Sunday, December 27, 2015

வைகறை நினைவுகள்: 25, லென்ஸ் விழி வழியே..


அன்பு சகோதர, சகோதரிகளே, நண்பர்களே!

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

'லென்ஸ் விழி வழியே...!' - என்னும் இந்த ஒளிப்பட தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஷேக்ஸ்பியரில் ஆரம்பித்த எனது வாசிப்பு, தினத்தந்தி சிந்துபாத் தொடர் என்று தொடர்ந்தது. அரசு கிளை நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க வைத்தது. அந்த அற்புதமான தருணங்களை கடந்து வந்த அனுபவத்தை வாழ்க்கை அளித்திருக்கிறது.

எனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து தந்து, பள்ளி நூலகத்திலிருந்து சொற்ப தவணைக்குள் பெற்ற ஷேக்ஸ்பியருக்குள் நான் நுழைந்தது ஆச்சரியமாக உள்ளது.

சிந்துபாத் தொடரை படிக்க சிகை அலங்காரம் செய்யும் கடையில் நீண்ட நேரம் காத்திருந்து காத்திருந்து… ஒரு கட்டத்தில் ஆவலை அடக்க முடியாமல் படிப்பவரின் எதிரே தரையில் அமர்ந்து அந்த நான்கு படம், சில வரி வசனங்களை, வாசிக்க முயலும்போது, கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டித் தள்ளிய அந்த நாவித சகோதரர் இன்றும் மனக்கண்ணில் தெரிகிறார். இன்று சிகை அலங்காரம் செய்து கொள்ளும்போதெல்லாம் அந்த சம்பவம் நெஞ்சில் நிழலாடும்.

எத்தனைமுறை புத்தக அலமாரிகளுக்குள் பதுங்கிக் கொண்டு புத்தகம் வாசித்தாலும் அத்தனை முறையும் நூலகர் புத்தகங்களை நான் கலைத்துவிடுவேன் என்று மோப்பம் பிடித்து வந்து விடுவார். ஒருவித சிநேகித உணர்வுடன் “தம்பி, உனக்கு இன்னும் வயசாகலே!” – என்று என்னை நூலகத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுவார். இன்று இறையருளால் வீட்டில், ஒரு தனி நூலகம் அமைத்திருக்கும் நான் அதே நூலகத்தை கடந்து செல்லும்போதெல்லாம் முக மலர்ச்சியுடன் கடக்கிறேன்.

இந்த அனுபவங்களை, வாசிப்புகளை உள்வாங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் அவற்றை அடுத்தவர் வாசிக்க எத்தி வைக்கும் அனுபவத்தை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.

1986 - களில் ஆரம்பித்து, இதுவரையிலும் ஓயாமல் அறப்போர் புரியும் எனது எழுத்தாணியின் பயணம் தமிழ் பேசும் நல்லுலகில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கும் என்பதால் ஓராயிரம் சங்கடங்களுடன்தான் அறிமுகத்துக்காக இந்த சில அனுபவங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டேன்.

ஒவ்வொருவரும், ஒரு வாசகராய், எழுத்தாளராய், ஒளிப்பதிவாளராய் இருக்கும் சமூக ஊடகமான முகநூலில் நான் சொல்லவிருப்பது என்ன?

அனுபவங்கள் அன்றி வேறில்லை சகோதர, சகோதரிகளே!

அனுபவங்களே ஆசான்கள்!

உண்மை!

இது அனுபவங்களின் ஒரு பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல.


‘சிறகுகள்’ குழுமத்தின் சகோதரர் அஹ்மது கபீரும், அருமை சகோதரி உம்மு உமரும்தான் இந்த தொடருக்கான பிரதான மூல கர்த்தாக்கள்! அவர்களுக்கு எனது நன்றி. அதிலும் குறிப்பாக அற்புதமான முகப்பை உருவாக்கி தந்த உம்மு உமரின் தோழி சகோதரி Sharmila Kasim - க்கும் எனது நன்றிகள் மற்றும் பிரார்த்தனைகள்.

அனுபவ எழுத்துக்களிலிருந்து ஒரு கட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிதான் எனது ஒளிப்பதிவுகள். நான் எடுத்துள்ள படங்கள் எல்லாம். இது எனது அறிவோட்டத்தை இன்னும் விசாலமாக்கியது.

கோடானு கோடி கோள்கள் துணைக்கோள்கள் கொண்ட இந்த அண்ட வெளியின் சிறு துகள்… அதுவும் கடற்கரை மணற்பரப்பின் ஒரு சிறு மணல் துகளாம், பூமியில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பு வசதிகளை கொண்டு நான் ஒளிப்படங்களாய் பதிவு செய்து வருகிறேன். படைப்பாளனின் அற்புத அழகியல் கண்டு வியக்கிறேன். அற்புதங்களும், வியப்புகளும் என்று வண்ண கலவையாய் உலகம்.

அழகியல், வாழ்வியல் கலந்த பார்வைதான் எனது சிறப்புக்குரிய களங்கள்.

சிறப்பான படங்கள் என்று முற்றே இல்லாத ஒரு மகா சமுத்திரத்தின் ஒரு துளியாய் நான் கற்றதை பறிமாறும் ஒரு வாய்ப்புதான் இது.

அறிவைப் பெற்று அதை பரப்புவர்தான் உங்களில் சிறந்தவர் என்று எனது ஒரே உன்னத தலைவர் அண்ணல் நபியின் ஒரு பொன்னுரையை நிறைவேற்றிய பாக்கியசாலியாக மட்டுமே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

இனி.. 'லென்ஸ் விழி வழியே..!' சிறகுகள் குழுமத்தைத் தாண்டி எனது முகநூல் பக்கத்திலும் இறைவன் நாடினால் வலம் வரும். இதற்கான அனுமதியையும் நான் அந்தக் குழுவிடம் பெற்றுவிட்டேன்.

மிகவும் எளிய முறையில், புகைப்படக் கலையை கற்றுத் தரும் முயற்சி இது.

அடுத்தவர்க்கு கற்பிக்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?

இது நல்ல கேள்வி.


சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு அலாதி பிரியம். இயற்கையின் மீது தீராத பாசம். மனித உணர்வுகளை மனக் கண்ணில் பதித்து வைப்பதில் வல்லவன். இதில் எந்த மிகைப்படத்தலும் இல்லை.

எனது அத்தனை பணிகளை முடித்துவிட்டு இரவில் இன்றும் நான் எனது தோட்டத்து செடிகளிடமும், மரங்களிடமும் பேசிவிட்டு உறங்கச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

இந்த உரையாடல் பல நேரங்களில் மௌன மொழியாக இருக்கும். சில நேரங்களில் வாய்விட்டு பேசுவதாகவும் இருக்கும்.

அதேபோல இறையருளால், கால் நூற்றாண்டை தாண்டி, பிரசுரமாகிக் கொண்டிருக்கும் எனது பெரும்பகுதி எழுத்துக்கள் எல்லாம் வாழ்க்கையில் நான் கண்டு, பாதிக்கப்பட்ட சக மனிதர்களின் உணர்வு பிரதிபலிப்புதான்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த ஒரு சாமான்யனை மண்டியிட வைத்து எள்ளி நகையாடிய ரயில்வே பணியாளர்களின் செயலின் பாதிப்பு பிம்பமாய் படிந்து என்னை உறுத்தியது. அதற்கு அடுத்த சில நாட்களில், ‘தலைக்காய்ந்தவர்கள்’ என்று தினமணியில் கட்டுரையை வடிக்கும் வரை அந்த வலி குறையவில்லை.

அதேபோல, அன்றைய ஒன்றுபட்ட ஆந்திராவின் ‘காவலி’ என்னும் ஊருக்கு எனது நண்பர் நயீமின் திருமணத்துக்கு செல்ல வேண்டி வந்தது. அப்படி போகும் போது ரயிலில், பறிபோன எனது நண்பரின் கைக்கடிகாரம் குறித்த உணர்வுகளையும், அதை ஆசைப்பட்டு எடுத்தவரின் உணர்வுகளையும் சம்பவம் நடந்து முடிந்த சுமார் 10 ஆண்டுகள் கழித்து தினமணி குழந்தை இலக்கியத்தில் பதிவு செய்யும்வரை அந்த உறுத்தல் என்னைவிட்டு விலாகாமலே இருந்தது.

இப்படிதான் ஒளிப்படம் சம்பந்தமாக கற்றுக் கொள்வதற்கும், கற்றதை அடுத்தவர்க்கு கற்றுக் கொடுக்க வகுப்பெடுப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது.


இளம் வயதில், புலனாய்வு செய்திகளுக்காக எடுக்கும் படங்களின் பிலிம் சுருளைக் கழுவ ஒரு ஸ்டுடியோவுக்கு செல்வது வழக்கம். அந்த ஸ்டுடியோவில் வைத்திருக்கும் டிஜிட்டல் காமிராக்களை தொடும்போது, அதன் உரிமையாளர் ஏதோ தொடக்கூடாத பொருளை தொடுவதுபோல முகம் சுளித்ததை என்னால் மறக்க முடியவில்லை.

அடுத்தது, நான் டிஜிட்டல் காமிரா வாங்கிய புதிதில், அதன் நுணுக்கங்கள் சம்பந்தமான பல்வேறு குழப்பங்களுக்கு நான் ஆளானேன். அப்போது, எனது முகநூல் நண்பர்களில் ஒருவர் ஒளிப்படகாரர், அந்தக் கலையை கற்றுக் கொடுப்பவர். அவரிடம் எனது புரியாமையை வெளிப்படுத்தி கேட்டேன். அவர் இதுவரையிலும் எனக்கு பதில் அளிக்கவே இல்லை.

இதுவும் என்னை சிலுப்பிவிட்ட ஒரு அனுபவமாகும்.

காமிரா நுட்பங்கள் சம்பந்தமான எனது கற்றலின் துவக்கம் இதுதான்.

