம் என்பது, அறிவாளிகள், கற்றறிந்தோரின் மார்க்கம் என்று தெளிவாக தெரிந்து கொண்ட அனுபவம்தான் அது. 
நான் கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்தற்கு என்னை மன்னிக்கவும்.

ஆனால், எனது இளமையின் 28 ஆண்டு கால இழப்புகளின் நஷ்ட ஈட்டை வேறு எதுவாலும் எனக்கு ஈடு செய்ய முடியாது!

உண்மைதான், அறிவில்லாவிட்டால் முஸ்லிமாகவே முடியாது.

ஒரு முஸ்லிமின் ‘கலிமா’ எனப்படும் இறைநம்பிக்கையிலிருந்து துவங்கி, அவனது தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் சர்வதேச ஓரிறைக் கொள்கையின் மாநாடான ‘ஹஜ்’ வரையிலான அனைத்தும் அறிவின் அடிப்படையிலேதான் செயலுருவம் பெற முடியும். இந்த அறிவை கோட்டைவிட்டதும் அதை மேம்படுத்திக் கொள்ளாததுமே (Updation) முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான முதலாவதும், முடிவுமான காரணமாகும்.

இயல்பாகவே, புத்தக வாசிப்பு என்பது தமிழ் எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்த நாட்களிலேயே என்னைத் தொற்றிக் கொண்டது. எனது சொத்துக்களாய் எனது வீடு முழுக்க நிறைந்திருக்கும் புத்தகங்கள்தான்.

“நீங்க யாரும் வாசிச்சு பயன் அடைய போவதில்லை! அதனால், என்னை அடக்கம் பண்ணும்போதே, புத்தகங்களையும், கபரில் (மண்ணறையில்) வைத்து அடக்கம் செய்துவிடுங்கள். இறைவன் வாய்ப்பளித்தால் நிம்மதியாக படித்துக் கொண்டு காலம் தள்ளுவேன்!” – என்பேன் இப்போதும் வேடிக்கையாக.இந்த வாசிப்புதான்,

'காரல் மார்க்ஸா? அண்ணல் நபியா?' - என்று ஒப்பீடு செய்ய எனக்கு பேருதவி புரிந்தது. இருவரில் யார் தலைச்சிறந்தவர் என்று தேர்வு செய்ய வழிகாட்டியது.

மதம் அபின் என்னும் கார்ல் மார்க்ஸை, இஸ்லாம், மதமல்ல; அது மார்க்கம், உலக மக்களுக்கான வாழ்வியல் திட்டம் என்று புரிய வைத்து பின்தள்ள வைத்தது இந்த வாசிப்புதான்.

எனக்கும், சகோதரர் அப்துற் றஹீமுக்கும் இடையே நடந்த உரையாடல்கள், விவாதங்கள், அந்த விவாதங்களின் அடிப்படையில் இருவரும் பகிர்ந்து கொண்ட கொள்கை ரீதியான புத்தக வாசிப்புகள் இவை அனைத்துமே வாய்மையாக நடந்ததை குறிப்பிட்டாக வேண்டும் இங்கே.

இவற்றில் எந்தவிதமான உணர்ச்சிவசப்படல்களும், விடாப்பிடியாக மத எதிர்ப்பு அல்லது மதப் பற்றும் முன்நிற்கவில்லை என்பதை அந்த வாய்மையுடனே நான் இப்போதும் நினைவு கூர்கிறேன்.

உண்மை அறிவதற்கான தேடல்களாகவே அவை இருந்தன என்பதே உண்மை.

எந்த சித்தாந்தவாதியாக இருந்தாலும் நேருக்கு நேர் அவரிடம் உரையாடவோ, பயன்தரும் விவாதம் புரியவோ, தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்ளவோ எனக்கு இன்றுவரை துணிச்சல் தருவது இந்த நேர்மை உணர்வுதான்!

வழி வழியாக ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தும், பெயர் தாங்கியாக வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு, வேறொரு சமயத்திலிருந்து வந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அப்துற் றஹீம் மூலமாக இஸ்லாம் பரிச்சயமானது இப்படிதான்! நான் நெஞ்சார கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவியதும் இப்படிதான்!

இறைவன் சகோதரர் அப்துற் றஹீமின் பாவங்களையும், பிழைகளையும் பொறுத்தருள்வானாக!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்னும் பேரியக்கத்தின் விழுதுகளாய் அவர் மேலும், மேலும் வளம் பெற அந்த இயக்கத்தின் பணிகளை ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்திலும் கொண்டு சேர்க்க அருள்புரிவானாக!

- இறைவன் வாய்ப்பளித்தால்.. வைகறை நினைவுகள் தொடரும்.

No comments:

Post a Comment