சிறகுகள் குழுமத்துக்காக நான் வகுப்பு எடுத்து வந்த லென்ஸ் விழி வழியே காமிரா நுட்பங்கள் இனி பொத்தாம் பொதுவாக எனது முகநூல் பக்கத்தில் இறைவன் நாடினால் திங்கள்தோறும் இடம் பெறும்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, இது அனுபவங்களின் ஒரு பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல.

பாடங்களில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தரப்படும்.

பயன்படுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் நான்.

இன்றைய வைகறை நினைவுகளில் இடம் பெற வேண்டிய ரஷ்ய கரடியை ஓட ஓட விரட்டிய குர்ஆன்.. இறைவன் நாடினால் நாளைய நினைவுகளில்…

  வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:


வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html

அழைப்பது நம் கடமை - 14: ' நம்புங்கள் .. இது இறைவனின் மார்க்கம்! '


பல நூற்றாண்டுகள் கழிந்தாலும், இனவாதிகளின் பண்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்! காலந்தோறும், அவர்கள் இரத்த வெறிப்பிடித்தாடுவார்கள். பிரபஞ்ச வாழ்வியல் திட்டமான இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் கொன்றொழிக்கவே முயல்வார்கள்.

உலகில் இஸ்லாத்தைப் போல பேரழிவுகளைச் சந்தித்த வாழ்க்கை நெறி வேறு இருக்க முடியாது! வரலாற்று அறிஞர்கள் வியக்கிறார்கள் இந்த உண்மையைக் கண்டு!

இதுவரை உலகில் லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. மனைவி, மக்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் காலத்துக்கும் அச்சத்துடன் பல தலைமுறை  வரைக்கும் அந்த பீதியில் உறைந்திருந்தார்கள்.

''இனி அவ்வளவுதான்! இஸ்லாம் அழிந்துவிடும்! அது வளருவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை!''- என்று எதிரிகள் உறுதியுடனிருந்த நேரத்தில் அந்த அதிசயம் மீண்டும்.. மீண்டும் நிகழ்கிறது! இஸ்லாம் என்னும் விருட்சம் இன்னும் ஆழ வேர்ப்பரப்பி வானுயர கொப்பும், கிளைகளுமாக துளிர்விட்டு மகாவிருட்சமாக வளர்கிறது!

நேற்றைய 'அந்தலூசியா' என்றழைக்கப்படும் ஸ்பெயின் முதற்கொண்டு இன்றைய குஜராத் வரையிலான நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளை... அடக்குமுறைகளை...  கொன்றொழிப்புகளை இனத்துடைத்தெறிதலைதான் காட்டுகின்றன!

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய இறைவனின் பிரியத்துக்குரிய நல்லடியார்களின் அளப்பரிய தியாகங்களால் மீண்டும் மீண்டும் அந்த அற்புதம் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக 13-ஆம், நூற்றாண்டை எடுத்துக் கொண்டால்.. பயத்தால் உடல் சிலிர்த்துவிடும். வரலாறு நெடுக இரத்த வாடை அடிக்கும் அந்த கொடுர சம்பவங்கள் இப்போதும் நம்மை சிலிர்க்க வைக்கும்.

ஒரு நகரைத் தொடர்ந்து மறு நகரம்.. ஒரு பகுதியைத் தொடர்ந்து மறு பகுதி... ஒரு நாட்டைத் தொடர்ந்து மறு நாடு... என்று உலக முஸ்லிம்கள்  கடும் சேதங்களை அடைந்து கொண்டிருந்த நேரம் அது. பகைமை உக்கிரத்தால்.. முஸ்லிம்களும் அவர்கள் பின்பற்றும்  மார்க்கமான இஸ்லாமும் இனி தீர்ந்துவிடும் என்று வரலாறு நடுங்கிக் கொண்டிருந்த நேரம்.

அந்த கோர கொலைப் பட்டியலின் குறைந்தளவு புள்ளிவிவரம் இது:

 • நிஷாபூர்             -   17 லட்சத்து 47 ஆயிரம் பேர் .
 • பாக்தாத்              -   16 லட்சம் பேர்.
 •  ஹீரட்                 -    10 லட்சம் பேர்.
 • சமர்கண்ட்         -    9 லட்சத்து 80 ஆயிரம் பேர்.
 • மெர்வ்                 -    7 லட்சம் பேர்.
 • அலெப்போ       -    80 ஆயிரம் பேர்.
 • பால்க்                  -    முற்றிலும் அழிந்து போனது.
 • கிஹ்வா             -    முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
 • ஹர்ரான்            -    முற்றிலும் அழிந்தது.

உலகின் பேராபரணம் என்று வர்ணிக்கப்படும் நகரம் பாக்தாத்! நீண்ட நெடிய சோதனை மிக்க அந்த ஆறு வாரங்களில் இந்த அழகான ஆபரணம் குரங்குக் கையில் கிடைத்த பூமாலையைப் போல பிய்த்து எறியப்பட்டது. யூப்ரட்டீஸ் நதி குருதியால் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. மென்மைக்கும் அழகுக்கும் பேர் போன நகரப் பெண்கள் கொடுரமாக கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு பொத்தி.. பொத்தி.. பாதுகாத்து வந்த அறிவு... பெரும் சிரமங்களுக்கிடையே சேர்த்து வைக்கப்பட்டிருந்த உலகின் தலைச் சிறந்த நூலகம், தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அரிய நூல்கள் சாம்பலாக்கப்பட்டன.

கல்வி-கேள்விகளுக்கும், அற்புதமான கலாச்சாரத்துக்கும், வணிகத்துறைக்கும் கேந்திரமாக விளங்கிய பாக்தாத் மயானக் காடானது. கலைநயத்தைப் பறைச்சாற்றும் பல அற்புதமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ரத்த வெறிப்பிடித்த ஆட்சியாளன் செங்கிஸ்கான் நாற்பதாண்டு காலம் முஸ்லிம்களை நடுநடுங்க வைத்தான்.

அன்றைக்கு ஆட்சியிலிருந்த முஸ்லிம் அரசர் 'முஹம்மது குவாரிஷா' செய்த ஒரு சிறு தவறால் வந்த வினை இது. அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் சக்தியாக விளங்கியவர் இவர். அவருடைய நாட்டுக்கு வணிகம் நிமித்தமாக வந்த மங்கோலியக் குழுவினரை அனுமதி பெறாத காரணம் காட்டி அவர்களைக் கொலைச் செய்ய உத்திரவிட்டார். அதற்கு முறையாக தூதர்களை அனுப்பி எதிர்ப்புத் தெரிவித்த செங்கிஸ்கானின் தூதர்களையும் கொன்றார்.

மனித நேயமற்ற இந்த இரண்டு சம்பவங்கள்தான் செங்கிஸ்கானை பழி வாங்கும் உக்கிரத்தில் தள்ளியது. வரலாற்றில் எராளமான முஸ்லிம்கள் உயிரிழக்கக் காரணமானது.

மங்கோலியப் படைகள், மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா, புடா பெஸ்ட், மாஸ்கோ என்று புயல் வேகத்தில் இந்தியாவின் தில்லிவரை வந்து சேர்ந்தன.

உலகின் வேறொரு மூலையிலிருந்தவர்கள் சுவீடன் நாட்டவர். அவர்களுக்கு செங்கிஸ்கானால் எந்த ஆபத்தும் இல்லாவிட்டாலும்கூட மங்கோலியர் பெயரைக் கேட்டு நடு நடுங்கினார்கள் அவர்கள்.

வெறும் ஆட்சி - அதிகாரம், ஆடம்பர மோகங்களில் (இன்றைய அரபு ஆட்சியாளர்களைப் போல) திளைத்திருந்த முஸ்லிம்களை வெல்வதற்கு எந்த சிரமமும் இல்லை. ஒரு மங்கோலியன் நூறு முஸ்லிம்களை கொலை செய்யுமளவுக்கு கோழைகளாக இருந்தார்கள். தங்களது உயிர், உடமைகளைக் காத்துக் கொள்ள இயலாமல் அவர்கள் செத்து மடிந்தார்கள்.

'மங்கோலியப் படை தோற்றுவிட்டதென்று யாராவது சொன்னால்... நம்பவே நம்பாதீர்கள்!' - என்று அரபு பழமொழி வழக்கத்தில் ஏற்படுமளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

மங்கோலியர் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தபோது, முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஒழுக்க வீழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார்கள். ஊழல், அதிகார வெறி அவர்களிடையே மிகைத்துப் போனது. உலகாயதப்போக்கே அவர்களிடம் பிரதானமாக காணப்பட்டது.

தலைமைத்துவ தகுதியின்மைக்கு 'குவாரிஜயம் ஷா' மட்டுமே உதாரணம் அல்ல. அப்பாஸிய கலீஃபா 'அல் முஸ்த அஸிமின்' நிலைமையும் அதுதான்! குவாரிஜம் ஷாவின் அரசாட்சி வீழ்ந்தது என்று கேள்விப்பட்டதும், தனிப்பட்ட வெறுப்பை பொது வெறுப்பாக்கி அகமகிழ்ந்தார் அப்பாஸிய கலீஃபா அல் முஸ்த அஸீம். மங்கோலியர்கள் பாக்தாத்தை அடையும் முன்னரே கலீஃபாவின் ஆலோசகர்கள் தமது படைவீரரை விலக்கிக் கொள்ளும்படி கலீஃபாவுக்கு அறிவுறுத்தினார்கள். இந்தக் கோழைத்தனம் அப்பாஸிய ஆட்சி வீழ்வதற்கு போதுமானதாக இருந்தது.


இந்தக் கொடுமைகளாலும் இஸ்லாம் அழிந்துவிடவில்லை.

'தான் இறைவனின் பேரழிவு!', 'இறைவனால் அனுப்பப்பட்ட வேதனை!'- என்று தன்னைத்தானே அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்திக் கொண்டான் செங்கிஸ்கான்! கைப்பற்றிய  நாட்டு முஸ்லிம் பெண்களின் கற்பைச் சூறையாடினான். கொலைக்காரர் குஜராத் மோடி செய்தது போலவே நிறைமாத கர்ப்பிணிப் பெண்களையும் கற்பழித்து ... வயிற்றைக் கிழித்து.. குழந்தைகளை வாளால் குத்திக் கொன்றான். ஒரு தலைமுறைக்கு முஸ்லிம்களைத் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொண்டன.

அதன் பிறகு இறைவனின் பேரருள் மீண்டும் முஸ்லிம் சமுதாயம் மீது பொழிந்தது. தனது அடியார்கள் சோதனைகளால் பெற்ற படிப்பினைகள் போதும்! என்று கருணை வாய்ந்த இறைவன் எண்ணினான் போலும்! மீண்டும் இஸ்லாத்துக்கு சாதகமாக காற்று வீச ஆரம்பித்தது.

பாக்தாத் செங்கிஸ்கான் பேரனால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரன் 'பெர்க்' இஸ்லாத்தைத் தழுவினார்.

மங்கோலியர்களின் கொடும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்று நிகழ்வுகளில் இரண்டு சாமான்யமானவர்களின் பங்கு முக்கியமானது!

'பெர்க்' அல்லது 'பரகா கான்' என்று அழைக்கப்படும் செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரனுக்கு இஸ்லாம் இரண்டு வணிகர்களால் பரிச்சயமானது. இந்த முயற்சியின் விளைவாக இஸ்லாம் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா வரை சென்று சேரக் காரணமானது!

பாரசீகத்ததைச் சேர்ந்த வணிகரான ஜமாலுத்தீன் தனது வணிகப் பயணம் நிமித்தமாகச் செல்லும் போது, மங்கோலிய இளவரசன் துக்ளக்கின் உயர் பாதுகாப்புப் பகுதியான விளையாட்டுத் திடலுக்குள் நுழைந்துவிட்டார். தெரியாமல் நடந்துவிட்ட சம்பவத்துக்கு அவர் கைது செய்யப்பட்டு இளவரசன் முன்பாக நிறுத்தப்பட்டார்.

செங்கிஸ்கானின் பரம்பரையில் உதித்த துக்ளக்கிற்கு பாரசீக முஸ்லிம்கள் என்றால்... விலங்குகளைவிட மட்டமானவர்கள் என்று நினைப்பு! பௌத்தமும், கிருத்துவமும் அவரது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான மதங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த எண்ணத்தாலேயே துக்ளக் ஜமாலுத்தீனை ஏளனமாகப் பார்த்து கிண்டலாகச் சொன்னானர்: "பாரசீகர்களைவிட நாய்கள் எவ்வளவோ மேல்!"

கொஞ்சமும் அச்சப்படாமல் ஜமாலுத்தீன் பதிலளித்தார்:

"உண்மைதான் அரசே! நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியிருக்காவிட்டால்.. தெரு நாய்களைவிட கேவலமாக இருந்திருப்போம்!"

சலனமற்ற இதயத்திலிருந்து அச்சமற்று வெளிப்பட்ட இந்த பதில் துக்ளக்கை சிந்திக்க வைத்தது. இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள அதுவே திருப்புமுனையாக அமைந்தது!


ஜமாலுத்தீன் துக்ளக்குக்கு இஸ்லாம் குறித்து விரிவான முறையில் பரிச்சயம்  செய்தார். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த துக்ளக் ராஜாங்க காரணங்களையொட்டி தனது முடிவை அறிவிக்க சிறிது அவகாசம் கேட்டார். சிறிதுநாள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படியும், தனது வாக்குறுதியை நினைவுறுத்தும்படியும் ஜமாலுத்தீனை அவர் கேட்டுக் கொண்டார்.

ஊர் திரும்பிய ஜமாலுத்தீன் சிறிது நாளிலேயே நோயுற்றார். மரண வேளையில் அவர் தனது மகனான ரஷீதை அழைத்தார். இளவரசர் துக்ளக் குறித்து நடந்தவற்றை விவரித்தார். இஸ்லாம் ஏற்றுக் கொள்வது சம்பந்தமான உறுதிமொழியை அவருக்கு நினைவுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

துக்ளக் அரியணையில் அமர்ந்திருந்த சமயம் அது.

அவரை சந்திப்பது அவ்வளவு எளிதாக இல்லை. கடைசியில் அரண்மனை அருகே தொழுகைக்கான அழைப்பை விடுத்து துக்ளக்கின் கவனத்தை ஈர்த்தார் ரஷீத். அதன் பின் துக்ளக் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு உதவினார். 'துக்ளக் தைமூர் கான்' என்ற பெரும் பிம்பம் வரலாற்றில் பதியக் காரணமானார்.

துன்பங்களும், துயரங்களும் சத்தியத்தை என்றென்றும் சூழ்ந்திருப்பவை! பெரும் மலையிலிருந்து உருண்டுவரும் நீர்வீழ்ச்சியைப் போன்றவை! பாக்தாத், ஆப்கான், நேற்றைய குஜராத் எல்லாமே இறைவனின் சோதனைகள்தான்!

இந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மறுபக்கம் உண்டு என்பதற்கு சாமானியர்களான ஜமாலுத்தீன் மற்றும் ரஷீத் போன்றோரின் அழைப்பியல் வரலாறே சாட்சி!

ஆமாம்! அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் உறுதியுடன் நம்புங்கள்... இது இறைவனின் மார்க்கம்!

வாள் வீச்சுகளையும், துப்பாக்கித் தோட்டாக்களையும், நவீன லேசர் ஆயுதங்களையும் தாண்டி வரலாற்றில் நிலைத்திருக்கும் மார்க்கம்!

கியூபாவின் குவாண்டனாமோ சிறைச்சாலைகளும், ஈராக்கின் அபூகாரிப் சிறைகளையும் தாண்டி மீண்டெழும் மார்க்கம்!

நம்புங்கள் தோழர்களே! இது இறைவனின் மார்க்கம்! படைத்தவனால் தனது படைப்புகளுக்காக அருளப்பட்ட பேரருள் மார்க்கம்!

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html

11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html

12. கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/09/12.html

13. மக்கள் சேவையில் மனம் திளைத்த ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/10/13.html

இறைவன் அழைக்கின்றான்: 'சிந்திப்போருக்கு சான்றுகள்!'


அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 14: அழுதபடியே தொழுத அண்ணல்..!

இந்த மண்ணுலகில் எத்தனை எத்தனையோ மகன்கள், நல்லவர்கள், பெரியோர்கள் தோன்றியிருக்கிறார்கள். மனிதன் ஈடேற்றம் பெறுவதற்கான போதனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நபிகளார் போதனைகளுக்கும் பெருத்த வித்யாசம் உண்டு.

மனிதனின் அகம்-புறம் சார்ந்த முழு வாழ்க்கைக்குமாய் நபிகளாரின் போதனைகள் காணக் கிடைக்கின்றன.

பொது வாழ்வானாலும் அந்தரங்க வாழ்வானாலும் வெள்ளை வெளேர் வானமாய் வரலாற்றில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான போதனைகள் அவை.


ஓர் இரவு இறைத்தூதர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாதி இரவு கழிந்திருக்கும்.

நபிகளார் திடீரென்று விழித்துக்கொண்டார்கள். வீட்டிலிருந்து வெளியில் சென்றார்கள்.

நானும் நபியவர்கள் பின்தொடர்ந்து சென்றேன்.அவர்கள் பக்கத்திலிருந்த பள்ளிவாசலில் நுழைந்தார்கள்.

பயபக்தியோடு ஒரு அடிமையைப் போல.. நின்று தொழ ஆரம்பித்தார்கள்.

நான் வியப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தேன்.

சற்று நேரத்துக்கெல்லாம் பெருமானார் தேம்பி.. தேம்பி அழ ஆரம்பித்தார்கள். தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும் அழுதவாறே இருந்தார்கள்.

வைகறையில், நபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பை விடும் வரை இந்த நிலைமை தொடர்ந்தது. அதன் பின் காலை நேரத்துத் தொழுகைக்கு தலைமைத் தாங்கிவிட்டு.. வீட்டிற்கு வந்தார்கள்.

நபிகளாரின் கால்கள் தடித்து வீங்கி விட்டிருந்தன. பெரு விரல்கள் கிழிந்து நிண நீர் வழிந்து கொண்டிருந்தது.

அவர்களின் நிலையைக் கண்டு நான், “ஓ! இறைவனின் தூதரே, தங்களுக்கு ஏன் இந்த சிரமம்? தங்களின் முன்-பின் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டு விட்டனவே!” – என்று அழுதவாறே கேட்டேன்.

அதற்கு நபியவர்கள், “ஆயிஷாவே, இறைவன் என் மீது பொழிந்துள்ள அருள்வளங்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நல்ல இறையடியானாக நான் இருக்க வேண்டாமா?” – என்றார்கள்.

முஹம்மது நபிகளாரின் (ஸல்) சொந்த வாழ்வைக் குறித்து அவர்களின் துணைவியாரிடம் நபித்தோழர் ஒருவர் கேட்டபோது, அவ்வம்மையார் சொல்லிக் காட்டிய சம்பவமே இது!


 - இறைவன் நாடினால் அருட்கொடைகள் தொடரும்.


 முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html

10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html

11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html

12. குற்றம் குற்றமே!  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html

13 . பாவங்களின் பரிகாரம்  http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html 

Saturday, December 26, 2015

கேலி சித்திரம்: எல்லாம் உனக்குதான்!


 "எனக்குப் பிறகு எல்லாம் உனக்குதான் செல்லம்!"

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 13: பாவங்களின் பரிகாரம்!


பாவங்களுக்குப் பரிகாரம் தேடிச் சென்றால்.. இவர்கள் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பார்கள்! பூஜை புனஸ்காரங்கள்தான் தீர்வு என்பார்கள். மீண்டும் மீண்டும் மடமையில் சிக்க வைப்பார்கள்.

அந்த மனிதர் பாவங்களுக்கான பரிகாரம் தேடி நபிகளாரை சந்திக்க வந்தார். அவருக்கு நபிகளார் எத்தகைய வழிமுறையைக் காட்டினார்கள்.

இதோ.. இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..

அவர் சோகத்துடன் இருக்கிறார் என்பதைப் பார்த்தவுடனேயே சொல்லிவிடலாம்.

உண்மையிலேயே அந்த மனிதரின் உள்ளதில் மலைப்பாறையாய் சோகம் அழுத்திக் கொண்டிருந்தது. வேதனை கடலலையாய் ஆர்ப்பரித்தது. நபிகளாரிடம் அவர் பேசிய பேச்சு, அதை உறுதிப்படுத்தியது.துக்கம் தொண்டையை அடைத்ததால்.. மேற்கொண்டு பேச முடியவில்லை. தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவருக்கு சிறிது நேரம் பிடித்தது. மறுமையில் இறைவன் தன்னை தண்டிப்பான் என்ற இறையச்சம் அவரது உள்ளம் முழுக்க நிறைந்திருந்தது. அவர் துடியாய் துடித்தார். அழுது அரற்றினார்.அந்த மனிதரின் நிலைமை நபிகளாரை பெரிதும் பாதித்தது. "சகோதரரே, உங்கள் தாயார் உயிருடன் இருக்கிறார்களா?"ஆனால், நபிகளாரோ அப்படி நடந்து கொள்ளவில்லை. அந்த மனிதர் செய்த பாவம் என்ன என்பதைக் குறித்தும் கேட்கவில்லை. நபிகளாரின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார்:

நடையில் தள்ளாட்டம். முகத்திலோ பெரும் வாட்டம்.

உடைந்துவிடுவதுபோல தழுதழுத்த குரல். அவர் கவலையோடு நபிகளாரின் திருச்சமூகம் தேடி சென்று கொண்டிருந்தார்.

"இறைவனின் தூதரே, நான் பெரும் பாவம் ஒன்றை செய்துவிட்டேன்...."

"இறைவனின் தூதரே, நான் இறைவனின் கட்டளையை மீறிவிட்டேன். ஆமாம்! நான் இறைவனின் கட்டளையை மீறிவிட்டேன். அய்யகோ, எனது பாவமன்னிப்புக்கு நான் என்ன செய்வேன்? நான் எப்படி இறைவனின் மன்னிப்பைப் பெறுவேன்?"

"... எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? இறைவனின் தூதரே? பாவமன்னிப்பு கிடைக்குமா? நான் மன்னிக்கப்படுவேனா இறைவனின் தூதரே, மன்னிக்கப்படுவேனா?"

மனிதன் தவறிழைப்பது சகஜம்தான்! ஆனால், செய்த தவறை உணர்ந்து.. பாவமன்னிப்புக்காக இறைவனின் பக்கம் திரும்புவதல்லவா மனிதப் பண்பு!

நபிகளாரின் கண்களில் இரக்கம் சுரந்தது. அவரை அனுதாபத்துடன் பார்த்தார்கள். பரிவோடு சொன்னார்கள்:

இறைத்தூதர் தனது பாவச் செயல் குறித்து விசாரிப்பார். இறைவனின் கட்டளையை மீறியது குறித்துக் கோபப்படுவார் என்று வந்தவர் எதிர்பார்த்திருந்தார்.

செய்த தவறை உணர்ந்து பரிகாரம் தேடிவந்தவருக்கு வழி காட்டுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.

"இல்லை இறைவின் தூதரே, எனது தாயார் இறந்து பல ஆண்டுகளாகி விட்டன."

"சரி.. உமது சின்னம்மா அல்லது சித்தி இருக்கிறார்கள் அல்லவா?"

அதைக் கேட்டு அந்த மனிதரின் முகம் மலர்ந்தது.

"ஆமாம்... ஆமாம்.. இறைவனின் தூதரே, எனது சிறிய தாயார் உயிருடன்தான் இருக்கிறார்"

அந்த மனிதருக்கு உள்ளத்தில் நம்பிக்கைப் பிறந்தது. நபிகளார் தனது பிரச்சினைக்கு தீர்வு சொல்ல இருக்கிறார்கள் என அவர் ஆவலுடன் காத்திருந்தார்.

"...நீங்கள் உங்கள் சிறிய தாயார நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அவரது எல்லா தேவைகளையும் தட்டாமல் நிறைவேற்றுங்கள். அவருக்குத் தேவையான பணிவிடைகளை முகம் கோணாமல் செய்து வாருங்கள்.!"

அதைக் கேட்டு பாவமன்னிப்புக்கான வழிதேடி வந்தவரின் மனச்சுமை, பெருமளவில் குறைந்து போனது. அந்த மனிதரின் பாவமன்னிப்புக்கான வழியும் பிறந்தது. நபிகளாரின் அறிவுரையால் அவரது மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.

"நிச்சயமாக... நிச்சயமாக... தாங்கள் சொன்னபடி செய்வேன் இறைவனின் தூதரே!" – உற்சாகம் தாளாமல் அவர் வாய்விட்டே கத்தி விட்டார்.

"... உம்மால் முடிந்த எல்லா பணிவிடைகளையும் உமது சிறிய தாயாருக்கு சிறப்பாக செய்துவாருங்கள். இதன் மூலமாக உமது பாவங்களுக்கு மன்னிப்புக் கிடைக்கும். உமது நல்ல பணிகள் பாவக்கறைகளைப் போக்கிவிடும்!-" என்றார்கள் நபிகளார் கருணையோடு !

தாயின் சேவை இறைவனை மகிழ்விக்கும். பாவங்களைப் போக்கிவிடும் பாவமன்னிப்புக்கான நுழைவாயிலாகிவிடும் என்ற பரிகாரத்தை சமூகத்துக்குள்ளேயே, உறவுகளுக்கள்ளேயே தேடிக்கொள்ளும்படி நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்.

மிகச் சிறந்த இத்தகைய அறிவுரைகளும், அந்த அறிவுரைகளின் மூலமாக சமூகத்தின் அடித்தளங்களான உறவுமுறைகளை முற்படுத்தியதும் இஸ்லாத்தை எதிர்ப்போருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ?


- இறைவன் நாடினால். அருட்கொடைகள் தொடரும்.
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:


2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html

10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html

11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html

12. குற்றம் குற்றமே! : http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html 

Friday, December 25, 2015

வைகறை நினைவுகள் 24: வேட்டைக்காரன்!


சனி, ஞாயிறு விடுமுறைகளைத் தொடர்ந்து இரண்டாம் வகுப்பு படிக்கும் பேரன் அனஸ், வயிற்றுவலி என்று ஒரு காரணம் சொல்லி பள்ளிக்கு போகாமலிருக்க அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.

அவனது அம்மா அதாவது எனது மூன்றாவது மகள், ஆயிஷா அவனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

அவனது காரணங்கள் செல்லுப்படியாகாது! இன்னும் சற்று நேரத்தில், வன்முறை பிரயோகத்தில் அவன் பரிதாபமாக என்னை பார்த்துக் கொண்டே பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வான்.

“நானாஜீ..! நீங்களாகவது எனக்கு உதவக்கூடாதா?” – என்று அவன் விழியாலே பேசுவது எனக்குப் புரியும். விவரிக்க முடியாத மன வலியோடு நான் மௌனமாகிவிடுவேன்.

அழுது கொண்டே பிள்ளைகள் பள்ளிக்கு போவதை நான் விரும்பாதவன். அவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்புவதையும் எதிர்ப்பவன். அதனால், பெரும் சங்கடத்துடன் எனது அலுவலக அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

எவ்வளவு கால மாற்றங்கள்!

ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட எனது தந்தையார் வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது ஜீவனத்துக்காக தையல் தொழிலைத் தேர்ந்தெடுத்திருந்தார். தாயார் மன்னர் காலத்து இராணுவ வீரர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று எனது அம்மாவின் அம்மா அதாவது எனது பாட்டி பெருமையாக சொல்லிக் கொள்வார்.

இந்த இரண்டு ஜமீன்களும், நெற்றி வியர்வைச் சிந்த உழைத்தால்தான் எங்கள் வாழ்வாதாரம் என்ற நிலையில் எனது கல்விப் பயணம் தொடர்ந்தது.

எனது தந்தையார் பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை. தெலுங்கில் கையெழுத்துப் போட மட்டும் தெரியும். ஆனாலும், அவர் என்னைப் படிக்க வைப்பதில் பேரார்வம் காட்டினார்.

அதேநேரத்தில், அவரோ அல்லது எனது தாயாரோ ஒரே ஒருநாள்கூட என்னை பள்ளிச் செல்ல நிர்பந்தப்படுத்தியதே இல்லை. போகமாட்டேன் என்று நான் ஒருநாளும் பொய்க்காரணங்களை, சாக்குப் போக்குகளையும் சொன்னதில்லை.

வீட்டுப் பாடங்கள் எல்லாம், ‘காடா’ விளக்கு வெளிச்சத்தில் செய்ய வேண்டும் அல்லது காய்ந்த சருகுகள், இலைத்தழைகள் எரித்து விடியற்காலையில் கனப்போடு அந்த வெளிச்சத்தில் படிப்பும் தொடரும். உயர் நிலைப்பள்ளி என்று கொஞ்சம் வளர்ந்த நிலையில், ரயில்வே ஸ்டேஷன் மின்விளக்கு வெளிச்சம் பயனாகும்.

எங்கள் வீட்டில், மின்விளக்கு வசதிகள் எல்லாம் இல்லாத காலம் அது. பள்ளி வாழ்க்கை முடிக்கும்வரை இதேநிலைதான்!

அதேபோல, கட்டணம் செலுத்தி டியூஷன் படிக்கும் வசதி இல்லை. அப்போது, கல்வியும் வணிகமயமாகவில்லை.

இந்நிலையில் தலைப்பாகை, முறுக்கு மீசை என்று பாரதியார் தோற்றத்தில், இருகால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான அய்யா ஆசிர்வாதம் பிள்ளைகளுக்கு மாலையில் இலவச டியூஷன் நடத்திக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு செய்தித்தாள் விற்பனைச் செய்யும் ஒரு பங்குக்கு அடியில். வசிப்பிடம் அதுதான். டியூஷன் சென்டரும் அதுதான். அவரிடம் சில காலம் டியூஷன் படித்திருக்கிறேன்.

அப்போது, எண்ணூரில் காமராஜர் நகர் பகுதியில் (அப்போது நில அளவீட்டு எண்ணால் - 21 என்று அழைப்பார்கள்) இந்தப் பகுதியில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. உண்மையில், அது மழை நீர் சேகரிப்புக்கான ஏரி என்று இப்போது புாிந்துகொள்ள முடிகிறது. அந்த குளம் முழுக்க தாமரை படர்ந்து பூத்து குலுங்கும். மீன்கள் உட்பட ஏராளமான நீர் வாழ் உயிரினங்களின் வசிப்பிபடமாக அது இருந்தது. கழிவுநீர் குட்டையாகவும், ஆக்கிரமிப்பில் சுருங்கிப்போயும் இன்றும் அந்த குளம் இருக்கிறது.

ஒரு மாலை நேரம்.

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தால் எனது மாமா தாமரைக் குளத்தில் மீன் பிடிக்க சென்றிருப்பதாக தகவல்.

வீட்டிலிருந்து தண்டவாளத்தைக் கடந்து சற்று சிரமப்பட்டு செல்ல வேண்டிய தொலைவில்தான் குளம் இருந்தது.

அன்றைக்கு டியூஷனுக்கு மட்டம் போட்டுவிட்டு குளத்தை நோக்கி நடந்தேன்.

குளத்துக் கரையில் அமர்ந்து எனது மாமா (அம்மாவின் உடன்பிறப்பு) தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து அவ்வளவு தூரம் ஏன் வந்தேன் என்று கடிந்து கொண்டு பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

சிறிது நேரம் சென்றிருக்கும்.

நான் டியூஷனுக்கு செல்லாததை எப்படியோ தெரிந்து கொண்டு குளக்கரைக்கு வந்துவிட்டார் எனது தந்தையார்.

பிறகு?

பிறகென்ன? கையும் களவுமாய் சிக்கிய திருடனைப் போல என்னை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு டியூஷன் நடக்கும் இடத்துக்கு சென்றார்.

அடியா அது?

நடுரோட்டில், பொது ஜனங்கள் முன்பாக, டியூஷனில், பெண் மாணவிகளின் முன்பாக மிதி மிதி என்று மிதித்து, அடித்து துவைத்துவிட்டார்.

கோபம் வந்தால் அம்மா எனது உடைகளின் ‘தூசு’ தட்டுவார். மற்றபடி சொல்லிக் கொள்வதைப் போல, எனது பெற்றோரிடம் நான் அடிவாங்கியது இல்லை.

என் நினைவில் மறவாமல் பதிந்திருக்கும் அடி, உதை சம்பவம் இது. என்னை நெறிப்படுத்த உதவிய சம்பவம். அடிப்பட்ட அந்த இடங்களை இப்போதும் மென்மையாக நான் வருடி விடுகிறேன். எனது தந்தையாரின் மெல்லிய தேகத்தின் ஸ்பரிசம் தெரிகிறது.

அதன் பின் இத்தகைய ஒழுக்க மீறல்களை நான் செய்ததேயில்லை. மிகச் சிறந்த மாணவனாகவே பெயர் எடுத்திருக்கிறேன். ஆரம்ப பள்ளி நாட்களில், சபாநாயகராக செயல்பட்டிருக்கிறேன். நாடகங்களில் அலெக்ஸாண்டராக நடித்திருக்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளர் என்று பெரும் பொருப்புகளை சுமந்திருக்கிறேன். எனது உயர்வின் அந்தப் பெருமைகளை என் தந்தையாரின் கண்களில் வெளிப்படச் செய்திருக்கிறேன்.

எந்த மீன் பிடி சம்பவத்தால், எனக்கு அடி, உதை கிடைத்ததோ பின்னாளில் நிலைமை அப்படியே மாறி போனது. நான் வளர்ந்த போது எனது தந்தையாரின் மிகச் சிறந்த மீன் பிடி கூட்டாளியாக விளங்கினேன்.

வளையாத மெல்லிய மூங்கில் கழிகளை வாங்கி, நன்றாக சீவி எண்ணெய் தடவி சூட்டில் பதப்படுத்தி குடிசையின் உத்திரத்தில் கல் கட்டி தொங்கவிடுவது. கொடுவா போன்ற மீன் வேட்டைக்காக தடித்த மூங்கில்களை வாங்கி நன்றாக சீவி, நெருப்பில் பதப்படுத்தி பூமியில் பரப்பி பெரிய பாறைகளை வைப்பது. தூண்டில், முள் மற்றும் தக்கைகள், தக்கை எடைக்கான ஈயக் கற்கள் என்று சகலமும் தயாரிக்க கற்றுக் கொடுத்தார் என் தந்தையார்.

ஓய்வு நேரங்களில் தந்தையாரோடு எண்ணூர் கடற்கழிக்கு செல்வேன். எங்கள் வீட்டுக்கு இரவு உணவுக்காக தேவையான மீன்களோடு திரும்புவோம்.

நாளாக… நாளாக.. திறம்பட மீன் பிடிக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன் என்பதெல்லாம் உபரி செய்திகளாகும்.
 
மீன்பிடித்தலுக்கான இந்த வேட்டைத் திறன் மற்றும் காத்திருப்பு பிற்பாடு எனது வாழ்க்கையின் பல துறைகளில் உதவியது.

இறைவன் நாடினால் அடுத்த வைகறை நினைவுகளில் சோவியத் கரடியை கிடுகிடுக்க வைத்த குர்ஆன்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
 வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html

மிலாது சிறப்புக் கட்டுரை: நபிகளாரின் திருச்செய்தி


நபிகளார் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கத்தரிசி என்பது தெரியும். அது சரி… நபிகளார் கொண்டு வந்த செய்திதான் என்ன?

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ். அவர் ‘பைத்துல் முகத்தஸ்’ எனப்படும் ஜெருசலேத்தில் இருந்தபோது, நபிகளார் அவருக்கு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. யாராவது ஒரு அரபியர் கிடைத்தால். அவரிடம் நபிகளார் பற்றிய தகவல்களை விசாரிக்கலாம் என்று அவர் காத்திருந்தார். அப்போது மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார்.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் இப்படி கேட்டார்: “முஹம்மது உங்களிடம் அப்படி என்னதான் கூறுகின்றார்?’

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தார் அபூ சுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் இப்படி சொன்னார்:

 •  “ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வலோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக் கொள்ளவில்லை.
 •     இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும்.
 •     இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் அவனிடமே உதவி கேட்க வேண்டும்.
 •     முன்னோர்களின் கோட்பாடுகளையும், இணைவைப்புச் செயல்களையும் விட்டுவிட வேண்டும்.
 •     தொழ வேண்டும்.
 •     சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.
 •     ஆணும் – பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.
 •     சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
 •     மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!”
நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச் செய்தியின் உள்ளடக்கம் இதுதான்!

‘அம்ரு இப்னு அபஸா’ என்பது அந்த நபித்தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத்தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

    மக்கள் தம் உறவினருடன் இணைந்து வாழ அறிவுறுத்த வேண்டும்!
    இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கை பரப்ப வேண்டும்!
    இறைவனுடன் வேறு எவரையும், எதையும் இணை வைக்கக் கூடாது!

இது போன்ற நோக்கங்களுடன் இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்ப்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது:

"இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும். அதற்கான அடிப்படை …. ‘இறைவன் ஒருவன்’ – என்ற ஏகத்துவமாகும். இறைவனின் அதிகாரத்தில் வேறு எவரது தலையீட்டையும் அனுமதிக்கக் கூடாது! இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக்  கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்"


நபிகளாருக்கு முன் எல்லா இறைத்தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள். அதாவது, ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக் கொள்கையும், மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும் … முதல் இறைத்தூதருமான ஆதிபிதா ஆதம் அவர்களின் சந்ததிகள். சகோதர உறவுமுறை கொண்டவர்கள் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியின் சாராம்சம்.

முகீரா பின் ஷீஃபா மற்றொரு நபித்தோழர்.

ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்!

நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியை தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாராசீக தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித்தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”

 இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாப்பித்திருக்கும் அந்த பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச் செய்தியாகும்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில், 24.12.2015 - மீலாதுன் நபி சிறப்புக் கட்டுரையாக வெளியான எனது ஆக்கம்)

------------------Saturday, December 19, 2015

இஸ்லாம் வாழ்வியல்: ஆட்டுக்கு உணவில்லையென்றாலும்


ஜனாதிபதி உமர், சிரியாவிலிருந்து தலைநகர் மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு குடிசை கண்ணில் பட்டது. காட்டுப்பகுதியில் அமைந்திருந்த அந்தக் குடிசையைக் கண்டதும் அவருக்கு வியப்பு ஏற்பட்டது.

குடிசையின் எதிரே ஒரு மூதாட்டி, சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். குழிவிழுந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும் அவளது ஏழ்மையை பறைச்சாற்றின.

உமர் மூதாட்டிக்கு சலாம் சொன்னார். பேச்சு கொடுத்தார்.

“பாட்டி ஜனாதிபதி உமரை நீங்கள் அறிவீர்களா?”

“எனக்கு உமரையும் தெரியாது! யாரையும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய பிழைப்பே மிக மோசமாக இருக்கும்போது, நான் அவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது?”

மூதாட்டியின் பேச்சில் விரக்தியும், கோபமும் வெளிப்பட்டன.

ஜனாதிபதி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு கேட்டார்.

“பாட்டி! உமர் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் ஏன்?”

“வந்ததிலிருந்து உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பேச்சு உமரையே சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. நான் நீண்ட நாட்களாக இப்படி பசி, பட்டினியோடு செத்துக் கொண்டிருக்கிறேன். உமர் என்னைக் குறித்து கவலைப்பட்டதாகவோ, என் துயர் களைய முயன்றதாகவோ தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, அவர் மீது கோபமும், வெறுப்பும் வராமல் என்ன செய்யும்? மறுமை நாளில் எனக்கு உமருக்கும் இடையில் நடைபெறவிருக்கும் வழக்கை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன்!”

அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி உமர், “பாட்டி, நீங்கள் சிரமப்படுவதையும், உதவி தேவைப்படுவதையும் ஜனாதிபதிக்குத் தகவலாவது தந்தீர்களா?” என்று கேட்டார்.

“என்ன சொல்கிறாய் நீ? என்னுடைய நிலையை நான் தெரிவிக்க வேண்டும் என்றால், ஜனாதிபதியாய் அவர் எதற்கு? இந்தப் பகுதி அவரது ஆளுகைக்கு உட்டதில்லையா? மக்களின் குறைகள் அறிவதும், அவற்றை களைவதும் ஆட்சியாளரின் பொறுப்பல்லவா?” மூதாட்டி கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

“பாட்டி! ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்கள் ஊரைவிட்டு இப்படி காட்டில் தனிமையில் வசித்தால் பாவம் ஜனாதிபதி என்னதான் செய்வார்? பிரச்னை என்னவென்று தெரிவிப்பது உங்கள் பொறுப்புதானே?”

“உனக்கு புத்தி பேதலித்துவிட்டது போலும்! அதுதான் இப்படி பேசுகிறாய்! ஊரைவிட்டு ஒதுங்கிய பகுதி என்றால், உமர் இதை தமது ஆட்சி, அதிகாரத்தில் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும்?”

இதுவரை மூதாட்டியின் கோபமான பேச்சை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி உமரின் விழிகள் குளமாயின. முத்துமுத்தாய் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தமது அதிகாரத்துக்கு உட்பட்ட மக்களின் நலன்கள் குறித்து மறுமையில் இறைவன் கேட்கும் கேள்விக்கு தாம் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற அச்ச உணர்வு அவரை நடுங்கச் செய்தது.

நீண்ட நேரம் அழுதவாறு நின்ற ஜனாதிபதி உமர், “பாட்டி நீங்கள் சொன்னது சரிதான்!” என்று கரகரத்த குரலில் சொல்லிவிட்டு குதிரையேறி புறப்பட்டார்.

அழுகையும், புலம்பலுமாய் அந்தப் பயணம் தொடர்ந்தது.

தலைநகர் மதீனாவை அடைந்ததும் உமரின் முதல் அரசாணை மூதாட்டியின் நிவாரணத்துக்கானதாக இருந்தது. அதன் பிறகுதான் அவரது மனம் சமாதானம் அடைந்தது.

தனது ஆளுகைக்கு உட்பட்ட யூப்ரடீஸ் நதிக்கரையோரம் இருக்கும் ஓர் ஆட்டுக்குட்டிக்கு உணவு கிடைக்கவில்லையெறால்கூட, மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்குமென்று நள்ளிரவுகளில் ஜனாதிபதி உமர் அழுது புலம்பிக் கொண்டிருப்பாராம்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 10.12.2015 அன்று பிரசுரமான எனது கட்டுரை)

Thursday, November 26, 2015

இறைவன் அழைக்கின்றான்: 'நாளைய தினத்திற்காக தயாரா?'

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள்.  மேலும், ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்திற்காக எதனை தயார் செய்து வைத்திருக்கிறான் என்று பார்க்கட்டும்! இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்பவை அனைத்தையும் திண்ணமாக இறைவன் அறிபவனாக இருக்கின்றான்" (திருக்குர்ஆன்)

நிகழ்வுகள்: பந்தாடப்படும் மதச்சார்பின்மை


பருவக்காலம் தொடங்கிவிட்டது. ஆம்..! மதச்சார்பின்மை பருவம் தொடங்கிவிட்டது. எதிர்பார்த்தது போலவே, வியாழக்கிழமை (26.11.2015) தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை கால்பந்தாட்ட களத்தின் பந்தானது.

1949-ஆம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 26) இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததன் நினைவாகவும், சட்டமேதை அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினத்தை ஒட்டியும், மக்களவையில் 2 நாள் சிறப்பு விவாதம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், ‘மதச்சார்பின்மை’ திரித்துப் பொருள்கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்து  அவர் பேசியதாவது:

அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தில் "மதச்சார்பின்மை' "சோஷலிசம்' என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைகளைச் சேர்ப்பது அவசியம் என அம்பேத்கர் கருதவில்லை.

அதன்பிறகு 1976-ஆம் ஆண்டில்தான், 42-ஆவது சட்டத் திருத்தம் மூலமாக, "மதச்சார்பின்மை', "சோஷலிசம்' என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவின் இயல்பிலேயே அமைந்துள்ளது.

ஆனால், "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை தற்போது திரித்துப் பொருள்கொள்ளப்பட்டு, மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

ஏனெனில், "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுவதால், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், சமூக ஒற்றுமையைப் பராமரிப்பது சிரமமாக உள்ளது.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஜாதி, இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பு அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

72 பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்பாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.

அவமதிப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிப்புகளுக்கு ஆளான அம்பேத்கர், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு முறை கூட யோசித்ததில்லை - என்று ராஜ்நாத் சிங் கூறினார்.


இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசுவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தகுதியில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு விவாதத்தின்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசிய உரையின் முக்கிய அம்சங்கள்:

சகிப்பின்மை காரணமாக அண்மையில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

நமது அரசமைப்புச் சட்டத்தின் மீது பாஜகவினர் நம்பிக்கை வைக்கவில்லை. அதை உருவாக்குவதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடுகிறார்கள். அதன் மீது விவாதமும் நடத்துகிறார்கள். இது கேலிக்குரியதாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளும், அதன் தத்துவங்களும் தற்போது அச்சுறுத்தலில் உள்ளன. நமது அரசமைப்புச் சட்டம் நெகிழ்வுத் தன்மை கொண்டது. இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதில், சந்தேகம் ஏதுமில்லை.

ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில், அரசுக்கும், அதன் பிரதிநிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

அரசமைப்புச் சட்டம் சிறப்பாக இருந்தாலும், அதை அமல்படுத்துவோர் தீயவர்களாக இருந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை சட்டமேதை அம்பேத்கர் முன்பே கூறியிருக்கிறார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் கல்வியை முடித்து நாடு திரும்பிய அம்பேத்கரின் தனித்திறமைகளை அறிந்த காங்கிரஸ் கட்சி, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அவரைத் தேர்வு செய்தது.

சிறந்த தலைமை இல்லாதிருந்தால், அரசமைப்புச் சட்டத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கமுடியாது என்று அம்பேத்கரை டாக்டர் ராஜேந்திர பிரசாத் பாராட்டினார் என்றார் சோனியா காந்தி.

மக்களவையில் வியாழக்கிழமை மாலை 7 மணி வரை இந்த விவாதம் நீடித்தது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த விவாதத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை இலக்கியம்: சிறுவர் கதை: 'பொய் சொல்லக்கூடாது பாப்பா!'பொற்கொடியைப் பார்க்க தமிழரசி வந்தாள்.

தமிழ் நோட்டுப் புத்தகம் கேட்டாள்.

தமிழரசிக்கு விருப்பமில்லை. அதனால், அதை "கண்ணகி வாங்கிப் போனாப்பா!" - கூசாமல் பொய் சொன்னாள் அவள்.

"சரி.. சரி.. நீ படிப்பா.. வேறே யாரிடமாவது வாங்கிக்கிறேன்.."

தமிழரசி கேட்டைத் தாண்டியதும், அவள் கேட்ட நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைக்க பொற்கொடி எழுந்தாள்.

அந்த நேரம் பார்த்து, "மாமி! அம்மா ரெண்டு தக்காளி கேட்டாங்க!" - என்றவாறு மீண்டும் வந்தாள் தமிழரசி.

புத்தகம் எங்கே அவள் கண்ணில் படப்போகிறதோ என்று பயந்து போனாள் பொற்கொடி. அவசரம் அவசரமாக அதை சோபாவுக்கு அடியில் தள்ளினாள். நெஞ்சு படபடத்தது; உடல் வியர்த்தது.

தமிழரசி தக்காளி வாங்கிச் செல்லும்வரை பொற்கொடிக்குக்குப்  படிப்பில் கவனம் செல்லவில்லை. சில முக்கியமான பாடங்களுக்கான விடைகளை மறுநாள் வகுப்பாசிரியையிடம் ஒப்புவிக்க வேண்டும். இருப்பினும் அவளது மனம் படிப்பில் முழு ஈடுபாடு கொள்ளவில்லை.

தேவையில்லாமல் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. பொய் சொன்னதற்காக உள்ளம் உறுத்தியது. பேசாமல் தமிழரசி கேட்ட நோட்டைக் கொடுத்திருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

"பொற்கொடி! கொஞ்சம் காலை மேலே தூக்கிக்க! எவ்வளவு தூசி!" - என்றவாறு அம்மா சோபாவுக்கு அடியில் துடைப்பதால் பெருக்க மறைத்து வைத்திருந்த நோட்டுப் புத்தகம் வெளியில் வந்தது.

"இது என்னடி புத்தகம்?"-என்று அம்மா நீட்டவும், "மாமி.. மாமி..!"-என்றவாறு தமிழரசி வரவும் சரியாக இருந்தது.

பதறிப்போன பொற்கொடி, "அதைக் கொடும்மா இப்படி.."- என்று வாங்கிக் கொண்டு உள்ளறைக்கு ஓடினாள். அம்மாவும், தமிழரசியும் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தனர்.

சற்று நேரம் கழித்து வந்த பொற்கொடியிடம் அம்மா, "என்னடி அது?"- என்றாள்.

"ஒன்னுமில்லேம்மா.. இங்கிலீஷ் புக்"-என்று மறுபடியும் பொய் சொன்னாள் பொற்கொடி.

இரவு உணவுக்குப் பின் படிக்கலாம் என்று நினைத்தவளுக்குத் தூக்கம்தான் வந்தது.

அடுத்த நாள்.

பாடங்களைப் படிக்காததால்.. ஆசிரியையிடம் அடி கிடைத்தது.

பொய் சொன்னதால்.. தமிழரசியிடம் சகஜமாக பழக முடி யாமல் போனது.

பொற்கொடி ஒரு பொய் சொன்னாள்.

அந்த ஒரு பொய்யை மறைக்கப் பல பொய்கள் சொல்ல வேண்டிவந்தது.

கூட உடலும்-உள்ளமும் பாதிக்கப்பட்டது.

உண்மை பேசியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது!

அதானல், எப்போதும் நாம் உண்மையே பேச வேண்டும்.

(தினமணிகதிர் குழந்தை இலக்கியத்தில் வெளியான எனது சிறார் கதை)


இஸ்லாம் வாழ்வியல்: கண்ணீர் விட்ட ஒட்டகம்!


மதீனா மாநகரம்!  நகரைச் சுற்றியும் அடர்த்தியான பேரீச்சைத் தோட்டங்கள். சூரிய ஒளி ஊடுருவ முடியாதவாறு பசுங்குடையாய் படர்ந்திருந்தது நிழல். வெய்யிலின் வெம்மை தெரியாத அங்கே பகல் பொழுது ஜிலு.. ஜிலுவென்று குளிர்ச்சியாக இருக்கும்!

மதீனாவாசிகள்  வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்துக்க கொள்ள இத்தகைய மரத் தோட்ட  நிழலில் களைப்பாறுவார்கள். நேரம் போவதே தெரியாமல் பேசி மகிழ்வார்கள்.

ஒருநாள்.

நபிகளார் அவ்வழியே சென்றார். வழியிலிருந்த தோட்டத்தில் நுழைந்தார்.

தோட்டத்தின் ஒரு மூலையில் ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை நபிகளார் கண்டார்.

ஒட்டகம் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. அதனிடமிருந்து பரிதாபமான முனகல் சத்தம் கேட்டது.

நபிகளார் ஒட்டகத்தின் அருகில் சென்றார்.

ஒட்டகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் அழுததன் அடையாளமாக அதன் முகத்தில், தாரைத்தாரையாக ஈரக் கோடுகள் படிந்திருந்தன. எலும்பும்-தோலுமாய்  ஒட்டகம்  மெலிந்து காணப்பட்டது.

இந்தக் காட்சியைக் கண்டதும், நபிகளாரின் மனம் பதறிவிட்டது.  ஒட்டகத்தின் நிலைமை அன்னாரை கலங்கடித்தது.

நபிகளார் ஒட்டகத்தை பரிவுடன் தடவிக் கொடுத்தார். அதன் கண்ணீரை துடைத்து விட்டார்.


அந்த இதமான வருடல் ஒட்டகத்தின் அழுகையை நிறுத்தியது. முணுகலும் நின்று போனது! மகிழ்ச்சி அடைந்ததற்கு அடையாளமாக ஒருவிதமான சத்தத்தையும் எழுப்பியது.

நபிகளார் தோட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தார். "இதன் உரிமையாளர் யார்?" - என்று விசாரித்தார்.

அதைக் கேட்டு ஒட்டகத்தின் உரிமையாளர் நபிகளாரிடம் ஓடோடி வந்தார். "இறைவனின் திருத்தூதரே!  நான் தான் இதன் உரிமையாளன்!" – என்றார்.

ஒட்டகம் சரியான பராமரிப்பு இல்லாமல் மெலிந்திருக்கிறது. அதிக பணிச் சுமைத் தாங்காமல் பலவீனமாகி விட்டது. அதற்கு போதுமான தீவனம் இல்லை. குடிக்கத் தண்ணீரும் வைக்கவில்லை.

நபிகளார் இதை எல்லாம் ஒட்டகத்தின் உரிமையாளரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் ஒட்டகத்திடம் கொடுமையாக நடந்து கொண்ட விதத்தை நபிகளார் சுட்டிக் காட்டினார்.

“இந்த வாயில்லாத ஜீவனான ஒட்டகத்தின் விஷயத்தில் இறைவனின் பயம் உமக்கு ஏற்படவில்லையா?" - என்று கேட்டார்.

கடைசியில், ஒட்டகத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அதன் உரிமையாளரிடம் நபிகளார் அறிவுறுத்தினார்.

ஒட்டகத்தின் உரிமையாளர் தனது தவறை புரிந்து கொண்டார்.

"நான் தவறு செய்துவிட்டேன். நான் எனது தவறுக்காக வருந்துகிறேன் இறைவனின் திருத்தூதரே!" - என்றார் அவர் சோகத்துடன்.

‘எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டு!’ - என்பது நபிகளாரின் செயலுருவ போதனை!

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
(26.11.2015 அன்றைய தி இந்து, ஆனந்த ஜோதியில் பிரசுரமான எனது கட்டுரை)


Tuesday, November 24, 2015

இறைவன் அழைக்கின்றான்: 'நிம்மதி உங்கள் சாய்ஸ்'

 
ஒளி!

ஒளி நிஜமானது. அது இயல்பானது. இயற்கையாக இருப்பது. அது தடுக்கப்பட்டால்.. அந்காரம் அவதரிக்கும். மனிதனுள்ளும், சமூகத்துள்ளும் அந்த காரிருளை விரட்டுவதற்கு ஒளியைச் சுற்றியிருக்கும் திரையை.. தடுப்பை நீக்கிவிட்டால்.. போதும்.. இருள் அகன்று.. ஒளி பிறக்கும்!

மனிதன் இயல்பிலேயே சமூக ஜீவி. நல்லதை விரும்புபவன். தீயதை வெறுப்பவன். அவனுடைய நல்லியல்புகளை போதனைகள்.. பயிற்சிகள்.. சூழல்கள் போஷித்து வளர்க்கின்றன. இல்லாவிட்டால்.. அவை துருப்பிடித்த இரும்பாய் பயனற்றுப் போகும். சில நேரங்களில் அவனை தீமைகளின் பக்கம் இழுத்துச் சென்றுவிடும்.

நல்லவை செழித்து வளரும்போது, மனித வாழ்க்கை நன்மைகளால் பூத்துக் குலுங்கும். சமூகம் முழுக்க அமைதி தவழும். நன்மைகள் நசுக்கப்படும் போது, மேலெழுவது.. வளர்வது.. செழிப்பது தீமைகளே! அதன் விளைவாக உருவாவது நாற்றமெடுக்கும் வாழ்க்கை அமைப்பு. அமைதியை பறிகொடுத்த சமூகம். நிம்மதியைத் தொலைத்துவிட்ட மனங்கள், ஒழுக்கச் சூழல்கள் மாசுபடும்போது தனிநபர் வாழ்விலும், சமூகக் கூட்டு வாழ்விலும் காணக் கிடைப்பது.. செல்வாக்குப் பெறுவது.. கோலோச்சி நிற்பது.. தீமைகளே!

இப்படி தீமைகள் என்னும் காரிருள் நாற்புறமும் சுற்றிச் சூழும் போது, அவை கனத்த போர்வையாய்ப் படர்ந்து இருக்கும் போது.

நன்மைகள் என்னும் ஒளிக்கீற்று கூரான வாளாகி இருட்திரையைக் கிழித்துப் பேரொளிப் பிழம்பைப் பரவச் செய்யும்.

ஒவ்வொரு பொழுதின் உதயமும் இதைத்தான் நமக்கு அறிவிக்கிறது.

மனித வாழ்க்கையில் ஆன்மாவை ஒளிரச் செய்யும் பண்புகள் குறைந்துவிட்டன. மனதைத் தூய்மைப்படுத்தும் சிந்தனைகள் விலகிவிட்டன. அமைதியை உருவாக்கும் வாய்ப்புகள் அருகிவிட்டன. மனங்களுக்கு நிம்மதி அளிக்கும்.. அறியாமை இருளை விலக்கும் .. அறிவொளி தீபத்தை ஏற்றும், வாழ்க்கையை நேர்வழியில் செலுத்தும் வழிமுறைகளே இன்றைய அவசர.. அவசியத் தேவைகள்!

கருணைக் கடலான இறைவன் அந்த முக்கியத் தேவைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திக்கின்றான்; தனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) நபிகளார் மூலம் அருளியிருக்கின்றான்; வான்மறை திருக்குர்ஆன் வடிவில்!

குழப்பமடைந்த இருதயங்களுக்கு அமைதியை.. திருப்தியை.. உண்டாக்கும் வரப்பிரசாதத்தை அதில் குறிப்பிட்டிருக்கின்றான் இதோ!

"அறிந்து கொள்ளுங்கள்! இறைவனை நினைவு கூர்வதில்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன" (13:28)

ஆம்..!

இறைவனைப் போற்றி.. புகழ்ந்து அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தால்தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கிறது.

(01.08.2001 - ஒற்றுமை இதழில் வெளிவந்த எனது ஆக்கம்)

'''''''''''''''''''''''''''''''''''''''''
இதற்கு முந்தைய இணைப்புகளை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 001. இதுவே உன்னத அழைப்பு : http://ikhwanameer.blogspot.in/2015/10/1.html

002. இறையன்பைப் பெற்றுத் தரும் ஒரே வழி: http://ikhwanameer.blogspot.in/2015/11/2.html

Friday, November 20, 2015

மாற்றான் தோட்டத்து மல்லிகை: பாரீஸ் பயங்கரம் சொல்லும் பாடம்

"அதற்கான முதல் நடவடிக்கை நா காப்பது. மத உணர்வுகளைக் கொம்பு சீவி விடும் விதத்திலோ, மற்ற மதத்தினர் ஆத்திரமோ, அச்சமோ கொள்ளும் வகையிலோ பொது அரங்கில் கருத்துகள் உதிர்க்காமல் இருப்பது நாட்டிற்கு நல்லது. அச்சம், ஆத்திரம், ஆணவம் இவைதான் பதற்றத்தின் விதைகள். 

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கலாசாரக் காவலர்கள், ஊடகங்கள், அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். அவர்களிடம் அப்பாவிப் பொதுமக்களாகிய நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல், சற்று வாயை மூடிக் கொண்டிருங்கள்." - மாலன்

'''''''''''''''''''''''' 

தமிழகம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் செய்திகள் நாளிதழ்களை நனைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஊடகங்களுக்குக் கிடைத்த ஒரு சூடான செய்தி பாரீஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல். ஏழாண்டுகளுக்கு முன், 2008-ஆம் ஆண்டு இதேபோல ஒரு நவம்பர் மாதத்தில், சென்னையை நிஷா புயல் அச்சுறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாரீஸ் சம்பவத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டு இடங்களிலும் அரசியல் பகைமையின் காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மும்பையில் மக்கள் பெருமளவில் வந்து போகும் ரயில் நிலையத்தில், பாரீஸில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த விளையாட்டரங்கில், உணவகத்தில், அரசியலின் பெயரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல, சாதாரணப் பொதுமக்கள்தான்.

இந்த இரு தாக்குதல்களும் எல்லைகளுக்கு அப்பால் இருந்து வந்தவர்களால் நிகழ்த்தப்பட்டன. இரண்டிற்குப் பின்னாலும் பெரிய அளவில் நுட்பமான திட்டமிடல் இருந்தது. இந்தத் தாக்குதல்களை அரங்கேற்றிய அமைப்புகள்தான் வேறு வேறு. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானால் ஏவி விடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். பாரீஸில் தாக்குதல் நடத்தியவர்கள், தங்களைத் தனி அரசு என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ். அமைப்பு.

பாரீஸ் சம்பவங்களுக்கு, மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்குமிடையே நிகழ்ந்து வரும் மோதல்தான் காரணம் என்ற போதிலும், மும்பை சம்பவத்தை நினைவில் கொண்டு பார்க்கும் போது, இந்தியாவுக்கும் ஓர் எச்சரிக்கை அதில் புதைந்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். என்ன அந்த எச்சரிக்கை மணி?

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை பத்தாண்டுகளுக்கு மேல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவை நடத்தி வந்த போதிலும், அவை எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை. மாறாக, வெட்ட வெட்ட முளைக்கிற மயில்ராவணன் தலை போல, அது கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் வெளிப்பட்டிருக்கிறது.

2001-இல் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடங்கியது. ஆனால், 2004-இல் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் தாக்குதல் (191 பேர் பலி), 2005-இல் லண்டன் (இருமுறை), 2006 ஸ்பெயின் (7 முறை), 2007 அல்ஜீரியா, 2008 மும்பை, 2009 பெஷாவர், லாகூர் (பாகிஸ்தான்), 2010 மாஸ்கோ (ரஷியா), 2011 நார்வே, 2012 பிரான்ஸ், 2014 சிட்னி, ஆஸ்திரேலியா, பிரஸ்ஸல்ஸ், போர்ச்சுகல் என ஆண்டுதோறும் அது எங்கேனும் தலைவிரித்தாடியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், பயங்கரவாதம் என்பது ஓர் அரசுக்கெதிராக ஒரு நாட்டிற்குள் நடக்கும் கொரில்லா வகைத்தாக்குதல் என்ற நிலையிலிருந்து, எந்த நாட்டிலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று மாறிவிட்டது. அரசுகளுக்கு மாறாக அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைப்பதன் மூலமாக அச்சத்தையும், பதற்றத்தையும் பரப்பவேண்டும் என்று அதன் நோக்கமும் மாறிவிட்டது.

பாரீஸ் தாக்குதல்களை இந்தவிதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். அதை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், சிரியாவை நோக்கிப் பயணிக்க வேண்டும். மேற்காசியாவில் உள்ள சிரியா, நெடிய வரலாறும் சிறிய பரப்பளவும் கொண்ட நாடு. அங்குள்ள டெமாஸ்கஸ் நம் மதுரையைப் போல் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று.

9,000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அங்கு மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன (மதுரையில் கி.மு.500-லிருந்து வாழ்ந்து வருகிறார்கள்).

மேற்கே மத்தியதரைக் கடல், லெபனான், கிழக்கே இராக், வடக்கே துருக்கி, தெற்கே ஜோர்டான் ஆகியவற்றால் சூழப்பட்ட தேசம். மக்கள்தொகை இரண்டு கோடிக்கும் கீழ். வளமான மலைகளும், சமவெளிகளும், அதேசமயம் பாலைவனங்களும் கொண்ட நாடு.

இந்தியாவைப் போலவே பல இனத்தவர்களும் பல மதத்தவரும் வாழ்கிறார்கள். அரேபியர்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், துருக்கியர்கள், அசிரியர்கள், குர்துகள் எனப் பல இனத்தவர்களின் வாழ்விடமாக இருந்து வருகிறது சிரியா. இந்தியாவின் சிந்து வெளி நாகரிகத்தைப் போலவே, தொன்மையான நாகரிகமான மெசபடோமிய நாகரிகம் தோன்றித் தழைத்த நாடு.

செல்லம் கொடுத்து வளர்க்கும் குழந்தை தறுதலையாகும். செல்லம் கொடுக்காமல் வளர்க்கும் குழந்தை ரவுடியாகும். ஜனநாயகத்தால் கெட்ட நாடு இந்தியா. ஜனநாயகம் இல்லாமல் கெட்ட நாடு சிரியா.

பாஷா(ர்) அல் அசாட் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். அதற்கு முன் அவரது தந்தை 30 ஆண்டுகள் அதிபராக இருந்து வந்தார். அதிபர் என்று சொன்னாலும் அங்கு ஜனநாயகம் இல்லை. 1963-லிருந்து 2011 வரை தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் நெருக்கடிநிலை அமலில் இருந்தது.

அதிக சுதந்திரம் கோரி ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரம் சிறு குழுக்கள் அரசுக்தெதிராகப் போராடி வருகின்றன. அவர்களுக்குப் பொதுவான அமைப்போ, தலைமையோ கிடையாது.

2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அவர்கள் செய்த குற்றம், அரசுக்கெதிரான வாசகங்களை சுவரில் கிறுக்கியது. அதைக் கண்டித்து மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. நான்கு பேர் இறந்து போனார்கள். அவர்களது இறுதிச் சடங்கின் போதும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இனிப் பொறுப்பதில்லை என்று மக்கள் ஆயுதம் ஏந்தியப் போராட்டத்தில் இறங்கினார்கள். நாடெங்கும் ரத்தக் களறி.

ஒரு கட்டத்தில் இந்த உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தியது யார் என்பது குறித்த பட்டிமன்றம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அரசுத் தரப்புத்தான் பயன்படுத்தியது என்பது கிளர்ச்சியாளர்களின் குற்றச்சாட்டு, இல்லவே இல்லை என்கிறது அரசு.

இந்தக் குழப்பங்களுக்கிடையே 2014-இல், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் சிலவற்றை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதை மேலும் முன்னேறவிடாமல் தடுக்க, 2014 செப்டம்பரில் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை விமானத் தாக்குதல்கள் நடத்தின.

முன்னொரு காலத்தில் அதாவது, முதலாம் உலகப் போரின்போது பிரெஞ்சுச்காரர்கள் பிடியில் இருந்த நாடு சிரியா என்பதால், பிரான்ஸ் இந்தத் தாக்குதலில் முன்னிலை வகித்தது.

இவற்றால் எல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்கள். குறிப்பாகக் குழந்தைகள். பாதிக்கப்பட்ட மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள். சுமார் 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்குக் குடிபெயர்ந்திருப்பதாக ஒரு கணக்குச் சொல்கிறது. 80 லட்சம் பேர் சிரியாவிற்குள்ளேயே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

பாரீஸில் நிகழ்ந்த பயங்கரவாதம் சிரியாவில் தலையிட்ட பிரான்ஸிற்குக் கொடுக்கப்பட்ட பதிலடி என்கிறார்கள். சம்பவத்திற்குப் பின்னால் சிரியா நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். அமைப்பினர் உள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் சிரிய நாட்டு கடவுச் சீட்டுகள் இருந்தன.

இது வெறும் பயங்கரவாதச் செயல் அல்ல. எங்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். இதற்கு இரக்கமின்றி பதிலடி கொடுப்போம் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதுவரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எதிர்பார்த்த பலன்களை அளிக்காத நிலையில், இந்தப் புதிய இரக்கமற்ற போர் வேறு பல நாடுகளில் பயங்கரவாதச் சம்பவங்கள் நடக்கவே வழி வகுக்கும்.

ஐ.எஸ். அமைப்பின் எதிரிகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போல நம்மிடம் வலுவான உளவறியும் அமைப்பு இல்லை என்பது யதார்த்தம். ஏற்கெனவே பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவில் நடந்தேறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதற்கான முதல் நடவடிக்கை நா காப்பது. மத உணர்வுகளைக் கொம்பு சீவி விடும் விதத்திலோ, மற்ற மதத்தினர் ஆத்திரமோ, அச்சமோ கொள்ளும் வகையிலோ பொது அரங்கில் கருத்துகள் உதிர்க்காமல் இருப்பது நாட்டிற்கு நல்லது. அச்சம், ஆத்திரம், ஆணவம் இவைதான் பதற்றத்தின் விதைகள்.

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கலாசாரக் காவலர்கள், ஊடகங்கள், அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். அவர்களிடம் அப்பாவிப் பொதுமக்களாகிய நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல், சற்று வாயை மூடிக் கொண்டிருங்கள்.

இது அச்சத்தினால் எழுந்த வேண்டுகோளாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை.

செல்லம் கொடுத்து வளர்க்கும் குழந்தை தறுதலையாகும். செல்லம் கொடுக்காமல் வளர்க்கும் குழந்தை ரவுடியாகும். ஜனநாயகத்தால் கெட்ட நாடு இந்தியா. ஜனநாயகம் இல்லாமல் கெட்ட நாடு சிரியா.

நன்றி: தினமணி (20.11.2015)